இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா உறுதியளித்துள்ளார்.
பாஜக ஆளும் இமாச்சல பிரதேசத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த பிரியங்கா, வெள்ளிக்கிழமை சோலான் மாவட்டத்தில் உள்ள மாதா சோலினி கோவிலில் பிரார்த்தனை செய்தார். இதையடுத்து அவர் இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கினார்.
அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் கூறியதாவது: இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின் நடக்கும் முதல் அமைச்சரவை கூட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்படும். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் நலன்களைப் பாதுகாக்க ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், இமாச்சல பிரதேச காங்கிரஸ் தலைவர் பிரதீபா சிங் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இமாச்சலப் பிரதேசத்தின் உனா மற்றும் சம்பா பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை பங்கேற்று பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். அடுத்த நாளே அந்த மாநிலத்தில் பிரியங்கா பிரசாரத்தை தொடங்கினார்.