கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்கள் அரசாணை நெறிமுறைகளைப் பின்பற்ற உத்தரவு

கல்வியாண்டின் இடையில் ஆசிரியர்கள் ஓய்வு பெறும்போது, அது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில் கூறிய நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

     தொடக்கக் கல்வித் துறையின் கீழ் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் வயதை அடையும்போது, பணி ஓய்வில் செல்ல அனுமதிக்கப்பட்டால் கல்வியாண்டு முடியும் வரை பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்படும். இதைத் தவிர்ப்பதற்காக ஆசிரியர்கள் தேவைப்படும் பள்ளிகளில் மட்டும் கல்வியாண்டின் கடைசி வேலைநாள் வரை மறு நியமனம் வழங்கலாம் என அரசாணை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     நிதியுதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் இருப்பின் ஓய்வு பெறும் நாளன்றே பணி விடுப்பு செய்ய வேண்டும். கூட்டு மேலாண்மையின் கீழ் செயல்படும் பள்ளிகளாக இருப்பின், அந்த மாவட்டம் முழுமையும் ஒரே அலகாகக் கருதப் படவேண்டும்.

எடுத்துக்காட்டாக ஒரு மாவட்டத்தில் கூட்டு மேலாண்மையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களில் ஒட்டு மொத்த எண்ணிக்கை 500 இருந் தால், இவற்றில் 80 ஆசிரியர்கள் உபரி இடைநிலை ஆசிரியர்கள். இதில் ஜூலை மாதத்தில் 5 ஆசிரியர்கள் ஓய்வு பெறுகிறார்கள் எனக் கொண்டால் அந்த ஐந்து ஆசிரியர்களுமே ஜூலை மாதத்திலேயே பணி விடுப்பு செய்யப்பட வேண்டும். அந்தப் பணியிடம் ஏற்கெனவே குறிப்பிட்டவாறு தேவையான பணியிடமாக இருப்பின், மீதம் உபரியாக உள்ள 75 ஆசிரியர்களில் இருந்து ஆசிரியர்களை பணி நிரவலில் நியமித்து காலியாகும் பணியிடங்களை பொதுத் தொகுப்புக்கு சரண் செய்தல் வேண்டும். இவ்வாறு அனைத்து உபரி ஆசிரி யர்களும் சமன் செய்யும் வரை மறு நியமனம் வழங்காமல் ஆசிரியர்கள் விடுவிக்கப்படவேண்டும்.

     கூட்டு மேலாண்மையின் கீழ் செயல்படாத பள்ளியாக இருந்து, தனிப் பள்ளியாக இருக்கும் பட்சத்தில், தேவை ஏற்படின் மட்டுமே மறு நியமனத்தை வழங்க முடியும். முடிந்த வரை அந்த மாதமே ஓய்வு பெற அனுமதித்து விட்டு வேறு பள்ளிகளில் இருந்து பணி நிரவல் மூலமாக நியமித்தல் வேண்டும். அதன்பின் பணியிடங்கள் சரண் செய்யப்பட வேண்டும். மேலும், இது தொடர்பாக அரசாணையில் இடம்பெற்றுள்ள நெறி முறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment