பத்தாம் வகுப்பு – சமூக அறிவியல் (வரலாறு) 8 மதிப்பெண் வினா-விடைத் தொகுப்பு

 

பத்தாம் வகுப்பு – சமூக அறிவியல் (வரலாறு) 8 மதிப்பெண் வினா-விடைத் தொகுப்பு

1.வெர்சேல்ஸ் உடன்படிக்கை ஷரத்துகள் பற்றியும் அதன் மீதான விமர்சனம் பற்றியும் விரிவாக விடை தருக

உடன்படிக்கையின் சரத்துக்கள்;

 • போரைத் தொடங்கிய குற்றத்தைச் செய்தது ஜெர்மனி என்பதால் போர்இழப்புகளுக்கு ஜெர்மனி இழப்பீடு வழங்கவேண்டும். இழப்பீட்டுத் தொகையை முடிவு செய்வதற்காக அமைக்கப்பட்டகுழு அதை6600 மில்லியன் பவுண்டு எனவும், அப்பணம் சில தவணைகளில் செலுத்தப்படவேண்டுமென்றும் தீர்மானித்தது.
 • ஜெர்மன் படை1,00,000 வீரர்களைமட்டுமே கொண்டதாக அளவில் சுருக்கப்பட்டது.
 • ஆஸ்திரியா, ஜெர்மனி ஆகிய இரண்டின் ஒருங்கிணைப்பு தடைசெய்யப்பட்டது.
 • ஜெர்மனி கடல்கடந்த தனது காலனிகள் மீதான உரிமைகளையும் நேசநாடுகளுக்கு விட்டுக் கொடுக்கக் கட்டாயப்படுத்தப்பட்டது.
 • ரஷ்யாவுடன் செய்து கொள்ளப்பட்ட பிரெஸ்ட்-லிடோவஸ்க் உடன்படிக்கையையும் பல்கேரியாவுடன் மேற்கொள்ளப்பட்ட புகாரெஸ்ட் உடன்படிக்கையையும் திரும்பப் பெற்றுக்கொள்ள ஜெர்மனி வற்புறுத்தப்பட்டது.
 • அல்சேஸ்-லொரைன் பகுதிகள் பிரான்சுக்குத் திருப்பித் தரப்பட்டன.
 • முன்னர் ரஷ்யாவின் பகுதிகளாக இருந்த பின்லாந்து, எஸ்தோனியா, லாட்வியா, லிதுவேனியா ஆகியன சுதந்திரநாடுகளாகச் செயல்படும்.. வடக்கு ஷ்லெஸ்விக் டென்மார்க்கிற்கும் சிறிய மாவட்டங்கள் பெல்ஜியத்திற்கும் வழங்கப்பட்டன.
 • போலந்து மீண்டும் உருவாக்கப்பட்டது.
 • நேசநாடுகளின் ஆக்கிரமிப்பின்கீழ் ரைன்லாந்து இருக்கும். ரைன்நதியின் கிழக்குக் கரைப் பகுதி படைநீக்கம் செய்யப்பட்டப் பகுதியாக்கப்படும்.

2.இத்தாலியில் முசோலினியின் எழுச்சினைப் பற்றி கூறுக

 • ஆற்றல் மிக்க பேச்சாளரான முசோலினி முதல் உலகப்போரில் இத்தாலி கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த சோசலிஸ்டுகளிடமிருந்து பிரிந்து செல்வதற்கும், வன்முறையைப் பயன் படுத்துவதற்கும், ஆதரவளிக்கத் தொடங்கினார்.
 • 1919 பாசிசக்கட்சி தொடங்கப்பட்ட போது முசோலினி உடனடியாக அதில் உறுப்பினரானார்.
 • பாசிஸ்டுகள் அதிகாரம், வலிமை, ஒழுக்கம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தியதால் தொழிலதிபர்கள், தேசியவாதிகள், முன்னாள் ராணுவத்தினர், நடுத்தரவர்க்கத்தினர், மனநிறைவற்ற இளைஞர்கள் ஆகியோரின் ஆதரவைப்பெற்றனர்.
 • பாசிஸ்டுகள் சுதந்திரமாக வன்முறையைக் கைக்கொண்டனர்.
 • 1922 அக்டோபரில் ஒரு நீண்ட அமைச்சரவைச் சிக்கலின் போது முசோலினி பாசிஸ்டுகளின் மாபெரும் அணிவகுப்பு ஒன்றை ரோமாபுரியை நோக்கி நடத்தினார்.
 • முசோலினியின் வலிமையைக் கண்டு வியந்துபோன அரசர் முசோலினியை ஆட்சி அமைக்க வரவேற்றார்.
 • மக்களாட்சியினை ஒருங்கிணைக்க முடியாத தன்மையும் உறுதியுடன் செயல்பட முடியாத இயலாமையும் முசோலினியின் வெற்றிக்கு உதவின.

3. இரண்டாம் உலகப் போருக்குப்பின் உருவான இராணுவ ஒப்பந்தங்கள் பற்றி விளக்குக

1.நேட்டோ (NATO) ;

 • அமெரிக்க ஐக்கிய நாடும் அதன் ஐரோப்பியத்தோழமை நாடுகளும் சேர்ந்து வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பை 1949 இல் ஏற்படுத்தி சோவியத் நாட்டின் ஆக்கிரமிப்புப் போக்கை ஐரோப்பாவிற்குள் தடை செய்ய முற்பட்டன.
 • இவ்வொப்பந்தம் வடக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் நாடுகளுக்கிடையே ஏற்படுத்தப்பட்ட இராணுவக் கூட்டு ஒப்பந்தமாகும்.
 • இதன் முக்கிய உறுப்பு நாடுகள் கனடா, பெல்ஜியம், டென்மார்க், பிரான்ஸ், ஐஸ்லாந்து, இத்தாலி, லக்ஸம்பர்க், நெதர்லாந்து, நார்வே, போர்த்துகல், மற்றும் இங்கிலாந்து ஆகியன
 • பின்னர் 1952இல் துருக்கியும் கிரீசும் இவ்வொப்பந்தத்தில் இணைந்து கொண்டன. ஜெர்மனி 1955ஆம் ஆண்டு இவ்வொப்பந்தத்தில் இணைந்தது.
 • நேட்டோ ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமானது வடக்கு அட்லாண்டிக் பகுதியில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதாகும்.

2. சீட்டோ (SEATO) அல்லது மணிலா ஒப்பந்தம் ;

 • தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைவு என்பது தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டுப்பாதுகாப்பை முன்னிறுத்தியதாகும்.
 • மணிலா ஒப்பந்தம் (1954), அமெரிக்கஐக்கிய நாடு, பிரான்ஸ், இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளால் கையெழுத்திடப்பட்டது.
 • இவ்வொப்பந்தத்தின் உறுப்பு நாடுகள் இப்பகுதியில் பொதுவுடைமைச் சிந்தனை பரவுவதையும் அக்கொள்கை செல்வாக்குப் பெறுவதையும் தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது.

வார்சாஒப்பந்தம்

 • நேட்டோவிற்கு எதிராக சோவியத் நாடு தன் ஆதரவு நாடுகளைக் கொண்டு உருவாக்கியதே வார்சா ஒப்பந்தமாகும்.
 • ஐரோப்பாவை சேர்ந்த எட்டு முக்கிய நாடுகளான அல்பேனியா, பல்கேரியா, ஹங்கேரி, செக்கோஸ்லோவியா, கிழக்கு ஜெர்மனி, போலந்து, ருமேனியா, ரஷ்யா ஆகியவை டிசம்பர் 1954இல் மாஸ்கோவில் கூடி ஒரு கலந்துரையாடலை நடத்தின.
 • இவை மீண்டும் மே14, 1955 இல் கூடி ஒர் ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.

4.சென்டோ (CENTO) அல்லது பாக்தாத் ஒப்பந்தம்

 • துருக்கி, ஈராக், பிரிட்டன், பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகள் 1955இல் ஏற்படுத்திய ஒப்பந்தமே பாக்தாத் ஒப்பந்தம் என்றழைக்கப்படுகிறது.
 • அமெரிக்க ஐக்கிய நாடு இவ்வுடன்படிக்கையில் 1958இல் இணைந்ததோடு, இவ்வொப்பந்தம் மத்திய உடன்படிக்கை அமைப்பு’ என்று அறியப்பட்டது.
 • இவ்வொப்பந்தம் 1979இல் கலைக்கப்பட்டது.

4.பெர்லின் சுவர் வீழ்ச்சி பற்றியும் பனிப்போர் எவ்வாறு முடிவுக்கு வந்தது பற்றி ஆய்வு செய்க.

