தேர்வுகள் இருவகை – வெ.இறையன்பு

தேர்வுகள் இருவகை – வெ. இறையன்பு

இரண்டு வகைத் தேர்வுகள்

1. போட்டித் தேர்வுகள் (Competitive Exams)

2. பொதுத் தேர்வுகள் (Public Examinations)

         தேர்வுகளை போட்டித் தேர்வுகள் (Competitive Exams), பொதுத் தேர்வுகள் (Public Examinations) என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

       போட்டித் தேர்வுகள் என்பவை பொதுவாக பணிகளை நிரப்புவதற்காக நடத்தப்படுபவை. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், வங்கித் தேர்வுகள் போன்றவை எல்லாம் போட்டித் தேர்வுகள். All India Civil Services (அகில இந்திய குடியுரிமைத் தேர்வுகள்), பிராந்தியக் குடியுரிமைத் தேர்வுகள் ஆகியவை  இந்த  வகையில்  சேரும்.

          போட்டித் தேர்வுகளில் குறிப்பிட்ட மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி என்பது இல்லை. ஒதுக்கப்படுகின்ற அல்லது காலியாக இருக்கிற பணியிடங்களுக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட எண்ணிக்கைக்குள் ஒன்றைப் பெறவேண்டும். போட்டித் தேர்வில் வெற்றி, தோல்விதான் இருக்கிறதே தவிர தேர்ச்சி, தேர்ச்சியின்மை என்பது கிடையாது. ஆக, நாம் வெற்றி பெறுவது என்பது  மற்றவர்கள் எப்படித் தேர்வு  எழுதுகிறார்கள்  என்பதையும்  பொறுத்ததுதான். மற்றவர்களைக்  காட்டிலும் சிறப்பாக எழுதினால் தான் போட்டித் தேர்வில் வெல்ல முடியும். குதிரைப் பந்தயத்தில் இரண்டு குதிரைகள் ஒரே நேரத்தில் எல்லைக் கோட்டைத் தொட்டாலும் புத்திசாலி குதிரைகள்  மூக்கை  நீட்டி முன்னால் வருவதைப் போன்ற விழிப்புணர்வு தேவைப்படுகிறது.

         பொதுத் தேர்வு என்பது பள்ளி இறுதி, கல்லூரி ஆண்டு இறுதி ஆகியவற்றில் நடத்தப்படுகிறது. இதில் நம் வெற்றி மற்றவர்களுடைய வெற்றிக்கு முரணானது அல்ல. எல்லோரும் 100 மதிப்பெண் எடுத்து முதலிடத்தைப் பெறுவதற்குத் தடை ஏதும் கிடையாது.

தேர்வு வழிமுறைகளைப் பொறுத்தவரை இரு விதங்கள் உண்டு .

1. கழித்தல் மதிப்பெண்க ள் (Negative)

2. கூட்டல் மதிப்பெண்க ள் (Positive)

         தவறாக எழுதப்படுகின்ற ஒவ்வொரு விடைக்கும் அதற்குண்டான மதிப்பெண்களை அதுவரை பெற்றிருக்கின்ற மதிப்பெண்களிலிருந்து கழித்து மொத்த மதிப்பீடு செய்வது என்பது Negative Marks என்று கூறப்படுகிறது. இம் மாதிரி வழிமுறை  வங்கித் தேர்வுகளில் கடைப்பிடிக்கப்படுகின்றது.  சிலருக்கு இந்த நடைமுறையில் மொத்த மதிப்பெண்கள் மைனஸாகவே இருப்பதுண்டு. இதன் நியாயம் என்னவென்றால் ஒரு கேள்விக்குத் தவறான விடையளிக்கும் போது இன்னொரு கேள்வியும் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது  என்பதுதான். பொதுத் தேர்வுகளுக்கு  இம்முறை  பொருந்தாது.

பொதுத் தேர்வைப் பொறுத்தவரை

1. Objective Type  (சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் முறை)

2. Subjective Type (கட்டுரை வடிவில் விடையளிக்கும் முறை ) என இருவிதமான கேள்விகள் கேட்கப்படுகின்றன.

        Objective Type என்று சொல்கிறபோது  ஒரே வரியில்  பதில் சொல்வதாக பதில் அமைந்திருக்கிறது.  Fill in the blanks (கோடிட்ட  இடங்களில்  நிரப்புக) Match the Following (பொருத்துக) Multiple Choice (ஏதேனும் ஒன்றிற்கு விடையளித்தல்) போன்ற  கேள்விகள்  இந்த வகையைச் சார்ந்தவை.  விடைகளை  விரிவாக விளக்கி  எழுதுவதாக  அமைந்திருக்கும்.  தேர்வு முறையை Subjective Type என்று அழைக்கிறோம்.

சொற்திறனை இரண்டு விதமாகப் பிரிக்கலாம்.

1. உபயோகிப்பு சொற்திறன் (Functional Vocabulary) பயன்பாடு.

2. அடையாளங்காணும் சொற்திறன் (Recognition Vocabulary).

           ஒரு சொல்லை மற்றவர்கள் பிரயோகிக்கும் போது அதன் பொருளை என்னால் உணர்ந்துகொள்ள முடியும். ஆனால் எனக்கு அதைப் பிரயோகிக்கத் தெரியாது என்றால்  அது  Recognition Vocabulary.

         எனக்கே ஒரு சொல்லை உபயோகிக்கத் தெரிந்தால் அது functional vocabulary. பொதுவாக  ஒருவருடைய  functional  vocabulary  level, Recognition vocabulary ஐ விட  அதிகமாகத்தானிருக்கும்.

          SIGMUND FREUD, conscious mind, (உள்ளுணர்வு) sub conscious mind. (ஆழ்ந்த உள்ளுணர்வு ) இரண்டைப் பற்றியும் குறிப்பிடுகின்ற போது conscious mind (உள்ளுணர்வு) என்பது  செயற்கை  நீரூற்றைப் போன்றது. செயற்கை நீரூற்று எழுவதற்கு ஏதுவாகத் தேங்கி இருக்கிற தண்ணீர்த் தொட்டியைப் போன்றது sub conscious mind, ஆழ்ந்த உள்ளுணர்வு எப்படி நீரூற்று தேங்கிய தண்ணீரிலிருந்து எழுகிறதோ அதைப்போல இரண்டுக்குமான தொடர்பு இருக்கிறது என்று கூறுகிறார்.

         உள்ளுணர்வு (conscious mind) உடன் தொடர்பு கொண்டது. (functional vocabulary) ஆழ்ந்த உள்ளுணர்வு (subconscious mind) உடன் தொடர்பு கொண்டது அடையாள சொற்திறன் (Recognition Vocabulary).

           வாசிப்பதை விரிவாக வாசித்தல் (Extensive Reading), ஆழ்ந்து வாசித்தல் (Intensive Reading) என்று இருவகையாகப் பிரிக்கலாம்.

           நிறைய செய்திகளைப் பற்றிக் குறைவாகத் தெரிந்து வைத்திருப்பது Extensive Reading. Reading less and less about more andmore. குறைவாக இருந்தாலும் நிறைய வாசித்துவிரிவாகத் தெரிந்து வைத்திருப்பது Intensive Reading. Reading more and more about less and less.

         பொதுவாக (objective type) ஒருவரி விடைத் தேர்வுகளுக்கு விரிவாகப் படிப்பதும் (subjective type) கட்டுரை விடைத் தேர்வுகளுக்கு ஆழ்ந்து படிப்பதும் நல்லது.

         ஒரு செய்தியை எப்போது நாம் நினைவில் வைத்திருக்கிறோம் என்பதை உற்று நோக்கினால் ஒன்று தெளிவாகப் புலப்படும். நாம் எதை விரும்புகிறோமோ அதை நினைவில் வைத்துக் கொள்கிறோம். வேறுவிதமாகச் சொல்வதென்றால் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டியவற்றை  நாம் விருப்பத்துடன் வாசித்தால் போதும். வேறெதுவும் செய்ய வேண்டியதில்லை.’ சூரிய ஒளி பட்டவுடன் தாமரை மலர்ந்து விடுவதைப் போல இது நிகழ்ந்துவிடுகிறது.

         சுவாங்ட்ஸு கூறிய சம்பவம் ஒன்று உண்டு.  சங் நாட்டில் (மத்திய சீனாவைச் சேர்ந்தது) முன்னொரு காலத்தில் இது நடந்தது.  அங்கு ஒரு கிராமப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட இனத்தார்  வாழ்ந்து வந்தனர். அந்த மக்கள் பட்டுநூலை வெளுப்பாக்கும் – சாயம்  தோய்க்கும் (bleaching and dying) தொழிலை தலைமுறை  தலைமுறையாகச்  செய்து  வந்தனர்.

        பட்டுநூலை  வெளுப்பாக்குவதற்குத் திரவத்தில் அமிழ்த்தி எடுக்கும் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நாளாவட்டத்தில் அவர்கள் கைகளில் வெடிப்பு ஏற்படும். தோலுரிந்து புண்ணாகும். இவ்வாறு ஏற்படும் வெடிப்பு மற்றும் புண்ணை அருமையான முறையில் ஆற்றிவிடக்கூடிய அற்புதமான மருந்து ஒன்றை அந்த இனத்து மக்கள் கண்டுபிடித்திருந்தனர். அவர்கள் தொழிலைப் போலவே இந்த  மருந்தையும் பல தலைமுறைகளாக நம்பிக்கையுடன் பயன்படுத்தி வந்தனர். கைகளில் ஏற்படும் வெடிப்பு மற்றும் புண்களை அது மிகச் சிறப்பான முறையில் ஆற்றியது.

