பள்ளி திறந்ததும் – வெ. இறையன்பு
கற்பது என்பது மூன்று வகையில் மாற்றங்களைக் கொண்டு வருவதாக அமையவேண்டும்.
1. மனநிலையில் மாற்றம்
2. அறிவு நிலையில் உயர்வு
3. திறனில் மேம்பாடு
கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறப்பதற்கான முதல் நாள் இரவு நமக்கு ஒருபோதும் இனிப்பதில்லை. நாளையிலிருந்து மறுபடியும் பள்ளிக்குப் போக வேண்டும் என்கிற நினைவே நமக்குக் கசக்கிறது.
அதே பள்ளிக்கூடம்
அதே வகுப்புகள்
மாதம் ஒருமுறை தேர்வு
மதிப்பெண்கள் எடுக்காவிட்டால் அப்பாவிடம் திட்டு. அம்மாவிடம் குறை பாட்டு என்று மறுபடியும் பழைய வாழ்க்கை .
இந்தக் கோடை விடுமுறை இவ்வளவு விரைவாக முடிந்திருக்க வேண்டுமா? என்று நினைக்கச் செய்கிறது.
பள்ளிக்கூடம் என்பது பரவசம் தருகிற இடமாக எப்போது மாறப்போகிறது?
பாடம் என்பது எப்போது சுயதேடலாகப் போகிறது?
நிச்சயம் அம்மாற்றத்தைக் காணுகிற தாரக மந்திரம் நம்முடைய கைகளில்தான் இருக்கிறது. அந்த இலக்கை நோக்கி நாம் நிச்சயம் செல்லமுடியும்.
தேர்வு வரும்வரைப் பொழுதை வெறுமனே கழித்தும் தேர்வுக்கு முதல்நாள் படித்துப் பிறவிப் பெருங்கடலைக் கடக்க முயற்சிகள் மேற்கொள்ளாமல் வெறும் மதிப்பெண்களுக்காக மட்டும் வாசிக்கும் வாலாயமான வாழ்வைத் தவிர்ப்பதன் மூலம் நாம் கற்பதைச் சுகமாக்கிக் கொள்ள முடியும்.
கற்பது என்பது மூன்று வகையில் மாற்றங்களைக் கொண்டு வருவதாக அமைய வேண்டும்.
1. மனநிலையில் மாற்றம்
2. அறிவுநிலையில் உயர்வு
3. திறனில் மேம்பாடு
Desirable change in skill, knowledge and attitude என்பதுதான் கற்றுக்கொள்வதன் சாராம்சம்.
நாம் இதுநாள் வரை கொண்டிருந்த கருத்துக்களிலிருந்து இந்த வளர்ச்சி நிகழாவிட்டால் படித்ததை அப்படியே ஒப்பித்தலால் எந்தப் பயனுமில்லை .
மொழிப்பாடமாக இருந்தாலும் சரி, அறிவியலாக இருந்தாலும் சரி, பூகோளமாக இருந்தாலும் சரி, இந்த மூன்று நிலைகளில் ஏதேனும் ஒரு மாற்றமாவது நிகழ்ந்து கொண்டிருக்கிறதா என்பதை நாம் கவனிக்கவேண்டும். அது நிரந்தரமான மாற்றத்தை நோக்கி நம்மை அழைத்துச் செல்வதாக அமைய வேண்டும்.
பள்ளி திறந்த முதல் நாளிலிருந்தே படிப்பைத் திட்டமிட்டுக் கொண்டால் கடைசி நேரத்தில் சுமையால் தள்ளாடவேண்டியதில்லை. அதுமட்டுமல்ல, ஆரம்பத்திலிருந்தே வாசிக்கத் தொடங்கினால் நாம் படிப்பவற்றைக் குறித்து விரிவாகவும், தெளிவாகவும் தெரிந்துகொள்ள அவகாசம் கிடைக்கும். முழுமையான புரிந்துகொள்ளுதல் ஏற்படும்போது நாம் வாசித்தவை நம் வீட்டின் முகவரியைப் போல மனத்திலிருந்து அகலாமல் அப்படியே நின்றிருக்கிறது. தள்ளிப்போட வேண்டாம்
மனம் எதையுமே தள்ளிப்போடுகிறது. சோம்பல், அயற்சி, ஆர்வமின்மை ஆகிய இம்மூன்றும் செய்ய வேண்டிய செயலை நாம் நாளை செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடச் செய்கிறது.
தேர்வுக்கு இன்னும் நிறைய நாட்கள் இருக்கின்றன. நாளைக்கு இன்னும் அரைமணி நேரம் சேர்த்துப் படித்துக்கொள்ளலாம். இன்று நண்பர்களுடன் ஜாலியாக விளையாடலாம். பொழுதைக் கழிக்கலாம் என்று முடிவு செய்து தள்ளிப்போடுவதற்கு ஆயிரம் சமாளிப்புகளை நாம் தயாரித்துக்கொள்கிறோம்.
இந்தமுறை ஒரு சங்கல்பம் செய்து கொள்ளலாம். பள்ளி திறந்த நாளிலிருந்தே நாம் படிப்பதைத் தொடங்கிவிடுவோம். படிப்பது என்பது தேர்வுக்காக மட்டுமல்ல – நிறைய தெரிந்து கொள்வதற்காக – நம்மை விருத்தி செய்து கொள்வதற்காக – வாழ்க்கைக்குமான அறிவைப் பெறுவதற்காக.
வகுப்பறையில் கவனிப்பது
ஒவ்வொரு நாளும் நடக்கின்ற பாடங்களை வகுப்பறையில் உற்றுக் கவனிப்பது அவசியம். நுண்ணறிவு (Intelligence) என்பது யாருக்கும் பாரம்பரியச் சொத்து அல்ல. நாம் இந்த நொடியிலேயே முழுமையாக இருக்கமுடியுமானால் நுண்ணறிவுடன் இருக்கமுடியும். இந்த நொடியில் நுண்ணறிவுடன் இருந்துவிட்டு அடுத்தநொடியிலேயே நுண்ணறிவு இழந்து விடவும் முடியும்.
தத்துவ மேதை ஜே. கிருஷ்ணமூர்த்தி கூறுவதுபோல் “Knowledge is past. Intelligence is present” – அறிவு காலத்தைச் சார்ந்தது; நுண்ணறிவு என்பது தற்சமயம் நிகழ்வது .
ஒவ்வொரு வகுப்பிலும் ஆசிரியர் பாடம் நடத்தும் போதும் உற்று கவனிப்பதும், அவருடன் பிறழாமல் பாடத்தைப் பின்தொடருவதும் அவசியம். படிப்பதைவிட கேட்கும்போது அதிக விழுக்காடு மனத்தில் நிற்கிறது என்பதே உண்மை .
நம் கவனத்தைச் சிதறவிடாமல் பாடத்தைக் கவனிப்பது நாம் படிக்கும் வேலையைச் சுலபமாக்குகிறது.
ஒவ்வொரு நாளும் பள்ளி முடிந்ததும் அன்று நடந்ததை அன்றே படித்து முடிப்பது – நாம் கவனித்ததை ஈரம் உலர்வதற்குள் வாசிப்பது – நமது ஞாபகத்திறனையும், அறிந்து கொள்ளும் ஆற்றலையும் அதிகரிக்கும். அதிக சக்தி விரயமாகாமல் அதிகப்பிரயத்தனங்கள் மேற்கொள்ளாமல் நாம் வாசிப்பை நிகழ்த்த இந்தப் பயிற்சி சாத்தியமாகும்.
ஆரம்ப காலங்களில் இது மிகவும் சிரமமானதாகவும், பூதாகரமான முயற்சியாகவும் தோன்றும். ஆனால் ஓரிரு வாரங்கள் இந்த முறைக்குப் பழக்கப்பட்டுவிட்டால் இது ஒரு பெரிய சுமையாக இருக்காது. நாம் ஒரு சுயக்கட்டுப்பாட்டுக்கு நம்மை உட்படுத்துகிற அதிசய மாற்றம் இதன் மூலம் சாத்தியப்படும். தினசரி இரண்டு மணிநேரம் போதும் –
ஒரு நாட்குறிப்பில் இன்று நடந்த பாடங்களை வரிசைக்கிரமமாகக் குறிப்பிட்டு அவற்றைப் படித்து முடிப்பதும் – படிக்கின்ற போதே முக்கியமானவற்றைக் குறிப்புகள் எடுப்பதும், நமக்கு ஏற்படுகின்ற சந்தேகங்களைக் குறித்துக்கொண்டு தெளிவு பெறுவதும், வேறு சில பத்திரிகைகள், புத்தகங்கள் ஆகியவற்றிலிருந்து தகவல்கள், சேகரிக்கவேண்டிய தலைப்புகள் பற்றிக் குறிப்பதும் – படிப்பு என்பது ஒரு இனிய வேள்வி என்பதை நமக்குப் புரியவைக்கும்.
வித்தியாசமான விடை
எல்லோரையும் போல வாழ்ந்தவர்கள் யாரும் சரித்திரத்தில் இடம்பெறவில்லை. உண்மையான இலட்சியவாதிகள் ஏற்கெனவே இருந்தவற்றை அப்படியே ஏற்றுக்கொள்பவர்களாக இல்லை.
அவர்கள் கேள்வி கேட்பவர்களாக இருந்தார்கள். எல்லாவற்றையும் வினாவுக்கு உட்படுத்துபவர்களாகவும், மறுவாசிப்புக்கு உட்படுத்துபவர்களாகவும் இருந்ததால்தான் அவர்கள் தங்கள் பங்களிப்பைச் செய்ய முடிந்தது.
தேர்வுகளில் கூட வழக்கமாக எல்லோரும் எழுதும் விடைகள் எழுதுவதால் எந்தப் பயனும் இல்லை . நம் விடை தனித்தும், அழகாகவும், கூடுதலான ஒரு தகவலைத் தன் நெற்றியில் சுமந் கொண்டும் இருக்கவேண்டும். நாம் கேள்வியைத் தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கிறோம் என்பது இதுவரை வாசித்த விடைகளிலிருந்து சற்று வேறுபட்டிருப்பதிலிருந்தே திருத்துபவருக்குப் புரிந்துவிடும்.
வித்தியாசமான, நேர்த்தியான விடைக்கு நாம் பாடப்புத்தகத்தை மட்டும் வாசிப்பது போதாது. தொடர்புடைய புத்தகங்களை வாசிக்கவேண்டும். ஏதேனும் ஒரு கூடுதல் செய்தியைச் சேகரிக்க வேண்டும். அது அபரிமிதமான செய்தியாக இருக்கவேண்டும்.
நாம் எழுதுகின்ற விடையும் நேர்த்தியாகப் பின்னப்பட வேண்டும். இவையெல்லாம் ஆரம்பத்திலிருந்தே அக்கறையுடன் நிகழும்போது எளிதில் நிறைந்தேறும்.
பாடப்புத்தகங்களைத் தாண்டிய வாசிப்பு அலுப்புத் தட்டாமல், சலிப்பு ஏற்படாமல், நம்மை மேலே அழைத்துச் செல்லும். நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் செல்லும். கல்வி, நம் தேடுதலைத் தீவிரப்படுத்தும். கேள்விகளைச் சுற்றி வளைத்துக் கேட்டாலும், மறைமுகமாகக் கேட்டாலும் நமக்கு அதிர்ச்சியைத் தராமல் நாம் அணுக உதவும். கேள்விகளைப் புரட்டிப் போடுவதாலோ, கழற்றி அடிப்பதாலோ நிலைகுலைந்து போகாமல், நாம் தைரியம் எதிர்கொள்ள நமக்குத் துணிவைத் தரும்.
நம்முடைய உபரி வாசிப்பு (extra reading) சப்தமில்லாமல் நம்மிடம் பல மாற்றங்களைச் செய்கிறது. சவ்வூடு பரவு போல நிகழ்கிற இந்த மாற்றம் நமக்குள் ஒரு பரிணாம வளர்ச்சியாக ஏற்படுகிறது. நம்முடைய வார்த்தைத்திறன், ஈடுபாடு, ஆர்வம், வெளிப்படுத்தும் தன்மை, புத்திக்கூர்மை ஆகியவற்றில் இயல்பாக பல முன்னேற்றங்களை இந்தக் கூடுதல் வாசிப்பு நிகழ்த்துகிறது.