 • ஜெர்மானிய மேற்கு (ஜெர்மானியக் கூட்டுக் குடியரசு), ஜெர்மானிய கிழக்குப் (ஜெர்மானிய ஜனநாயகக் குடியரசு) பிரிவுகள் வேறுபட்ட வாழ்க்கைத்தரத்தில் எதிரொலித்தன.
 • மார்ஷல் திட்டத்தின் துணையால் மேற்கு பெர்லினின் பொருளாதாரம் செழித்தோங்கியது.
 • அதற்கு மாறாக கிழக்கு பெர்லினின் பொருளாதார வளர்ச்சியில் ரஷ்யா போதிய அக்கறை கொண்டிருக்கவில்லை.
 • மேலும் கிழக்கு பெர்லினில் மக்களாட்சியோ சுதந்திரமே இல்லாததால் மக்களுக்குப் பெரும் சிரமம் இருந்தது.
 • இதனால் கிழக்கு பெர்லின் மக்கள் மேற்கு பெர்லினுக்கு நகர்ந்து செல்லமுயன்றனர்.
 • மேற்கு பெர்லினிலோ ரஷ்யாதன்மீது எந்தநேரத்திலும் படையெடுத்து வரக்கூடும் என்ற அச்சம் நிலவியது.
 • இச்சூழலில் 1961இல் கிழக்கு ஜெர்மனி ஒரு சுவரை எழுப்பி கிழக்கு பெர்லின் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளுக்கும் மேற்கு பெர்லினுக்கும் இருந்த தொடர்பை நிறுத்தியது.
 • ரஷ்யாவின் கட்டுப்பாடு 1980 களின் நடுவில் வலுவிழக்கத் துவங்கிய நிலையில் இச்சுவரின் இருபுறமும் 9 நவம்பர் 1989இல் கூடிய மக்கள்கூட்டம் அதை தகர்க்கத்துவங்கியது.
 • ஜெர்மனி 3 அக்டோபர் 1990 அன்று முறையாக இணைக்கப்பட்டது.
 • பெர்லின் சுவர் ஒரு கட்டுமானத்தடை என்பதைத்தாண்டிய ஒரு விஷயமாகும் அது முதலாளித்துவத்திற்கும் பொதுவுடைமைக்கும் இடையே இருந்தப்பிளவை அடையாளப் படுத்தக்கூடிய ஒன்று.
 • பெர்லின் சுவரின் வீழச்சியைத் தொடர்ந்து 26 டிசம்பர் 1991 இல் சோவியத் நாடும் வீழ்ந்து பனிப்போர் காலத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.

5.ஐரோப்பியக் குழு எவ்வாறு ஐரோப்பிய இணைவானது என்ற வரலாற்றை எடுத்தியம்புக

 • ஐரோப்பியக் குழுமம் 2ம் உலகப் போருக்கு பின் ஐரோப்பிய நாடுகளை ஒருங்கிணைக்கவும், போர்களை தவிர்க்கவும், அமெரிக்கா, ரஷ்யாவிற்கு சமமான ஒரு சமூகமாக 1949-ல் உருவானது.
 • ஐரோப்பிய நிலக்கரி மற்றும் எஃகு சமூகம் ரோம் ஒப்பந்தம் மூலம் ஐரோப்பிய பொருளாதார சமுகத்தை நிறுவியது.
 • ஐரோப்பிய பொருளாதார சமூகம் தனியார் ஒப்பந்தத்தை புறக்கணித்து, பொதுவான விவசாய கொள்கை மற்றும் பொதுவான வெளிநாட்டு கொள்கையை உருவாக்கியது.
 • ஒற்றை ஐரோப்பியச் சட்டம் (1987) ஐரோப்பிய பொருளாதார சமூகத்தின் எல்லைகளை விரிவாக்கியது.
 • ஐரோப்பிய ஒன்றியம் (1992) பொதுவான நிதிக் கொள்கை மற்றும் பொதுவான பணத்தை (யூரோ) ஏற்படுத்தி அவற்றை நிர்வகிக்க பொது நிறுவனங்களை நடைமுறை படுத்தியது.
 • அதன் அடிப்படையில் உறுப்பு நாடுகள் புதிய ஐரோப்பிய பாராளுமன்றம் தொடங்க வலியுறுத்தியது.
 • 1992 பிப்ரவரி 7 ல் ஐரோப்பிய இணைவை நெதர்லாந்து மாஸ்டிரிக்ட் மாநாடு உறுதிப்படுத்தியது.
 • 2002 ஜனவரி 1-ல் ஐரோப்பிய ஒற்றை நாணய முறை அமலுக்கு வந்தது. இன்றளவில் ஐரோப்பிய இணைவில் 28 உறுப்பு நாடுகள் பெல்ஜியத்தின் பிரெஸ்ஸல்ஸ் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

6. ராஜாராம் மோகன்ராயின் பிரம்ம சமாஜம் பற்றி விரிவான விளக்கம் தருக.

 • ராஜா ராம்மோகன்ராய் 1828 பிரம்மசமாஜத்தை நிறுவி ஆகஸ்டு 20ஆம் நாள் கல்கத்தாவில் ஒரு கோவிலை நிறுவினார்.
 • அக்கோவிலில் திருவுருவச் சிலைகள் எதுவும் வைக்கப்படவில்லை.
 • இங்கு எந்த ஒரு மதத்தையும் ஏளனமாகவோ, அவமானமாகவோப் பேசக்கூடாது அல்லது மறைமுகமாகக் குறிப்பிடப்படலாகாது எனஎழுதிவைத்தார்.
 • பிரம்மசமாஜம் உருவவழிபாட்டை தவிர்த்ததோடு பொருளற்ற சமயச் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் எதிர்த்தது.
 • இருந்தபோதிலும் தொடக்கம் முதலாக பிரம்மசமாஜத்தின் கருத்துக்கள் கற்றறிந்த மேதைகள், கல்வியறிவு பெற்ற வங்காளிகள் என்ற அளவில் மட்டுமே செயல்பட்டது.
 • சமூகத்தின் கீழ்த்தட்டு மக்களைத் தன்பால் ஈர்ப்பதில் சமாஜம் தோல்வியடைந்தாலும், நவீன வங்காளப்பண்பாட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தின் மீதான அதனுடைய தாக்கம் மிகவும் போற்றுதலுக்குரியதாகும்.

7. பெண்களின் மேம்பாட்டிற்கு 19-ம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகள் ஆற்றிய பணிகள் குறித்து ஒரு கட்டுரை வரைக

இராஜாராம் மோகன்ராய்

 • இராஜாராம் மோகன் ராய் சமூகத்தில் நிலவிய உடன்கட்டை ஏறுதல், குழந்தைத் திருமணம், பலதார மணம் போன்ற மரபு சார்ந்த பழக்கவழக்கங்களுக்கு எதிராக சட்டங்கள் இயற்றும் அரசை வலியுறுத்தி வெற்றி கொண்டவர்.
 • இவர் பெண்ணடிமைத்தனத்தையும், ஆணைவிட பெண் கீழானவள் எனும்
 • நடைமுறையை எதிர்த்தவர்,

ஈஸ்வர சந்திர வித்யாசாகர்

 • பெண் கல்விக்கு பெண்கள் பள்ளிகள் விதவை மறுமண ஆதரவு

கேசவ சந்திர சென்

 • கிருத்துவ மத சாரம், குழந்தை திருமண எதிர்ப்பு

M.G.ரானடே

 • விதவை மறுமண சங்கம், சாதி மறுப்பு திருமணம்

சுவாமி தயானந்த சரஸ்வதி

 • விதவை மறுமண ஆதரவு, குழந்தை திருமண எதிர்ப்பு

ஜோதிபா பூலே

 • விதவைகள் காப்பகம், குழந்தை திருமண எதிர்ப்பு, உயர்சாதி இந்துக்கள் மறுமண ஆதரவு.

ஆத்மராம் பாண்டுரங்

 • சாதி மறுப்பு திருமணம், பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கு தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்.

சர் சையது அகமதுகான்

 • இசுலாமிய பெண்கள் கல்வி கற்கவும் அவர்களின் மேம்பாட்டிற்கும் பாடுபட்டவர்.

அன்னிபெசண்ட் அம்மையார்

 • பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடுபட்டவர்,

பண்டித ரமாபாய்

 • பெண் விடுதலைக்கு பாடுபட்டவர்

8.பூலித்தேவரின் புரட்சி பற்றி கூறுக

பூலித்தேவரின் புரட்சி (1755-1767);

 • கம்பெனிக்குக் கீழ்ப்படிய மறுத்துவந்த பூலித்தேவரை அடக்க கர்னல் ஹெரான் பணிக்கப்பட்டார்.
 • மேற்குப் பகுதியில் இருந்த பாளையக்காரர்களிடம் பூலித்தேவர் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தார்.
 • பீரங்கிகளின் தேவையும் துணைக்கலப்பொருட்கள் மற்றும் படைவீரர்களின் ஊதியம் உள்ளிட்ட காரணங்களினால் ஹெரான் தனது திட்டத்தைக் கைவிட்டு மதுரைக்கு திரும்பினார். கம்பெனி நிர்வாகம் அவரைத் திரும்ப அழைத்ததோடு நிரந்தரப் பணிநீக்கம் செய்தும் உத்தரவிட்டது..

பிரிட்டிஷ் எதிர்ப்பாளர்களின் கூட்டமைப்பும், நட்புக் கூட்டணியும்;

 • நவாப் சந்தாசாகிப்பின் முகவர்களாக செயல்பட்டு வந்த மியானா, முடிமையா, நபீகான் கட்டாக் எனும் மூன்று பத்தாணிய அதிகாரிகள் மதுரைமற்றும் திருநெல்வேலிப் பகுதிகளில் பொறுப்புவகித்தனர். பூலித்தேவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போரிட பாளையக்காரர்களின் கூட்டமைப்பு ஒன்றையும் ஏற்படுத்தினார்.
 • பூலித்தேவர் மைசூரின் ஹைதர் அலி மற்றும் பிரெஞ்சுக்காரர்களது ஆதரவினைப் பெறமுயன்றார்.
 • ஏற்கனவே மராத்தியர்களோடு கடுமையான மோதலில் ஈடுப்பட்டிருந்த ஹைதர் அலியால் பூலித்தேவருக்கு உதவ இயலவில்லை .

களக்காடு போர்;

 • நவாப் கூடுதல் படைகளை மாபூஸ்கானுக்கு அனுப்பி திருநெல்வேலிக்குச் செல்லும் படையை பலப்படுத்தினார்.
 • மேலும் கம்பெனியின் 1000 சிப்பாய்களோடு நவாபால் அனுப்பப்பட்ட 600க்கும் மேற்பட்ட படை வீரர்களையும் மாபூஸ்கான் பெற்றார்.
 • மாபூஸ்கான் களக்காடு பகுதியில் தனது படைகளை நிலைநிறுத்தும் முன்பாக திருவிதாங்கூரின் 2000 வீரர்கள் பூலித்தேவரின் படைகளோடு இணைந்தனர்.
 • களக்காட்டில் நடைபெற்றப் போரில் மாயூஸ்கானின் படைகள் தோற்கடிக்கப்பட்டன.

யூசுப்கானும், பூலித்தேவரும்;

 • பூலித்தேவர்தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்டபாளையக்காரர்கள் எதிர்ப்பு திருநெல்வேலிப் பகுதியில் ஆங்கிலேயர்நேரடியாகத் தலையிடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.
 • கம்பெனியாரால் அனுப்பப்பட்டயூசுப்கான் திருச்சிராப்பள்ளியில் இருந்து தான் எதிர்பார்த்த பெரும் பீரங்கிகள் மற்றும் வெடி பொருட்கள் வந்து சேரும் வரை பூலித்தேவர் மீது தாக்குதல் தொடுக்க அவர் ஆயத்தமாகவில்லை .
 • பிரெஞ்சுப் படைகளோடு ஒருபுறமும், ஹைதர் அலி மற்றும் மராத்தியரோடு மறுபுறமும் ஆங்கிலேயர் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் பீரங்கிப்படைகள் செப்டம்பர்1760இல் தான் வந்து சேர்ந்தன.
 • கம்பெனியின் நிர்வாகத்திற்கு முறையான தகவல் அளிக்காமல் பாளையக்காரர்களோடு பேச்சுவார்த்தை நடத்திய யூசுப்கான் மீது நம்பிக்கைதுரோகக் குற்றம் சுமத்தப்பட்டு 1764இல் தூக்கிலிடப்பட்டார்.

பூலித்தேவரின் வீழ்ச்சி;

 • கான்சாகிப் காலமானதைத் தொடர்ந்து, நாடிழந்த நிலையில் சுற்றிவந்த பூலித்தேவர் திரும்பிவந்து 1764இல் நெற்கட்டும் செவலை மீண்டும் கைப்பற்றினார்.
 • எனினும் 1767இல் கேப்டன் கேம்ப்பெல் என்பவரால் தோற்கடிக்கப்பட்டார். தப்பிச்சென்ற அவர் நாடிழந்த நிலையிலேயே காலமானார்,

 9. கிழக்கிந்தியக் கம்பெனியாரை எதிர்த்து கட்டபொம்மன் நடத்திய வீரதீரப் போர்கள் பற்றி ஒரு கட்டுரை வரைக

வீரபாண்டிய கட்டபொம்மனின் கலகம் (1790-1799)

 • பாஞ்சாலக்குறிச்சியின் பாலளயக்காரராக தன் 30-வது வயதில் கட்டபொம்மன் பொறுப்பேற்றார், பாளையப் பகுதியில் வரி வசூல் செய்த கம்பெனி, நிர்வாக படை பலத்துடன் வசூல் செய்தது கட்டபொம்மனுக்கும் கம்பெனிக்கும் மோதல் போக்கு ஏற்பட்டது.

ஜாக்சனோடு ஏற்பட்ட மோதல்;

 • ஆட்சியர்ஜாக்சனை சந்திக்க சென்ற கட்டபொம்மன்அவமானப்பட்டதால் ஆபத்தை உணர்ந்து தப்பி செல்ல முயன்றார். ஊமைத் துரை ஆட்களின் உதவியோடு கோட்டையிருந்து தப்பனார். அமைச்சர் சிவசுப்ரமணியனார் கொல்லப்பட்டார்.
 • பாஞ்சாலங்குறிச்சி வந்த கட்டபொம்மன் ஆட்சியர் ஜாக்சன் தன்மை அவமானப்படுத்தியதை கம்பெனி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தார். சிவகங்கை மருது பாண்டியரின் கூட்டமைப்பில் சேர்ந்து ஆங்கிலேயரை எதிர்க்க முடிவு செய்தார்.

கட்டபொம்மனும் பாளையக்காரர்களின் கூட்டமைப்பும்: –

 • சிவகங்கையில் மருதுபாண்டியர் ஏற்படுத்திய தென்னிந்தியக் கூட்டமைப்பு
 • கட்டபொம்மனின் ஆர்வத்தைத் தூண்டியது.
 • மருது சகோதரர்களும், கட்டபொம்மனும் இணைந்து ஆங்கிலேயரை எதிர்ப்பது என்று முடிவெடுத்தார்கள்.
 • கட்டபொம்மன் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சிவகிரி பாளையக்காரரைத் தங்களோடு இணைக்க முயன்றார்.
 • கட்டபொம்மனின் சிவகிரி நோக்கிய படை நகர்வை தங்களுக்கு விடப்பட்ட சவாலாகவே கம்பெனியார் கருதினர்.

பாஞ்சாலங்குறிச்சி முற்றுகை:

 • 1799 மே மாதம் வெல்லெஸ்லிபிரபு கட்டளையின்படி கம்பெனிபடையும், திருவிதாங்கூர் படையும் இணைந்து கட்டபொம்மனை சரணடைய கோரின. கட்டபொம்மன் சரணடைய மறுத்து புதுக்கோட்டைக்கு தப்பி ஓடினார். எட்டையபுரம், புதுக்கோட்டை மன்னர்களின் துரோகத்தால் பிடிபட்டார்.

