TNPSC – TET – யாப்பிலக்கணம்

TNPSC – TET – யாப்பிலக்கணம்

           செய்யுள் இயற்றும் முறையைப் பற்றிக் கூறும் இலக்கணம் “யாப்பிலக்கணம்” எனப்படும். எலும்பு, தசை, நரம்பு முதலியவற்றால் கட்டப்பெற்றதை யாக்கை அல்லது உடம்பு என்பது போல எழுத்து, அசை, சீர், தளை, அடி முதலியவற்றால் கட்டப்பெற்றது ‘யாப்பு’ (செய்யுள்) எனப்பெற்றது. யாப்பு கட்டுதல், யாப்பு, செய்யுள், பாட்டு, பா, கவிதை என்பன ஒரு பொருள் தரும் பல சொற்கள். யாப்பு அல்லது செய்யுளின் உறுப்புகள் ஆறு. அவை: எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்பன ஆகும்.

அ. எதுகை மோனை

      மோனைத் தொடைகள் அடி மோனை, இணை மோனை, பொழிப்பு மோனை, ஒரூஉ மோனை, கூழை மோனை, மேற்கதுவாய் மோனை, கீழ்க்கதுவாய் மோனை, முற்றுமோனை என எட்டு வகைப்படும்.

1. அடிமோனை

“சொல்லுக சொல்லிற் பயனுடைய; சொல்லற்க

 சொல்லிற் பயனிலாச் சொல்”.

இஃது அடிதோறும் வரும் முதற்சீரின் முதலெழுத்து ஒன்றிவரும் அடி மோனை.

2. இணை மோனை

“வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

 யாண்டும் இடும்பை இல”.

இது முதல் இருசீர்களில் (1, 2) வரும் இணை மோனை

3. பொழிப்பு மோனை

“பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்”.

இது முதற்சீரிலும் மூன்றாவது சீரிலும் (1,3) வரும் பொழிப்பு மோனை.

4. ஒரூஉ மோனை

“நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்”. இது முதற்சீரிலும் நான்காம் சீரிலும் (1,4) வரும்  ஒரூஉ மோனை.

5. கூழை மோனை

“வசையொழிய வாழ்வாரே வாழ்வார்; இசையொழிய

வாழ்வாரே வாழா தவர்”. இஃது ஈற்றுச் சீரொழிய ஏனைய மூன்று சீர்களிலும்

(12,3) வரும் கூழை மோனை (கூழை-ஈறிலி).

6. மேற்கதுவாய் மோனை

“உதவி வரைத்தன்று உதவி; உதவி

செயப்பட்டார் சால்பின் வரைத்து”.

இஃது இரண்டாம் சீரொழிந்த ஏனைய மூன்று சீர்களிலும் (1,3,4) வரும் மேற்கதுவாய் மோனை. (கதுவாய் – குறைகை).

7. கீழ்க்கதுவாய் மோனை

 “இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

  பொருள் சேர் புகழ்புரிந்தார் மாட்டு”. இது மூன்றாம் சீரொழிந்த ஏனைய மூன்று சீரிலும் (1,2,4) வரும் கீழ்க்க துவாய் மோனை.

8. முற்றுமோனை

  “பெற்றார் பெறிற்பெறுவர் பெண்டிர் பெருசிறப்புப்

  புத்தேளிர் வாழும் உலகு”. இது நான்கு சீரிலும் (1, 2, 3, 4) வரும் முற்றுமோனை

இவை எட்டும் முதற்சீரிலிருந்து எண்ணப்படும்.

தொடை

          ‘தொடை’ என்பது ‘தொடுக்கப்படுவது’ எனப் பொருள்படும். மலர்களைத் தொடுப்பது போலவே, சீர்களிலும் அடிகளிலும் மோனை முதலியன அமையத் தொடுப்பது தொடை எனப்படும்.

          பாவின் ஓசையின்பத்திற்கும் சிறப்புக்கும் இத்தொடையுறுப்பு வேண்டுவதாகும். ‘தொடையற்ற | பாட்டு நடையற்றுப் போகும்’ என்பது பழமொழி. தொடை ஐந்து வகைப்படும். அவை, (அ) மோனைத் தொடை, (ஆ) எதுகைத்தொடை, (இ) முரண் தொடை, (ஈ) இயைபுத் தொடை, (உ) அளபெடைத்தொடை ஆகும். இவை தவிர, ‘செந்தொடை, இரட்டைத்தொடை, அந்தாதித்தொடை’ என்னும் தொடைகளும் உண்டு,

மோனைத் தொடை

        செய்யுளில் முதலெழுத்துக்கள் ஒன்றி வருவது மோனை எனப்படும். (மோனை – முதன்மை).