படிப்பது என்பது பாடம் மட்டுமல்ல
படிப்பது என்பது வெறும் பாடப்புத்தகங்களோடு நின்று விடக்கூடாது. தினசரி செய்தித்தாளை நாம் வாசிக்கவேண்டும். நாட்டின் முக்கிய நடப்புகள், அன்றாடச் செய்திகள், விளையாட்டு, கலை, இலக்கியம் ஆகியவற்றில் முக்கியமானவை – நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியவை.
ஒருநாளுக்குக் குறைந்தபட்சம் ஒரு மணிநேரமாவது நாம் செய்தித்தாளை வாசிப்பதும் – முக்கிய சம்பவங்களைத் தனியாக ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறித்துக்கொள்வதும் முக்கியமான பகுதிகளைக் கத்தரித்துத் தனியாகச் சேகரிப்பதும் அவசியம்.
தினமும் இரண்டு புதிய சொற்களையேனும் கற்றுக்கொள்ள வேண்டும். மொழியின் வளமையையும், ஆளுகையையும் அதிகரித்துக் கொள்ளவும் செய்தித்தாள் மற்றும் வாராந்திர பத்திரிக்கைகளை வாசிப்பது உதவும். வாரந்தோறும் திருப்புதல்
ஒவ்வொரு வாரமும் நிகழ்ந்த பாடத்தை அந்த வார இறுதியில் ஒருமுறை திருப்பி வாசிப்பது நிறைவைத் தரும். அதன் மூலம் தேர்வு நேரத்தில் ஏற்கெனவே நன்றாக அறிமுகமானவற்றைப் படிக்கிற அனுபவம் ஏற்படும்.
அந்தந்த வாரங்களில் நடந்த பாடங்களை அந்தந்த வாரங்களிலேயே படித்து முடிப்பதன் மூலம் திட்டமிட்ட வழிமுறையைத் தேர்வுக்குச் சாதகமாக வகுக்கிற திருப்தியும் ஏற்படும்.
வார இறுதியில் நிகழ்த்தும் மறுவாசிப்பின் போது – ஒவ்வொரு பாடத்திலும் வரக்கூடிய கேள்விகளைப் பட்டியலிட்டு “Question bank” (கேள்வி வங்கி) தயாரிப்பது நல்லது.
ஒரு குறிப்பிட்ட கேள்வியை எப்படி அணுகினாலும் விடையளிக்கும் சாமர்த்தியத்தை அது நமக்கு அளிக்கும்.
நல்ல புத்தகங்கள்
பாடம், படிப்பு என்பதோடு வாழ்க்கையை நாம் குறுக்கி கொள்ளக்கூடாது. நல்ல பொழுதுபோக்கு ஒன்று நம்மைத் தளர்த்துவதாக, நம் பிரச்சினைகளிலிருந்து விடுவிப்பதாக நமக்குப் புத்துணர்ச்சியையும், உற்சாகத்தையும் அளிப்பதாக அமைகிறது.
உடற்பயிற்சியோ , விளையாட்டோ நம்மைத் திடகாத்தரமாக வைத்துக் கொள்ள அவசியம். வியர்வை வெளிவரும்படியான உடற்பயிற்சியும் அதன் பிறகு நல்ல குளியலும், நம்மைப் புதிதாகப் பிறக்க வைக்கிறது. சோர்வும், சோம்பலும் அண்டாமல் நம்மைக் குருவியைப் போல மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
மிகச் சிறந்த நூல்களைத் தேர்ந்தெடுத்து நாம் வாசிப்பது நம் தன்னம்பிக்கையை மேம்படுத்தும்.
ஆபிரஹாம் லிங்கன் வாழ்க்கையை ஒருமுறை படித்தால் நாம் படுகிற துயரமெல்லாம் ஒன்றுமில்லை என்பது தெரியும். அவர் அமெரிக்க ஜனாதிபதியாவதற்கு முன்பு எவ்வளவு தோல்விகளைச் சந்தித்தார் என்பதை எண்ணிப் பாருங்கள்.