கட்டபொம்மன் தூக்கிலிடப்படல்;

 • பிடிபட்ட கட்டபொம்மன் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை ஒப்புக் கொண்டு இறுதியில் கயத்தாறில் உள்ள புளியமரத்தில் தூக்கிலிடப்பட்டார். (1799-அக்-16)

10.காலனியத்திற்கு எதிரான விவசாயிகள் எதிர்ப்பு பற்றி கட்டுரை வரைக விவசாயிகளின் கிளர்ச்சி; –

 • 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெடிக்கத் தொடங்கிய விவசாயிகளின் கிளர்ச்சிகள் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி முடிவுக்கு வரும் வரை தொடர்ந்தன.
 • இவற்றில் இந்திய மக்களின் சமூக-சமய வாழ்க்கையில் ஆங்கிலேய ஆட்சியை ஒரு அத்து மீறலாகக் கருதிய சமயத் தலைவர்களே பெரும்பான்மையான கிளர்ச்சிகளுக்குத் தலைமையேற்றனர்.
 • ஃபராசி இயக்கம் ; –
 • ஹாஜி ஷரியத்துல்லா என்பவரால் 1818 ஆம் ஆண்டு ஃபராசி இயக்கம் தொடங்கப்பட்டது.
 • 1839 இல் ஷரியத்துல்லாமறைந்தபிறகு இந்தகிளர்ச்சிக்கு அவரது மகன் டுடு மியான் தலைமை ஏற்றார்.
 • அவர் வரி செலுத்த வேண்டாம் என்று விவசாயிகளைகேட்டுக்கொண்டார். பொதுமக்கள் நிலத்தையும் அனைத்து வளத்தையும் சரிசமமாக அனுபவிக்கவேண்டும் என்ற எளிய கொள்கையில் இந்த அறிவிப்பு பிரபலமடைந்தது.
 • சமத்துவ இயல்பிலான மதம் குறித்து வலியுறுத்திய டுடு மியான், ‘நிலம்கடவுளுக்குச் சொந்தமானது’ என்று அறிவித்தார். எனவே வாடகை வசூலிப்பது அல்லது வரி விதிப்பது ஆகியன இறைச்சட்டத்துக்கு எதிரானது என்றார்.
 • கிராம அமைப்புகளின் கட்டமைப்பு மூலமாக பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகள் ஒன்று திரட்டப் பட்டனர்.
 • 1840கள் மற்றும்1850கள் முழுவதும் ஜமீன்தாரர்கள் மற்றும் பயிரிடு வோர் மத்தியில் கடுமையான மோதல்கள் நிலவின.
 • 1862 இல் டுடு மியான் மறைந்தபிறகு 1870 களில் நோவாமியான் என்பவரால் இந்த இயக்கம் மீண்டும் உயிர்பெற்றது.

பரசத்தில் வஹாபி கிளர்ச்சி; –

 • வஹாபி கிளர்ச்சி என்பது ஆங்கிலேய ஆட்சிக்கும் நிலப்பிரபுக்களுக்கும் எதிராக துவங்கப்பட்டதாகும்.
 • வங்காளத்தில் பரசத் பகுதியில் 1827 வாக்கில் தோன்றியது. வஹாபி போதனைகளால் பெரிதும் ஆழமாக ஈர்க்கப்பட்டவராக திகழ்ந்த இசுலாமிய மதபோதகர் டிடு மீர் என்பவர் இந்தக் கிளர்ச்சிக்குத் தலைமையேற்றார்.
 • ஜமீன்தாரி முறையால் ஒடுக்கப்பட்ட குறிப்பாக இசுலாமிய விவசாயிகள் மத்தியில் அவர் செல்வாக்கு மிக்க நபராகத் திகழ்ந்தார்.
 • எனினும் பெருபான்மையான ஜமீன்தாரர்கள் இந்துக்களாக இருந்ததால் இந்தக் கிளர்ச்சிக்கு இந்து எதிர்ப்புச் சாயம் பூசப்பட்டது.
 • 1831 நவம்பர் 6 இல் புர்னியா நகரில் முதல் பெரும்தாக்குதல் நடத்தப்பட்டது. டிடு மீர் உடனடியாக ஆங்கிலேய ஆட்சியில் இருந்து விடுதலைபெற்றதாக அறிவித்தார். பெரும் எண்ணிக்கையிலான துருப்புகள் நர்கெல்பேரியாவுக்கு அனுப்பப்பட்டன. இப்போராட்டத்தில் ஐம்பது வீரர்களுடன் டிடு மீர் கொல்லப்பட்டார்.

11.இந்திய தேசிய காங்கிரஸின் குறிக்கோள்கள் மற்றும் வழிமுறைகள் யாவை.

குறிக்கோள்கள் மற்றும் வழிமுறைகள்;

 • ஒரு அகில இந்திய அமைப்பை உருவாக்க முனைந்ததன் விளைவாக1885ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸ் உருவானது. பம்பாய், மதராஸ், கல்கத்தா ஆகிய மூன்று மாகாணங்களிலும் அரசியல் ரீதியாக தீவிரம் காட்டிய கல்வி அறிவு பெற்ற இந்தியர்களின் குழுக்கள் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பை உருவாக்க 4.0. ஹியூம் தமது சேவைகளை வழங்கினார்.
 • இந்திய தேசிய காங்கிரசின் முதல் (1885) தலைவராக உமேஷ் சந்திர பானர்ஜி இருந்தார்.
 • 1885 டிசம்பர் 28இல் இந்திய தேசிய காங்கிரசின் முதல் அமர்வு நடைபெற்றது.
 • தேசிய ஒற்றுமை குறித்த உணர்வுகளை ஒருங்கிணைப்பதே காங்கிரஸின் ஆரம்பகால முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாக இருந்தாலும் பிரிட்டனுக்கு விசுவாசமாக நடந்து கொள்ளவும் உறுதி மேற்கொண்டது.
 • பிரிட்டனிடம்மேல்முறையீடுகள் செய்வது, மனுக்களைக் கொடுப்பது, அதிகாரப் பகிர்வு, ஆகியவற்றை ஆங்கிலேய அரசு உருவாக்கிய அரசியல்சாசன கட்டமைப்பிற்குள் செய்வது உள்ளிட்ட வழிமுறைகளை காங்கிரஸ் பின்பற்றியது.

சில முக்கிய கோரிக்கைகள்:

 • மாகாண மற்றும் மத்திய அளவில் சட்டமேலவைகளை உருவாக்குவது.
 • சட்டமேலவைகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது.
 • நிர்வாகத்துறையிலிருந்து நீதித்துறையைப் பிரிப்பது.
 • இராணுவச் செலவுகளைக் குறைப்பது.
 • உள்நாட்டு வரிகளைக் குறைப்பது.
 • நீதிபதி மூலமாக விசாரணையை விரிவு செய்வது.
 • ஒரேநேரத்தில் இந்தியாவிலும் இங்கிலாந்திலும் ஆட்சிப்பணித் தேர்வுகளைநடத்துவது.
 • காவல்துறை சீர்திருத்தங்கள்.
 • வனச்சட்டத்தை மறுபரிசீலனை செய்தல்.

12. தன்னாட்சி (ஹோம்ரூல்) இயக்கத்தை தொடங்கியதன் மூலம் திலகரும் அன்னிபெசன்ட் அம்மையாரும் இந்திய சுதந்திர போராட்டத்தை 1916ம் ஆண்டுக்குப் பின் எவ்வாறு தக்க வைத்தனர்?

 • திலகர் மற்றும் அன்னிபெசன்டின் தன்னாட்சி இயக்கத்தின் போது இந்திய தேசிய இயக்கம் புதிய வடிவம் பெற்றது
 • முதல் உலகப்போருக்குப் பின் தன்னாட்சி வழங்கும் அதிகாரம் கொடுக்காமல் ஆங்கில அரசு ஏமாற்றியது புதிய மக்கள் இயக்கம் உருவாக வழி செய்தது.
 • ஆங்கிலேயரை எதிர்க்க 1916 ஏப்ரல் மாதம் திலகரும், செப்டம்பர் மாதம் அன்னிபெசன்டும் தன்னாட்சி இயக்கத்தை தொடங்கினர்.
 • தன்னாட்சிக்கு ஆதரவாக இரண்டு அமைப்புகளும் தீவிரமாக செயல்பட்டது. பத்திரிக்கை உரைகள், பொது கூட்டங்கள், விரிவுரைகள், விவாதங்கள் தன்னாட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தது.
 • 1916 லக்னோ அமர்வில் காங்கிரஸ் உறுப்பினர்களை ஒன்று சேர்க்க உதவியது
 • விடுதலை இயக்கத்தில் அதிக இளைஞர்களை சேர்த்தும், இயக்கத்தை கிராம பகுதியிலும் சேர்த்தது.
 • ஊரகப் பகுதிகளில் தன்னாட்சி இயக்கத்தை கொண்டு சேர்ப்பதில் வெற்றி பெற்றது.
 • அரசமைப்பு பெற தன்னாட்சி, டொமினியன் அந்தஸ்து, இலக்கை அடைய வன்முறையற்ற வழியை குறிக்கோளாக தன்னாட்சி இயக்கம் வைத்திருந்தது.

தன்னாட்சி (ஹோம்ரூல்) இயக்கத்தின் முக்கிய குறிக்கோள்கள்;

 • அரசியலமைப்பு மூலம் பிரிட்டீஷ் பேரரசிற்குள் தன்னாட்சி அடைவது.
 • தன்னாட்சி பகுதி (டொமினியன்) தகுதியை அடைவது
 • தங்கள் இலக்குகளை வன்முறையில்லா அரசியல் சாசனம் மூலம் அடைவது.

13.பீகார் சம்ரான் சத்தியாகிரக போராட்டத்தில் காந்தியடிகளின் பங்கை விவரி?