     “இல்லதென் இல்லவள் மாண்பானால்? உள்ளதென்

       இல்லவள் மாணாக் கடை?”

     இக்குறட்பாவில் முதலடி முதற்சீரிலுள்ள முதலெழுத்தும், இரண்டாமடிமுதற்சீரிலுள்ள முதலெழுத்தும் ஒன்றி வந்தன. அடிகளில் முதலெழுத்து ஒன்றி வந்ததால், இஃது அடி மோனை எனப்படும்.

    “கற்க கசடறக் கற்பவை கற்றபின்

      நிற்க அதற்குத் தக”.

    இக்குறட்பாவில் முதலடி முதற்சீரின் முதலெழுத்து அதே அடியில் பின் வரும் மூன்று சீர்களிலும் முதலெழுத்தாய் ஒன்றி வந்துள்ளது. இவ்வாறு முதலெழுத்து சீர்களில் ஒன்றி வந்ததால் இது சீர் மோனை அல்லது வழி மோனை எனப்படும். இம்மோனைகள் செய்யுளில் ஓசை நயம் கருதி அமைவனவாம்.

எதுகைத் தொடை

“நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

  மறைமொழி காட்டி விடும்”.

இக்குறட்பாவில் இரண்டு அடிகளிலும் முதற்சீரின் இரண்டாவது எழுத்து ஒன்றி வந்தது, எதுகை எனப்படும். முதலெழுத்து அடிதோறும் அளவொத்திருக்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகைத் தொடையாகும். இங்கே அடிதோறும் வந்ததால், இது அடியெதுகையாம். (அளவொத்திருத்தல் – மாத்திரை அளவில் ஒத்திருத்தல்)

 “சொல்லுக சொல்லிற் பயனுடைய; சொல்லற்க

 சொல்லிற் பயனிலாச் சொல்”.

    இக்குறட்பாவின் முதலடியில் மூன்றா சீரொழிந்த ஏனைய மூன்று சீர்களிலும் இரண்டாம் எழுத்து ஒன்றி வந்திருப்பது சீரெதுகையாகும். இதனை ‘வழியெதுகை’ என்றும் வழங்குவர்.

     எதுகைத் தொடையும் மோனைத் தொடை போல எட்டு வகைப்படும். அவை ‘அடியெதுகை, இணையெதுகை, பொழிப்பெதுகை, ஒரூஉ எதுகை, கூழையெதுகை, மேற்கதுவாய் எதுகை, கீழ்க்கதுவாய் எதுகை, முற்றெதுகை’ என்பனவாம். (வழி எதுகைத்தொடை அளவடியிலேயே கொள்ளப்படும்.)

  1. அடியெதுகை

“நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்

என்றும் இடும்பை தரும்”,

இஃது அடிதோறும் முதற்சீரின் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றி வரும் அடியெதுகை.

  • இணையெதுகை

 “செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்

வானகமு மாற்றல் அரிது”.

இஃது ஓரடியில் முதல் இரு சீர்களில் (1, 2) வரும் இணையெதுகை.

  • பொழிப்பெதுகை

 “தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

 தோன்றலின் தோன்றாமை நன்று”.

இஃது ஓரடியில் முதற் சீரிலும், மூன்றாவது சீரிலும் (1, 3) வரும் பொழிப்பெதுகை.

  • ஒரூஉ எதுகை

 “அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து

  நல்விருந்து ஓம்புவான் இல்”.

இஃது ஓரடியில் முதற்சீரிலும் நான்காம் சீரிலும் (1, 4) வரும் ஒரூஉ எதுகை.

  • கூழை எதுகை

“பற்றுக பற்றற்றான் பற்றினை, அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு”. இஃது ஓரடியில் முதல் மூன்று சீரிலும் (1, 2, 3) எதுகை வரும் கூழை எதுகை.

  • மேற்கதுவாய் எதுகை

   “நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல(து)

   அன்றே மறப்பது நன்று”.

ஓரடியில் இரண்டா சீரொழிந்த ஏனைய மூன்று சீர்களிலும் (1,3,4) வருவது, மேற்கதுவாய் எதுகை.

  • கீழ்க்கதுவாய் எதுகை

“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்”.

