வகுப்பு : 10 – முதல் இடைப் பருவத் தேர்வு – ஆகஸ்ட் – 2022
தமிழ் – விடைக்குறிப்பு – விழுப்புரம் மாவட்டம்
மொத்த மதிப்பெண்கள் : 50
பகுதி –I
I சரியான விடையைத் தெரிவு செய்து குறியீட்டுடன் எழுதுக. 7X1=7
1. பின்வருவனவற்றுள் முறையான தொடர்
(இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு
2. ‘வேர்டுஸ்மித்’ என்பதன் பொருள்
(இ) எழுத்தாளி
3. காசிக்காண்டம் என்பது
(இ) காசி நகரத்தின் பெருமையைக் குறிக்கும் நூல்
4. “இங்கு நகரப் பேருந்து நிற்குமா?” வழிப்போக்கர் கேட்பது “அதோ, அங்கே நிற்கும்” என்று மற்றொருவர் கூறுவது
(இ) அறியா வினா, சுட்டு விடை
5.செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களைப் பொருள்கொள்வது ——பொருள்கோளாகும்.
(இ) கொண்டு கூட்டுப் பொருள்கோள்
பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.
மகரந்தத் தூளைச் சுமந்துகொண்டு, மனத்தை
மயலுறுத்து கின்ற இனிய வாசனையுடன் வா ;
இலைகளின் மீதும், நீரலைகளின்மீதும் உராய்ந்து, மிகுந்த
ப்ராண் ரஸத்தை எங்களுக்குக் கொண்டு கொடு,
6.மயலுறுத்து – பொருள் தருக.
(இ) மயங்கச்செய்
7. இப்பாடலில் இடம்பெற்றுள்ள அடிமோனைச் சொற்கள்
(ஆ) மகரந்தத் – மயலுறுத்து
பகுதி – II மதிப்பெண்கள் – 8
பிரிவு – 1
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. (2×2=4)
8. விடைக்கேற்ற வினாவினை அமைக்க.
அ) செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு கணினிச் செயல்திட்ட வரைவு ஆகும்.
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன ?
ஆ) கிழக்கு என்பதற்குக் குணக்கு என்னும் பெயருமுண்டு
கிழக்கு என்பதன் வேறு பெயர் என்ன ?
9. “கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன்பால்
பொழிந்த பெரும் காதல்மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென்சொல்”
இவ்வடிகளில் கழிந்த பெரும் கேள்வியினான் யார்? காதல்மிகு கேண்மையினான் யார்?
கழிந்த பெரும் கேள்வியினான் : குசேலப் பாண்டியன்
காதல்மிகு கேண்மையினான் : இடைக்காடனார்
10. ‘பல்லார்’ எனத் தொடங்கும் குறளினைப் பிழையின்றி எழுதுக.
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.
பிரிவு 2
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க. 2×2=4
11. வேங்கை – என்பதைத் தொடர் மொழியாகவும் பொது மொழியாகவும் வேறுபடுத்துக.
- வேங்கை என்னும் சொல், வேம் + கை என்று பிரிந்து நின்று வேவுகின்ற கை என்ற பொருளைத் தருவதால் அது தொடர்மொழி. (ஒன்றிற்கு மேற்பட்ட சொற்கள் தொடர்வதால்)
- வேங்கை என்னும் அதே சொல் தனித்து நின்று(பிரிவுபடாமல் நின்று) மரத்தைக் குறிப்பதால் அது தனிமொழி.
- இவ்வாறு வேங்கை என்னும் ஒரே சொல் தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாக வருவதனால் அது பொதுமொழி.
12. அகராதியைக் கண்டு பொருள் எழுதுக.
- அ) கட்புள் – விழித்திருக்கும் பறவை
- ஆ) திருவில் – வானவில்
பகுதி III பிரிவு 1 (மதிப்பெண்கள் 9)
எவையேனும் ஒரு வினாவிற்கு மட்டும் சுருக்கமாக விடையளி. 1X3=3
13. பகுபத உறுப்பிலக்கணம் தருக.