 • பீகாரில் உள்ளசம்பரானில் ‘தீன்காதியா’ முறை பின்பற்றப்பட்டது.
 • இந்தசுரண்டல் முறையில் இந்திய விவசாயிகள்தங்களின் நிலத்தின் இருபதில் மூன்று பங்கு பகுதியில் அவுரி (இண்டிகோ) பயிரிட வேண்டும் என்று ஐரோப்பியப் பண்ணையாளர்கள் அவர்களைக் கட்டாயப்படுத்தினர்.
 • பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில் ஜெர்மானிய செயற்கை சாயங்களால், இண்டிகோ எனப்படும் நீலச்சாயம் சந்தையில் விற்கப்படுவது குறைந்தது.
 • சம்பரானில் இண்டிகோ பயிரிட்ட ஐரோப்பியப் பண்ணையாளர்கள் நீலச்சாயம் பயிரிடும் கடமையிலிருந்து விவசாயிகளை விடுவிக்கும் தேவையை உணர்ந்து அந்தநிலைமையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினார்கள்.
 • இந்தக் கடமையிலிருந்து விவசாயிகளை விடுவிக்கும் பொருட்டு சட்டத்துக்கு புறம்பான நிலுவைத் தொகைகளை வசூலித்ததோடு வாடகையையும் அதிகரித்தார்கள்.
 • எதிர்ப்பு வெடித்தது. இந்த வகையில் சிரமங்களைச் சந்தித்த சம்பரானைச் சேர்ந்தவிவசாயியான ராஜ்குமார்சுக்லா, சம்பரானுக்கு வருகை புரியுமாறு காந்தியடிகளைக் கேட்டுக்கொண்டார்.
 • சம்பரானை காந்தியடிகள் சென்று சேர்ந்தவுடன், அங்கிருந்து உடனடியாக
 • வெளியேறுமாறு காவல்துறையினர் அவரைக் கேட்டுக்கொண்டனர்.
 • அதற்கு அவர் மறுத்ததையடுத்து வழக்கைச் சந்திக்குமாறு பணிக்கப்பட்டார். இந்தச் செய்தி காட்டுத்தீ போன்று பரவியதை அடுத்து ஆயிரக்கணக்கானோர் அந்த இடத்தில் காந்தியடிகளுக்கு ஆதரவாகக்கூடினர்.
 • உத்தரவுக்குக் கீழ்ப்படிய மறுத்தது குறித்து காந்தியடிகள் மன்னிப்புக்கோரியதை அடுத்து வழக்கு திரும்பப் பெறப்பட்டது.
 • ‘நாடு முதன்முதலாக ஒத்துழையாமை இயக்கச் செயல்முறைப் பாடத்தைக் கற்றுக்கொண்டதாக’ காந்தியடிகள் தெரிவித்தார்.
 • சம்பரான் சத்தியாகிரகத்தின் வெற்றியை அடுத்து 1918 இல் அகமதாபாத் மில் வேலைநிறுத்தம், 1918 இல் கேதா சத்தியாகிரகம் ஆகியன காந்தியடிகளை ஒரு மக்கள்தலைவராக உருவாக்கின.

14.ரௌலட் சட்டம் என்றால் என்ன? அதன் விளைவான ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி விளக்குக.

ரௌலட் சட்டம்; –

 • இந்தியர்களுக்கு உண்மையில் அதிகாரங்களை பரிமாற்றம் செய்யாததால் 1919ஆம் ஆண்டின் இந்திய அரசுச்சட்டம் ஏமாற்றத்தை அளித்தது.
 • மேலும், அரசானது போர்க்காலக் கட்டுப்பாடுகளை நிரந்தரமாக விரிவுபடுத்தி அமல்படுத்தத் தொடங்கியது.
 • பிடி உத்தரவு இல்லாமல் கைது நடவடிக்கை, விசாரணை இல்லாமல் சிறையிலடைப்பது என காவல் துறையினருக்கு அதீத அதிகாரங்களை ரௌலட் சட்டம் வழங்கியது.
 • இந்தச் சட்டத்தை கருப்புச் சட்டம்’ என்றழைத்த காந்தியடிகள் அதனைஎதிர்த்து நாடு தழுவிய சத்தியாகிரகப் போராட்டத்துக்கு 1919 ஏப்ரல் 6 இல் அழைப்புவிடுத்தார்.
 • இது உண்ணாவிரதமிருத்தல் மற்றும் பிரார்த்தனையுடன் கூடிய ஒரு அகிம்சை போராட்டமாக இருத்தல் வேண்டும்.
 • ரௌலட் சட்டத்துக்கு எதிரான போராட்டம் பஞ்சாபில் குறிப்பாக அமிர்தசரஸ் மற்றும் லாகூரில் தீவிரமடைந்தது.
 • காந்தியடிகள் கைது செய்யப்பட்டதுடன் பஞ்சாபிற்குள் நுழையவிடாமலும் தடுக்கப்பட்டார்.
 • ஏப்ரல் 9ஆம் நாள்டாக்டர். சைஃபுதீன் கிச்லு, டாக்டர். சத்யபால் என்ற இரண்டு முக்கிய உள்ளூர் தலைவர்கள் போராட்டத்திற்கு தலைமையேற்றதால் அமிர்தசரஸில் கைது செய்யப்பட்டனர்.
 • அதனையடுத்து நடந்த போராட்டங்களில் சில ஐரோப்பியர்கள் கொல்லப்பட்டனர். படைத்துறைச் சட்டம் அறிவிக்கப்பட்டது.

ஜாலியன் வாலாபாக் படுகொலை;-

 • அமிர்தசரஸில் உள்ள ஜாலியன் வாலாபாக்கில் 1919 ஏப்ரல் 13ஆம் நாள் ஒரு பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 • பைசாகி திருநாளில் (சீக்கியர்களின் அறுவடைத் திருநாள்) இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான கிராம மக்கள் அங்கு கூடியிருந்தனர்.
 • இந்தக் கூட்டம் பற்றி அறிந்தவுடன் அந்த இடத்தை பீரங்கி வண்டி மற்றும் ஆயுதமேந்திய வீரர்களுடன் ஜெனரல் ரெஜினால்டு டயர்சுற்றி வளைத்தார்.
 • உயர்ந்த மதில்களுடன் அமைந்த அந்த மைதானத்துக்கு இருந்த ஒரே வாயில் பகுதியை ஆக்ரமித்த ஆயுதமேந்திய வீரர்கள் எந்தவித முன்னெச்சரிக்கையுமின்றி கண்மூடித்தனமாக சுடத்தொடங்கினார்கள். துப்பாக்கிகளில் குண்டுகள் தீரும் வரை தொடர்ந்து 10 மணித்துளிகளுக்கு இந்தத் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்தது.
 • அதிகார பூர்வ அரசு தகவல்களின் படி 379 பேர் இந்தத் துப்பாக்கிச்சூட்டில்
 • கொல்லப்பட்டனர்; ஓராயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
 • ஆனால் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் இந்தத் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கையை ஓராயிரத்துக்கும் அதிகம் என்று தெரிவித்தது.
 • இந்தக் கொடுமைகள் இந்தியர்களை கொதித்தெழச்செய்தது. இரபீந்திரநாத் தாகூர் வீரத்திருமகன் (knighthood) என்ற அரசுப் பட்டத்தைதிருப்பிக் கொடுத்தார். கெய்சர்-இ-ஹிந்த் பதக்கத்தை காந்தியடிகள் திருப்பிக் கொடுத்தார்.

15. தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம் பற்றி கூறுக

 • வங்கப் பிரிவினையால் தோன்றிய சுதேசி இயக்கம் தமிழ்நாட்டில் ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது
 • அந்நிய பண்டங்கள் புறக்கணித்தல் நடவடிக்கைகள்
 • பாரதியாரின் தேசபற்று பாடல்களின் எழுச்சி
 • சுதேசி கருத்துக்களை பரப்ப சுதேசமித்திரன், இந்தியா போன்ற இதழ்கள் தோன்றின
 • சுதேசி இயக்கத்தில் மாணவர்கள், இளைஞர்கள் சேர்ந்தனர்
 • சுதேசி நீராவி கப்பல் கம்பெனியை வ.உ.சி தொடங்கினார்
 • திருநெல்வேலிகலகம் போராட்டத்தை அதிகரித்தது
 • ஒத்துழையாமை இயக்கத்தில் ராஜாஜியும், பெரியாரும் துடிப்புடன் செயல்பட்டனர்
 • வரிகொடா இயக்கமும், அந்நிய பொருட்கள் புறக்கணிப்பு தமிழகம் முழுவதும் நடந்தது.
 • ஐரோப்பியருக்குச் சொந்தமான கோரல் நூற்பாலையில் வேலைநிறுத்தம் நடைபெற்றது.
 • சுப்பிரமணிய சிவாவும், வ.உ.சி.யும் கைது செய்யப்பட்டனர்.
 • இத்தலைவர்களின் கைது செய்தி பரவியதால் திருநெல்வேலியில் கலகம் வெடித்தது.
 • காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு நபர்கள் கொல்லப்பட்டனர்.
 • சிறைத் தண்டனையைத் தவிர்ப்பதற்காக சில தலைவர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறினர்.
 • பாரதியார் பாண்டிச்சேரிக்குத் தப்பிச் சென்றார்.
 • ஆங்கிலேயரின் கொடுரமான அடக்குமுறையால் சுதேசி இயக்கம் முடிவுக்கு வந்தது.