ஓரடியில் மூன்றா சீரொழிந்த ஏனைய மூன்று சீர்களிலும் (1,2,4) வருவது கீழ்க்க துவாய் எதுகை

  • முற்றெதுகை

 “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை”.

ஓரடியில் நான்கு சீர்களிலும் (1,2,3,4) எதுகை வருவது முற்றெதுகை. இவை தவிர இனவெதுகை, வருக்கவெதுகை, ஆசெதுகை, நெடிலெதுகை எனப் பலவகை எதுகைத் தொடைகளும் உள.

இயைபுத் தொடை

          ஓரடியின் ஈற்றுச் சீரின் ஈற்றெழுத்தோ, சொல்லோ அடுத்த சீர்களிலும் ஈற்றெழுத்தாக, ஈற்றுச் சொல்லாக அமையத் தொடுப்பது சீர் இயைபுத் தொடை எனப்படும். ஓரடியின் ஈற்றெழுத்தோ, சொல்லோ, அடுத்த அடிகளிலும் ஈற்றெழுத்தாகவோ, ஈற்றுச் சொல்லாகவோ, அமையத் தொடுப்பது அடி இயைபுத் தொடை எனப்படும். சந்தப் பாடல்களில் அடி இயைபு முக்கியமாகக் கொள்ளப்படும். (எ.டு.) “மொய்த்துடன் தவழும் முகலே பொழிலே

              மற்றதன் அயலே முத்துறழ்மணலே”

ஈற்றுச் சீரின் ஈற்றெழுத்து அதே அடியில் இரண்டாம் சீரிலும், இரண்டாம் அடியில் மூன்றாம் சீரிலும் ஒன்றி வரத் தொடுத்தமை சீரியைபுத் தொடையாம்.

“இன்னகைத் துவர்வாய்க் கிளவியும் அணங்கே

நன்மாமேனிச் சுணங்குமா ரணங்கே”

      இரண்டடிகளிலும் அணங்கே என்று ஈற்றுச்சீர்  ஒன்றிவரத் தொடுத்தமை அடியியைபுத் தொடையாம்.

இலக்கணப் போலி

          பொருள் மாறுபடாமல் ஓரெழுத்து இருக்க வேண்டிய இடத்தில் வேறோர் எழுத்து வருதல் போலியாகும். ஒரு சொல்லின் முதல், நடு, கடைசி என்ற மூன்று இடங்களிலும் போலி எழுத்துக்கள் வரும். சொல் முழுவதும் எழுத்துக்கெழுத்து போலியாகியும் வரும்.

மஞ்சு – மைஞ்சு, ஐம்பது – அம்பது – முதற்போலி

நிலம் – நிலன், திறம் – திறல் – கடைப்போலி

அரசு – அரைசு, நேயம் – நேசம் – இடைப்போலி

ஐந்து – அஞ்சு, வைத்த – வச்ச – முற்றுப்போலி

ஒருபொருட் பன்மொழி

இலக்கணம் : ஒரு பொருள் தரும் இரண்டு சொற்கள் சேர்ந்து வரும் பொருட்சிறப்பைத் தருவது “ஒரு பொருட் பன்மொழி” எனப்படும். (எ.டு). குழிந்தாழ்ந்தகண் (குழிந்து, ஆழ்ந்த)

மீமிசை ஞாயிறு (மீ, மிசை)

 இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர்

மரக்கிளை சடசட என முறிந்தது.

தலைவரை மக்கள் ‘வருக, வருக’ என வரவேற்றனர்.

இரட்டைக்கிளவி

     பூ இரட்டை, இலை இரட்டை போலப் பிரிக்க முடியாத இரு சொற்கள் சேர்ந்து வருவது “இரட்டைக் கிளவி” எனப்படும். பிரித்தால் பொருள் தராது.

அடுக்குத் தொடர் :

    ஒரு சொல், விரைவு, வெகுளி, தெளிவு, அச்சம், உவகை முதலியன காரணமாக, இரண்டு அல்லது மூன்று முறை அடுக்கி வருவது “அடுக்குத் தொடர் ” எனப்படும். இதனைப் பிரித்தாலும் பொருள் தரும்.

 (எ.டு.) பளபள என மின்னியது.

 சலசல என ஓடியது – இரட்டைக்கிளவிகள்.

பாம்பு பாம்பு என அலறினான். –  அடுக்குத் தொடர்

DOWNLOAD PDF – Click Here

Leave a Comment