பொறித்த – பொறி+த்+த்+அ
பொறி – பகுதி
த் – சந்தி
த் – இறந்தகால இடைநிலை
அ – பெயரெச்ச விகுதி
14. புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது – – – – இதுப்போல் இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.
- கத்தரி நாற்று சந்தையில் விற்கக் கண்டேன்.
- தென்னம்பிள்ளை வரிசையாக நடப்பட்டுள்ளது.
- ஏரிக்கரையில்நட்ட பனை, மடலியை விரித்து அழகாக அசைகிறது.
- வாழைக்கன்று நட்டு வைத்தால் நம் வாழ்வும் வளரும்.
- நெற்பைங்கூழ் மெல்ல வளர ஆரம்பித்துவிட்டது.
15. கீழ்க்காணும் உரையினைப் படித்து கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளிக்க.
தம் வீட்டிற்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்று உண்ண உணவும், இருக்க இடமும் கொடுத்து, அன்பு பாராட்டுவதே விருந்தோம்பல். விருந்தினர் என்றால் உறவினர் என்று இக்காலத்தில் கருதுகின்றனர். உறவினர் வேறு ; விருந்தினர் வேறு. முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர். அதனால்தான் ‘விருந்தே புதுமை’ என்று தொல்காப்பியர் அன்றே கூறியுள்ளார்.
அ) விருந்தினர் என்போர் யாவர்?
- முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர்.
ஆ) விருந்து குறித்து தொல்காப்பியர் கூறியது யாது?
- ‘விருந்தே புதுமை’ என்று தொல்காப்பியர் அன்றே கூறியுள்ளார்.
இ) இவ்வுரைப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பு ஒன்று தருக.
- விருந்தோம்பல்
பிரிவு 2
எவையேனும் ஒரு வினாவிற்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. 1X3=3
16. “மாளாத காதல் நோயாளன் போல்” என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.
- உவமை – ”மாளாத காதல் நோயாளன் போல் “
செய்தி
- உடலில் ஏற்பட்ட புண்ணை, மருத்துவர் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என நோயாளி நினைத்து அம்மருத்துவரை நேசிப்பதுபோல, வித்துவக்கோட்டு இறைவா, நீ எனக்கு நீங்காத துன்பத்தைத் தந்தாலும் அடியவனாகிய நான், உன் அருளையே எப்பொழுதும் எதிர்பார்த்து வாழ்கிறேன் என ஆழ்வார் கருதுவதாக இவ்வுவமைச் சுட்டுகிறது.
17. ‘விருந்தினனாக’ எனத் தொடங்கும் காசிக்காண்டம் பாடலினைப் பிழையின்றி எழுதுக.
விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்
திருந்துற நோக்கல் வருகஎன உரைத்தல்
எழுதல் முன் மகிழ்வன செப்பல்
பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்
போமெனில் பின் செல்வதாதல்
பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்
ஒழுக்கமும் வழிபடும் பண்பே.
– அதிவீரராம பாண்டியர்
பிரிவு – 3
எவையேனும் ஒரு வினாவிற்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. 1X3=3
18. “வேலொடு நின்றான் இடுவென்றது போலும்
கோலொடு நின்றான் இரவு” இக்குறளில் வரும் அணியினைச் சுட்டி விளக்கம் தருக.
உவமை அணி
விளக்கம்
உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் அமைந்து, உவம உருபு வெளிப்படையாக நின்று ஒப்புமைத் தோன்ற வருவது உவமையணி ஆகும்.
சான்று
வேலொடு நின்றான் இடுவென்றது போலும்
கோலொடு நின்றான் இரவு.