16. தமிழ் மறுமலர்ச்சி பற்றி விளக்குக

 • காலனியாதிக்கத்தின் போது தமிழ் மறுமலர்ச்சியில் பண்பாடு, மனிதநேயம், கலாச்சாரம் போன்ற மாற்றத்தை தமிழ்நாடு அனுபவித்தது
 • நவீன தமிழ்நாடும் அத்தகைய வரலாறு மாற்றத்தை அனுபவித்தது.
 • இது தமிழ்மொழி கலாச்சாரம், அதன் அடையாளத்தை மாற்றி அமைத்தது.
 • அச்சு இயந்திரம் வருகை, தமிழ்மொழி மீதான ஆய்வுகள் தமிழ் மறுமலர்ச்சிக்கு உதவின
 • ஐரோப்பிய மொழிகள் தவிர அச்சில் ஏறிய முதல் மொழி தமிழ்மொழியே ஆகும்
 • 1578 இல் தம்பிரான் வணக்கம் எனும் நூல் கோவாவில் வெளியிடப்பட்டது. திருக்குறள் 1812இல் புத்தகமாக வெளிவந்தது.
 • பண்டைய தமிழ் இலக்கியங்களை வெளியிடுவதில் தமிழ் அறிஞர்களிடையே
 • புத்தெழுச்சி ஏற்பட்டது.
 • பண்டைய தமிழ் இலக்கியங்கள் வெளியிட கீழ்கண்ட தமிழ் அறிஞர்கள் அரும்பாடு பட்டனர் சி.வை.தாமோதரனார், உ.வே.சாமிநாதனார் (தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள்)
 • பழம்பெரும் நூல்கள் வெளியிடப்பட்டது தமிழ் மக்களின் வரலாறு, மரபு, மொழி, இலக்கியம், சமயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது
 • தமிழர்களின் அடையாளம் அச்சு வடிவிலான பண்டை தமிழ் நூல்களால் வெளிவந்தன
 • கால்டுவெல்லின் தமிழின் தொன்மையும், பி.சுந்தரனார், திரு.வி.க. பாரதிதாசன், பரிதிமாற்கலைஞர், மறைமலையடிகள் போன்றோரின் பங்கும் தமிழ் மறுமலர்ச்சிக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் உதவின

17. சுயமரியாதை இயக்கம் பற்றி விளக்குக

 • சுயமரியாதை இயக்கம் அன்று நிலவிய சமூக, அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளில் இருந்த சீர்கேடுகளை விமர்சனம் செய்ததோடு தமிழ்நாட்டில் பிராமணர் அல்லாதவர்களின் மேம்பாட்டிற்கான ஒரு திட்டத்தையும் அறிமுகம் செய்தது.
 • சடங்குகளும் சம்பிரதாயங்களும் இல்லாத சாதிகளற்ற பிறப்பின் அடிப்படையிலான பாகுபாடற்ற ஒரு சமூகத்தை இவ்வியக்கம் ஆதரித்தது.
 • பகுத்தறிவும் சுயமரியாதையும் அனைத்து மனிதர்களின் பிறப்புரிமை எனப் பிரகடனம் செய்த இவ்வியக்கம் சுயாட்சியைக் காட்டிலும் இவை முக்கியமானவை எனும் கருத்தை உயர்த்திப் பிடித்தது.
 • பெண்களின் தாழ்வான நிலைக்கு எழுத்தறிவின்மையே காரணம் என அறிவித்த அவ்வியக்கம் அனைவருக்கும் கட்டாயத் தொடக்கக்கல்வியை வழங்கும் பணிகளை மேற்கொண்டது.
 • பெண்களை அதிகாரம் உள்ளவர்களாக மாற்றுவதற்கு இயக்கம் நடத்திய சுயமரியாதை இயக்கத்தினர் சமூகத்தில் நிலவிய மூடநம்பிக்கைகளைக் கேள்விகளுக்கு உட்படுத்தினர்,
 • இவ்வியக்கம் பெண் விடுதலை கோருதல், மூடநம்பிக்கைகளைநீக்குதல் மற்றும் பகுத்தறிவை வலியுறுத்துதல் போன்ற கோரிக்கைகளை கோரியது. மேலும் இவ்வியக்கம் சீர்திருத்தத் திருமணம் அல்லது சுயமரியாதைத் திருமணங்களை ஆதரித்தது.
 • சுயமரியாதை இயக்கச் சொற்பொழிவுகளின் மையப் பொருளாக இருந்தது ‘இனம்’ ஆகும்.
 • சுயமரியாதை இயக்கம் பிராமணர் அல்லாத இந்துக்களின் நலன்களுக்காக மட்டுமல்லாமல் இஸ்லாமியர்களின் நலனுக்காகவும் போராடியது.
 • இஸ்லாம் சமூகத்தில் சீர்திருத்த முன் முயற்சிகள் மேற்கொண்ட துருக்கியைச் சேர்ந்த முஸ்தபா கமால் பாட்சா, ஆப்கானிஸ்தானத்தைச் சேர்ந்த அமானுல்லா ஆகியோரை திராவிட முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டுமென பெரியார் கூறினார்.

18.சமூக முன்னேற்றத்தில் பெரியார் ஈ.வெ.ரா. வின் பங்களிப்புகளை சுருக்கமாக எழுதுக?

 • பெரியாரின் இந்தி எதிர்ப்பு நிலைப்பாடு;- தென்னிந்தியாவிலுள்ளசாதிமுறையானது வடஇந்தியப் பிராமணர்களின் வருகையோடு தொடர்புடையது எனபெரியார்வலியுறுத்தினார்.
 • பண்டையத் தமிழ்ச்சமூகம் திணைகளை (நிலப்பகுதிகள்) அடிப்படையாகக் கொண்ட வேறுவகைப்பட்ட அடுக்கமைவைக் கொண்டிருந்தாக அவர்கூறினார்.
 • அம்முறை சுற்றுச்சூழல், வாழ்வாதாரத்திற்கானவழிகள், மக்கள் மேற்கொண்ட தொழில் ஆகியவற்றால் தீர்மானிக்கப்பட்டிருந்தது என்றும் கூறினார்.
 • வட இந்திய எதிர்ப்பானது பெரியாரைஇந்தி எதிர்ப்பு நிலைபாட்டை மேற்கொள்ள வைத்தது.

சமயம் குறித்து பெரியார்; –

 • முன்னேற்றமும் நீதியும் வழங்கப்பட வேண்டுமாயின் சமயம் ஒழிக்கப்பட வேண்டியதன் தேவையைப் பெரியாரின் அனுபவங்கள் அவருக்குக் கற்றுக் கொடுத்தன.
 • ஏற்கனவே நிறுவப்பட்டிருந்த நடைமுறைகளான, நம்பிக்கை பண்பாடு, மரபு
 • போன்றவற்றை கட்டுடைப்பதற்குப் பெரியார் நாத்திகவாதத்தை முன் வைத்தார்.

பெரியார், ஒரு பெண்ணிய வாதி; –

 • குழந்தை திருமணம், தேவதாசி முறையை எதிர்த்தார்.
 • பெண்களுக்கு விவாகரத்து பெறுதல், சொத்துரிமை கொடுப்பதில் பங்கு உண்டு என வலியுறுத்தினார்
 • பெண்களின் மோசமான நிலைக்கு குரல் கொடுத்தார்
 • குடும்ப கட்டுப்பாடு, கருத்தடை ஆதரித்தார்
 • பெண்ணுக்கு தாய்மை பெருஞ்சுமை என கூறினார்.