அமெரிக்காவின் பதினாறாவது ஜனாதிபதியான ஆபிரஹாம் லிங்கனின் நம்பமுடியாத தொடர்ப்பயணம் :
குடும்பத்தைக் காப்பாற்ற உழைக்கவேண்டிய கட்டாயம் – 1816
அவர் தாய் மரணம் – 1818
தொழிலில் தோல்வி – 1831
சட்டசபைத் தேர்தலில் தோல்வி – 1832
பணி பறிப்பு – 1832
தன் நண்பர்களிடம் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த 17 வருட உழைப்பு – 1833 மறுபடியும் தேர்தலில் தோல்வி – 1834
திருமண நிச்சயம் – ஆனால் நிச்சயிக்கப்பட்ட பெண் இறப்பு – 1835 நரம்புத்தளர்ச்சியில் 6மாதம் மருத்துவமனையில் அனுமதி – 1836
சபாநாயகர் தேர்தலில் தோல்வி -1838
காங்கிரஸ் தேர்தலில் தோல்வி -1843
காங்கிரஸ் தேர்தலில் தோல்வி – 1846
காங்கிரஸ் தேர்தலில் தோல்வி – 1848
சட்ட அலுவலர் பணிக்கு நிராகரிப்பு – 1849
செனட் தேர்தலில் தோல்வி – 1854
துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு 100 ஓட்டுக்கும் குறைவாக வாக்குக் சேகரிப்பு -1856
மூன்றாம் முறையாக செனட் தேர்தலில் தோல்வி – 1858
அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்வு – 1860
மிகப்பெரிய மனிதர்களுடைய சுயசரிதம் நம் விழிகளை அகலமாகத் திறக்க வைக்கும். நமக்குள் மிகப்பெரிய வைராக்கியத் தீயையும், விடாமுயற்சியையும், ஆழ்ந்த லட்சியத்தையும் ஏற்படுத்த நிச்சயம் உதவும். சப்தமில்லாமல் நம் ஆழ் உள்ளத்தில் மிகப்பெரிய புரட்சியை உண்டாக்க இந்தத் தேர்ந்தெடுத்த நூல்கள் உதவும்.
தேர்ந்தெடுத்த பூக்களின் மகரந்தத்திலிருந்து சேகரித்த விலையுயர்ந்த தேன் போல – இந்தப் பெரிய மனிதர்களுடைய வாழ்விலிருந்து பொறுக்கி எடுத்த முத்துக்கள் நம்மை மேன்மைப் படுத்தும்.
காந்தி –
லெனின் –
சார்லஸ் ப்ராட்லா –
தாமஸ்பெய்ன் –
இப்படி உலகத்தின் போக்கில் உயர்ந்த லட்சிய ரேகை பதித்தவர்கள் எல்லோருமே ஒரு மிகப்பெரிய சோதனைக் கட்டத்தைத் தாண்டித்தான் வெற்றிக்கனியைப் பறித்திருக்கிறார்கள். பலர் அவர்கள் வாழும் காலத்தில் தோல்வியைத் தழுவினாலும் அதை மீறித் தாங்கள் எடுத்துக்கொண்ட கொள்கைக்காக வீழ்ந்தவர்கள் – உயிர்விட்டவர்கள்.
தயிர் சாதத்திற்குள் இருக்கும் ஊறுகாயைப் போல இந்தப் புத்தகங்கள் நம்முடைய பாடத்திட்டத்தின் வாசிப்பை இன்னும் சுவாரசியமாக்கும். நாம் படிக்கும் பாடங்களின் உட்பொருளை இன்னும் தீவிரப்படுத்தும்.
பள்ளி ஆய்வாளர் வருகையின் போது ஆசிரியரே வற்புறுத்தியும், பார்த்து எழுதாத காந்தியின் நேர்மை நம்மை விசாலப்படுத்தும்.
ஒருமுறை மன்னிப்புக் கேட்டிருந்தால் இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம். ஆனால் வாழ்விலும் பெரிது நாட்டுப்பற்று என உயிர் துறந்த பகத்சிங்கின் வீரம் இன்னும் செறிவானது.
வாழ்க்கை என்னும் மிகப் பெரிய தேர்வின் ஒரு சின்ன ஒத்திகைதான் நாம் பாடத்திட்டத்தில் சந்திக்கின்ற தேர்வுகள் என்பது புரிந்துபோகிறபோது பயமும் இருப்பதில்லை – பதற்றமும் தோன்றுவதில்லை.
DOWNLOAD PDF – Click Here