உவமை – வேலொடு நின்றான் இடுஎன்றது
உவமேயம் – கோலொடு நின்றான் இரவு
உவம உருபு – போலும்
சான்றின் விளக்கம்
ஆட்சி அதிகாரத்தைக் கொண்டுள்ள அரசன் தன் அதிகாரத்தைக் கொண்டு
வரிவிதிப்பது, வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்வதற்கு நிகராகும்.
பொருத்தம்
இக்குறளில் உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் அமைந்து, உவம உருபு வெளிப்படையாக நின்று ஒப்புமைத் தோன்ற வருவதால் இதில் உவமையணி பயின்று வந்துள்ளது.
பொதுத்தன்மை – கொடுங்கோன்மை
19. எண்ணுப்பெயர்களைக் கண்டு, தமிழ் எண்களில் எழுதுக.
ஐந்து சால்பு ஊன்றிய தூண்
நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி
ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது பரணி.
அ) ஐந்து சால்பு ஊன்றிய தூண் – ஐந்து – ௫
ஆ) நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி – நான்கு, இரண்டு – ௪ , ௨
இ) ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
மானவனுக்கு வகுப்பது பரணி – ஆயிரம் – ௧௦௦௦
பகுதி IV (மதிப்பெண்கள்-10)
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க. 2X5=10
20.“சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன்” என்ற தலைப்பில் உரை எழுதுக.
- அன்பும் பண்பும் நிறைந்த ஆன்றோர், சான்றோர் அனைவருக்கும் வணக்கம்.
- கவிதைகள் மூலம் பெறும் இன்பங்கள் எத்தனையோ! அதில் ஒன்று சந்த இன்பம்.
- ”ஓசை தரும் இன்பம் உவமையில்லா இன்பமடா” – என்று பாரதி கூறுவதைக் கம்பனின் கவிதைகளில் காணமுடிகிறது.
- “ஆழ நெடுந்திரை ஆறு கடந்து இவர் போவாரோ?” எனத் தொடங்கும் பாடலில், கம்பனின் சந்த இன்பத்தினைக் சிறப்பாகக் காண முடியும். அதுப்போலவே,
- “உறங்குகின்ற கும்பகன்ன! உங்கள் மாய வாழ்வெல்லாம் இறங்குகின்றது!” – எனத்தொடங்கும் பாடலில், உலக்கையால் மாறிமாறி இடிக்கும் ஒத்த ஓசையில் அமைந்த சந்தம், இடிக்கும் காட்சியைக் கண்முன் காட்டுகிறது.
- ”தாதுகுசோலை தோறும்” எனத் தொடங்கும் பாடலில், ஆற்றை இயற்கையின் தோற்றமாகக் காட்டாமல் ஓர் ஓவியமாகக் காட்டுகிறார்.
- “தண்டலை மயில்களாட” எனத் தொடங்கும் பாடலில், இயற்கை கொலுவிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வின் தோற்றமாகவே கம்பன் காட்டுகிறார்.
- “வண்மையில்லை” எனத் தொடங்கும் பாடலில், ஒன்றன் இருப்பால் இன்னொன்று அடையாளப்படுத்தப்படும் கம்பனின் உத்தி போற்றத்தக்கது.
- “வெய்யோன் ஒளி எனத் தொடங்கும் பாடலில் , இராமனின் மாநிற மேனியை மை, மரகதம், கார்மேகம், நீலக்கடல் என்றெல்லாம் புகழ்ந்து இறுதியில் என்னவென்று புகழ முடியாமல் “ஐயோ” எனப் புகழ்ந்து வியக்கிறான் கம்பன்.
21.மொழிபெயர்க்க.
அ ) If you talk to a man in a language he understands, that goes to his head. If you
talk to him in his own language that goes to his heart – Nelson Mandela.
- நீங்கள் ஒரு மொழியில் மனிதரிடம் பேசினால், அது அவரின் அறிவைச் சென்றடைவதால் அவர் புரிந்துகொள்வார். நீங்கள் அவருடைய சொந்த மொழியில் பேசினால், அது அவருடைய இதயத்தைத் தொடும். – நெல்சன் மண்டேலா.