19. i) தென்னாப்பிரிக்க தேசிய அரசியலின் எழுச்சி வளர்ச்சி குறித்து விவரிக்கவும்

ii) சமூக சீர்திருத்தத்திற்கு ஈஸ்வர சந்திர வித்யாசாகரின் பங்களிப்புகளை குறிப்பிடுக

i) தேசிய அரசியலின் எழுச்சி;

 • யூனியனிஸ்ட் கட்சி, தென்னாப்பிரிக்க கட்சி என தென்னாப்பிரிக்காவில் இரு கட்சிகள் இருந்தன.
 • தென்னாப்பிரிக்க கட்சி ஆங்கிலேயரின் ஒத்துழைப்புடன் ஆட்சியை நடத்தியது. ஆனால் இக்கட்சியின் ஒரு பிரிவினர் தேசிய கட்சியை தொடங்கினர்
 • 1920- தேர்தல் தேசிய கட்சி 44 இடங்களும், தென்னாப்பிரிக்க கட்சி 41 இடங்களையும் வென்றது
 • ஆனால் யூனியனிஸ்ட் கட்சி, தென்னாப்பிரிக்க கட்சியுடன் இணைந்ததால் தேசிய கட்சியை விட பெரும்பான்மை பெற்றது.

தேசிய அரசியலின் வளர்ச்சி;

 • 1924 தேர்தல் தேசிய கட்சி வென்றது
 • தேசிய கட்சிக்கு தொழிலாளர் இயக்கம் அளித்த ஆதரவை விலக்கிக் கொண்டது
 • நாட்டின் பொருளாதார பிரச்சனையை தீர்க்க 1934-ல்தென்னாப்பிரிக்க கட்சியும், தேசியக் கட்சியும் இணைந்து சவுத் ஆப்பிரிக்க பார்ட்டி என எதிர்கட்சியானது

ii) ஈஸ்வர சந்திர வித்யாசாகரின் சமூக சீர்திருத்தங்கள்:

 • வங்காளத்தை சேர்ந்த முதன்மையான சீர்திருத்தவாதி ஈஸ்வர சந்திர வித்யாசாகர் ஆவார்.
 • இவர் இந்து மறைநூல்களே முற்போக்கானவை என வாதிட்டார். விதவைகளை எரிப்பதும் விதவை மறுமணத்தை தடை செய்வதும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதற்கு மறைநூல்களிலிருந்தே சான்றுகளை முன்வைத்தார்,
 • பெண்கல்வியை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார்.
 • இவர் பெண்களுக்கென பள்ளிகள் நிறுவப்பட உதவிகள் செய்தார்.
 • இந்து சமூகத்தில் குழந்தைப் பருவத்திலேயே விதவைகளான சிறுமிகளின் வாழ்வை மேம்படுத்துவதற்காகவே தனது முழு வாழ்வையும் அர்ப்பணித்தார். பண்டித ஈஸ்வர சந்திர வித்யாசாகர் தலைமையேற்ற இயக்கத்தின் விளைவாய் 1856இல் மறுமண சீர்திருத்தச்சட்டம் இயற்றப்பட்டது.

20. i) ஜெர்மனியுடன் தொடர்புடைய வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் சரத்துக்களை கோடிட்டு காட்டுக

ii) தமிழ்நாட்டில் ரௌலட் சத்தியாகிரக நிகழ்வுகளை தொகுத்து எழுதுக i)வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் சரத்துக்கள்;

 • ஜெர்மனி இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்
 • ஜெர்மனி படை வீரர்கள் சுருக்கப்பட்டு, சிறிய கப்பற்படை வைக்க அனுமதி ஆஸ்திரிய-ஜெர்மனி ஒருங்கிணைப்புக்கு தடை
 • ஜெர்மனியின் காலனி நாடுகளின் உரிமையை நேச நாடுகள் பெற்றன.
 • ஜெர்மனியின் அல்சேஸ், லொரைன் பகுதிகள் பிரான்சிடம் ஒப்படைப்பு
 • ஜெர்மனியின் டான்சிக் துறைமுகம் சர்வதேச சங்கத்திடம் ஒப்படைப்பு
 • ஆஸ்திரிய சுதந்திரத்தை ஜெர்மனி அங்கீகரித்தல்

ii) தமிழ்நாட்டில் ரௌலட் சத்தியாகிரக நிகழ்வுகள்: –

 • 1919 மார்ச் 18 இல் மெரினா கடற்கரையில் நடைபெற்ற கூட்டத்தில் காந்தியடிகள் உரையாற்றினார்.
 • 1919 ஏப்ரல் 6 இல் ‘கருப்புச் சட்டத்தை எதிர்க்கும் நோக்கில் கடையடைப்பும் வேலை நிறுத்தங்களும் நடத்தப்பட்டன.
 • தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னை நகரின் பல பகுதிகளிலிருந்து தொடங்கிய ஊர்வலங்கள் மெரினா கடற்கரையில் ஒன்றிணைந்து பெரும் மக்கள் கூட்டமானது. அந்நாள் முழுவதும் உண்ணாவிரதமும் பிரார்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
 • சென்னை சத்தியாகிரக சபை என்ற அமைப்பும் நிறுவப்பட்டது. ராஜாஜி, கஸ்தூரிரங்கர் S.சத்தியமூர்த்தி, ஜார்ஜ் ஜோசப் ஆகியோர் கூட்டத்தில் உரை நிகழ்த்தினர்.
 • தொழிலாளர்களுக்கென தனியாக நடத்தப்பட்ட கூட்டமொன்றில்                V. கல்யாணசுந்தரம் B.P. வாடியா, வ.உ.சி ஆகியோர் உரையாற்றினர்.
 • தொழிலாளர்களும், மாணவர்களும், பெண்களும், பெருவாரியான எண்ணிக்கையில் பங்கேற்றதே இவ்வியக்கத்தின் முக்கிய அம்சமாகும்.

21.i) சிவகங்கையின் துன்பகரமான வீழ்ச்சிக்குக் காரணமானவற்றை ஆய்ந்து அதன் விளைவுகளை எடுத்தியம்புக

ii) காந்திய இயக்கத்தின் ஒரு சிறந்த உதாரணமாக சட்டமறுப்பு இயக்கம் குறித்து விரிவாக ஆராயவும்

i)சிவகங்கையின் துன்பகரமான வீழ்ச்சிக்குக் காரணமானவை;

 • சிவகங்கை மாவட்டம் களையார் கோயிலை தலைமையிடமாக கொண்டு மருது சகோதரர்கள் பிரிட்டிஷாரை எதிர்க்க முற்பட்டனர்,
 • கம்பெனி ஆட்சி எதிர்ப்பு மற்றும் கட்டபொம்மனுக்கு ஆதரவு, என இவர்களின் போக்கு சிவகங்கை வீழ்ச்சிக்கு வழி வகுத்தது.
 • கட்டபொம்மனின் சகோதரர்களான ஊமைத்துரை, செவத்தையாவுக்கு மருது சகோதரர்கள் அடைக்கலம் கொடுத்தது கம்பெனி ஆட்சிக்கு பிடிக்காமல் அவர்களை ஒப்படைக்குமாறு கம்பெனி வற்புறுத்தியது.
 • இதை மறுத்து 1801ல் நாட்டின் விடுதலைக்காக திருச்சிராப்பள்ளி பேரறிக்கையை வெளியிட்டனர்.
 • சில பாளையக்காரர்களுடன் மருது சகோதரர்கள் படையும், சில பாலையக்காரர்களுடன் கம்பெனி படையும் போரிட்டன.
 • கம்பெனியில் தொடர் தாக்குதலால் மருது சகோதரர்கள் படைகள் தோற்கடிக்கப்பட்டு சிவகங்கை பிரிட்டீஷ் கம்பெனியுடன் இணைந்தது.
 • 1801-அக்டோபர் 24ல் திருப்பத்தூரில் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டவுடன் சிவகங்கையின் துயரமான வீழ்ச்சி முடிவடைந்தது.

ii) காந்திய இயக்கத்தின் ஒரு சிறந்த உதாரணமாக சட்டமறுப்பு இயக்கம்

 • 1929ல் லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் முழு சுதந்திரம் என்பது இலக்காக அறிவிக்கப்பட்டது
 • இதன்படி வரிகொடா இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம் மூலம் வன்முறையின்றி சுதந்திரம் அடைய உறுதிமொழி ஏற்கப்பட்டது.
 • முக்கிய கோரிக்கையாக உப்பு வரியை ரத்து செய்யுமாறு காந்தியடிகள் அரச பிரதிநிதியிடம் அளித்தார்.
 • பதில் அளிக்காததால் சட்ட மறுப்பு இயக்கத்தை தீவரப்படுத்தினார்.
 • பெண்கள், பலபிரிவு மக்களுடன் தண்டி யாத்திரையை தொடங்கி உப்பு காய்ச்சி தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
 • ஆனால் காந்தியடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அவரின் புகழ் இந்திய அளவில் உயர்ந்தது.