            பிறகு, ஒருநாள் முன்பின் அறியாத வேற்று நாட்டுக்காரன் ஒருவன் அவர்களுடைய ஊருக்கு வந்தான். அவன் அவர்கள் பயன்படுத்திவரும் கைப்புண்ணுக்கான  கைகண்ட  மருந்தைப்  பற்றிக் கேள்விப்பட்டிருந்தான். அவன் அவர்கள் பயன்படுத்தி வரும் ‘கைகண்ட மருந்து’ பற்றிய இரகசியத்தைத் தனக்குத் தரவேண்டும் என்றும், அதற்குப் பதிலாக அவர்களுக்கு அவன் நூறு பொற்காசுகள்  தருவதாகவும்  தெரிவித்தான்.

         அந்த இனத்துப் பெரியவர்கள் கூடி அந்த மனிதன் கேட்டதைப் பற்றி விவாதித்தார்கள். அவர்களில் ஒருவர் சொன்னார்: ”நாம் இந்த மருந்தைப் பல தலைமுறைகளாகத் தயாரித்துப் பயன்படுத்தி வந்திருக்கிறோம். இதைக்காட்டி ஒன்றிரண்டு பொற் காசுகளையேனும் பெற்றுக் கொள்வதற்கு அதிலே பெரிதாக ஒன்றுமில்லை. இதோ, இன்றைக்கு நாம் இதைக் கொடுத்தால் நமக்கு ஒரே தடவையில் நூறு பொற்காசுகள் கொடுக்கச் சித்தமாக ஒருவர், நம்முன் வந்திருக்கிறார்.  நாம் இந்த இரகசியத்தை அவருக்கு விற்று நூறு பொற்காசுகளைப் பெற்றுக் கொள்வோம்.” அந்த மக்கள் முன்பின் அறிந்திராத  அந்த அயல் மனிதன் அந்தக் கைப்புண்ணுக்கு கைகண்ட மருந்தின் இரகசியத்தை நூறு பொற்காசுகள் கொடுத்துப் பெற்றுக்கொண்டான்.

        அவன் அங்கிருந்து நேராக  ‘ வு’  நாட்டின்  அரசனுடைய அவைக்குச் சென்றான். மன்னனைப்  பேட்டி கண்டான். அந்தச் சமயத்தில் எப்போதும் போல         ‘ வு’  நாட்டுக்கும்  ‘ யுயே’  நாட்டுக்கும்  இடையில்  இருந்து  வந்த சச்சரவு காரணமாகப் போர் மூளும் நிலையிலிருந்தது. இரகசியத்தைப் பெற்றிருந்த அயலான் ‘வு’ நாட்டுத் தளபதியாக நியமனம் பெற்றான். குளிர்காலத்தில் அவ்விரு நாடுகளுக்கும் இடையே மிகக் கடுமையான கடற்போர் மூண்டது. ‘வு’ நாட்டுப்படை   ‘ யுயே’  நாட்டவருடன் கடுமையாகப் போரிட்டு அழித்து வெற்றிகொண்டது.

         அந்தப் போரில் ‘வு’ நாட்டுக் கடற்படை வீரர்களுக்கும் மாலுமிகளுக்கும் கடும் குளிர் காரணமாகக் கைகளில் வெடிப்புகளால் ஏற்பட்ட புண்களை ஆற்றிடுவதற்கு அந்த அதிசய மருந்து பெரிதும் உதவியது. ‘யுயே’ நாட்டிடம் வென்றெடுத்த பகுதியிலிருந்து ஒரு சிற்றரசை  ‘வு’  நாட்டு மன்னன் அவனுடைய தளபதிக்கு வெகுமதியாக வழங்கினான்.

          இவ்வாறு வெடிப்புகளால் ஏற்பட்ட கைப்புண்களை ஆற்றுவதில், அந்த அயலானும்  சங்  நாட்டின் கிராமப் பகுதியைச் சேர்ந்த பட்டு நூல் வெளுப்பாகிடும் தொழில் செய்து வந்த இனத்தாரும் சமமானவர்களே. இந்தத் திறமையின் மூலம் ஒருவனுக்கு ஒரு சிற்றரசு வெகுமதியாகக் கிடைத்தது. ஆனால் அந்த இனமக்களோ பட்டு நூலை வெளுப்பாக்கும் தொழில். பட்டுநூல் வாணிகம் இவற்றின் தொழில் முறைத் துன்பங்களிலிருந்து விடுபட முடியவில்லை. இவையெல்லாமும் அந்த மருந்தைப் பயன்படுத்துவதில் கையாண்ட ஒரு மாறுதலின் அடிப்படையிலேயே அமைந்தது.

            தேர்வின் வெற்றியும் அப்படியே – படிப்பதில் அல்ல : பரிமாறுவதில் இருக்கிறது.

நினைவில் வைத்துக்கொள்வதில் இல்லை; வெளிப்படுத்துவதில் இருக்கிறது.

DOWNLOAD PDF – Click Here

Leave a Comment