22. i) பன்னாட்டுச் சங்கத்தின் தோல்விக்கான காரணங்களை குறிப்பிடுக?

ii) பூலித்தேவருடன் தொடர்புடைய களக்காடு போர் குறித்த நிகழ்வுகளை எழுதுக?

i) தோல்விக்கான காரணங்கள்:

 • சங்கத்திற்கென்று ராணுவம் இல்லை என்பதால் நான் எடுத்த முடிவுகளைநடைமுறைப்படுத்த அதனால் இயலவில்லை .
 • “கூட்டுப் பாதுகாப்பு” எனும் கோட்பாட்டை நடைமுறையில் செயல்படுத்தவேமுடியவில்லை.
 • சர்வாதிகாரிகளால் தலைமையேற்கப்பட்ட இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகள் சங்கத்தின் ஆணைகளுக்குக் கட்டுப்பட மறுத்தபோது, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் மட்டுமே உறுதியாகச் செயல்படும் நிலையிலிருந்தன.
 • இவ்வமைப்பு உட்ரோவில்சனின் சிந்தை செயல்வடிவமாக இருந்தபோதிலும் அவரால் தன்நாட்டையே ஒத்துக்கொள்ளச் செய்து சங்கத்தில் உறுப்பினராக்க முடியவில்லை.

ii) களக்காடு போர்: –

 • நவாப் கூடுதல் படைகளை மாபூஸ்கானுக்கு அனுப்பி திருநெல்வேலிக்குச் செல்லும் படையை பலப்படுத்தினார்.
 • மேலும் கம்பெனியின் 1000 சிப்பாய்களோடு நவாபால் அனுப்பப்பட்ட 600க்கும் மேற்பட்ட படை வீரர்களையும் மாபூஸ்கான் பெற்றார்.
 • மேலும் அவருக்கு கர்நாடகப் பகுதியிலிருந்த குதிரைப் படை மற்றும் காலாட்படையின் ஆதரவும் இருந்தது.
 • மாபூஸ்கான் களக்காடு பகுதியில் தனது படைகளை நிலைநிறுத்தும் முன்பாக திருவிதாங்கூரின் 2000 வீரர்கள் பூலித்தேவரின் படைகளோடு இணைந்தனர்.
 • களக்காட்டில் நடைபெற்றப் போரில் மாயூஸ்கானின் படைகள் தோற்கடிக்கப்பட்டன.

23. i)அடால்ப் ஹிட்லரின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி குறித்து ஒரு கட்டுரை வரைக

ii) 19-ம் நூற்றாண்டில் சீர்திருத்த இயக்கங்கள் நடைபெறுவதற்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகளை விவாதிக்கவும்.

i)ஹிட்லரின் எழுச்சி; –

 • முதல் உலகப்போருக்கு பின் வீழ்ந்த ஜெர்மனியை தன் பேச்சாலும், சொற்பொழிவாலும் மீண்டும் பழைய நிலைக்கு (இராணுவ புகழ்மிக்க) அழைத்து செல்வேன் என மக்களை ஈர்த்தார்.
 • தேசிய சோசலிஸ்ட் (நாஜிக்கள்) கட்சியை நிறுவினார்
 • ஜெர்மனியரேசுத்த ஆரியர் என்றும், ஆழமான யூத வெறுப்பை முன்வைத்து தன் ஆதரவை திரட்டினார்
 • இராணுவத்தையும், ஆயுதத்தையும் பெருக்கி நாட்டின் பொருளாதாரம் புத்துயிர் பெற செய்தார்
 • பலபோர்கள் புரிந்து 1933 முதல் 1945 வரை ஜெர்மனியை ஆட்சி செய்தார்

ஹிட்லரின் வீழ்ச்சி; –

 • இரண்டாம் உலகப்போரில் விமானப்படை போரில் தோற்றார், பிரிட்டன் படையெடுப்பை கைவிட்டார்.
 • ரஷ்யாவின் கடும் குளிரால் ஜெர்மனி தோற்றது
 • பிரான்சின் நார்மண்டிபோரில் ஜெர்மனி தோற்றது ஹிட்லர் 1945 ஏப்ரல் தற்கொலை செய்து கொண்டார்

ii) 19-ம் நூற்றாண்டில் சீர்திருத்த இயக்கங்கள் நடைபெறுவதற்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகள்; –

 • 19-ம் நூற்றாண்டில் இந்தியாவில் சமூக, சமய சீர்திருத்தங்கள் பல நடைபெற்றன.
 • இந்திய மக்கள் மேற்கத்திய கருத்துக்களால் (சமத்துவம், சுதந்திரம்) கவரப்பட்டனர்
 • எனவே நம் பண்பாட்டின் குறைகளை நீக்கி பழைய புகழை கொண்டு வர விரும்பினர்
 • நடுத்தர வர்கத்தினரின் மேற்கத்திய கருத்துக்கள், சிந்தனைகள்
 • இந்திய சீர்திருத்தவாதிகளின் இந்திய, மேற்கத்திய பண்பாட்டு இணக்க முயற்சி
 • சீர்திருத்த வாதிகளின் கருத்துக்கள் சதி பெண்சிசு கொலை, குழந்தை திருமணம் போன்ற சமூக தீமைகளை கட்டுபடுத்தின.
 • இச்சூழல் 19ம் நூற்றாண்டில் சீர்திருத்த இயக்கங்கள் உருவாகி நாட்டின் பழம்பெரும் கலாச்சாரத்தை மீட்க விரும்பின

24. i). சூயஸ் கால்வாய் சிக்கலைப் பற்றி நீவிர் அறிந்ததென்ன?

ii).தமிழ் மறுமலர்ச்சியின் தோற்றம், வளர்ச்சி குறித்து ஒரு கட்டுரை எழுதவும் i).சூயஸ் கால்வாய் சிக்கல் –

 • எகிப்தில் 1952 இல் நிகழ்ந்த ஒரு கிளர்ச்சியின் மூலமாக கர்னல் நாசர் குடியரசுத் தலைவராக ஆக்கப்பட்டார்.
 • அவர் 1956ஆம் ஆண்டில் சூயஸ் கால்வாயை தேசியமயமாக்கினார். இது பிரிட்டிஷாரின் நல்லெண்ணெத்திற்கு விரோதமாகத் தெரிந்தது. இராஜதந்திரப் பிரயோகங்கள் பலனளிக்காத நிலையில் பிரிட்டனும் பிரான்சும் இணைந்து இராணுவ பலத்தைப் பயன்படுத்த முடிவு செய்தன. இச்சூழலில் தனக்கு ஒரு வாய்ப்பு இருப்பதாகக் கருதிய இஸ்ரேல் தனது கப்பல் போக்குவரத்திற்க வசதியாக அக்கபா வளைகுடாவை திறந்துவிட்டதோடு அதன் மூலம் எகிப்தின் எல்லை மீறிய செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
 • இஸ்ரேலியப் படைகள் அக்டோபர் 29இல் எகிப்து மீது படையெடுத்தன. இவ்வாய்ப்பைப் பயன்படத்திக்கொள்ள நினைத்த பிரிட்டன் தனது படைகளைக் கால்வாயைக் காப்பாற்றும் வகையில் நிறுத்தி வைக்க அனுமதி கோரியது.

ii).தமிழ் மறுமலர்ச்சியின் தோற்றம் மற்றும்வளர்ச்சி; –

 • காலனியாதிக்கத்தின் போது தமிழ் மறுமலர்ச்சியில் பண்பாடு, மனிதநேயம், கலாச்சாரம் போன்ற மாற்றத்தை தமிழ்நாடு அனுபவித்தது
 • அச்சு இயந்திரம் வருகை, தமிழ்மொழி மீதான ஆய்வுகள் தமிழ் மறுமலர்ச்சிக்கு உதவின
 • ஐரோப்பிய மொழிகள் தவிர அச்சில் ஏறிய முதல் மொழி தமிழ்மொழியே ஆகும்
 • பண்டைய தமிழ் இலக்கியங்கள் வெளியிட கீழ்கண்ட தமிழ் அறிஞர்கள் அரும்பாடு பட்டனர் சி.வை.தாமோதரனார், உ.வே.சாமிநாதனார் (தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள்)
 • பழம்பெரும் நூல்கள் வெளியிடப்பட்டது தமிழ் மக்களின் வரலாறு, மரபு, மொழி, இலக்கியம், சமயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது தமிழர்களின் அடையாளம் அச்சு வடிவிலான பண்டை தமிழ் நூல்களால் வெளிவந்தன
 • கால்டுவெல்லின் தமிழின் தொன்மையும், பி.சுந்தரனார், திரு.வி.க.பாரதிதாசன், பரிதிமாற்கலைஞர், மறைமலையடிகள் போன்றோரின் பங்கும் தமிழ் மறுமலர்ச்சிக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் உதவின

DOWNLOAD PDF – Click Here

Leave a Comment