ஆ ) Language is the road map of a culture. It tells you where its people come from
and where they are going – Rita Mae Brown.
- மொழி என்பது பண்பாட்டின் வழிகாட்டி. அது மக்கள் எங்கே இருந்து வந்தார்கள், எங்கே செல்கிறார்கள் என்பதைக் கூறும். – ரீட்டா மே பிரவுன்.
22. கொடுக்கப்பட்டுள்ள நூலக உறுப்பினர் படிவத்தினை நிரப்புக.
நூலக உறுப்பினர் படிவம்
விழுப்புரம் மாவட்ட நூலக ஆணைக்குழு
மைய/கிளை/ஊர்ப்புற நூலகம் மயிலம்
உறுப்பினர் சேர்க்கை அட்டை
அட்டை எண்: ———– உறுப்பினர் எண்: ————-
1. பெயர் : நிறைமதி
2. தந்தை பெயர் : சரவணன்
3. பிறந்த தேதி : 16.10.2005
4. வயது : 14
5. படிப்பு : பத்தாம் வகுப்பு
6. தொலைப்பேசி எண் : 8778115678
7. அஞ்சல் முகவரி : 27, பாரதித் தெரு, குன்னம்,
(அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்) வானூர், விழுப்புரம் மாவட்டம்,
604304.
நான் மயிலம் நூலகத்தில் உறுப்பினராகப் பதிவு செய்ய இத்துடன் காப்புத்தொகை ரூ 500/- சந்தா தொகை ரூ 200/- ஆக மொத்தம் ரூ 700/- ரொக்கமாகச் செலுத்துகிறேன். நூலக நடைமுறை மற்றும் விதிகளுக்குக் கட்டுப்படுகிறேன் என உறுதியளிக்கிறேன்.
இடம் : மயிலம், தங்கள் உண்மையுள்ள
நாள் : 14/11/2019. நிறைமதி.
திரு/ திருமதி/ செல்வி/ செல்வன் முகிலன் அவர்களை எனக்கு நன்கு தெரியும் எனச் சான்று அளிக்கிறேன்.
பிணைப்பாளர் கையொப்பம்
அலுவலக முத்திரை (பதவி மற்றும் அலுவலகம்)
பகுதி V (மதிப்பெண்கள் 16)
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க. (2X8=16)
23. தமிழ் இலக்கியவளம் அறிவியல் கருத்துகள் கல்வி மொழி – பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள் பிறதுறைக் கருத்துகள் – தமிழுக்குச் செழுமை. – மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு ‘செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை’ என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்கக் கட்டுரை எழுதுக.
தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை
பொருளடக்கம் |
முன்னுரை- தமிழ் இலக்கியவளம் – பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள் கல்வி மொழி அறிவியல் கருத்துகள் பிறதுறைக் கருத்துகள் தமிழக்குச் செழுமை முடிவுரை |
முன்னுரை
அறிவு என்பது பொதுவுடைமை. அது இந்த மொழிக்கே உரியது என்று கூறிவிட முடியாது. அவ்வகையில் பலமொழிகளில் காணப்படுகின்ற அறிவுக்களஞ்சியங்களாகிய இலக்கியங்களை மொழிபெயர்த்து தமிழுக்கு அழகு சேர்ப்பது குறித்து இக்கட்டுரையில் காண்போம்!
தமிழ் இலக்கியவளம்
உலகின் முதல் மனிதன் பேசிய மொழி தமிழ். அது இன்றளவும் செம்மையாக விளங்கி வருகிறது. அதற்கு அதன் இலக்கிய வளமே காரணமாகும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட சங்க இலக்கியங்கள் தொடங்கி இக்கால இலக்கியங்கள் வரையில் தமிழில் எண்ணிக்கையில் அடங்கா இலக்கியங்கள் உள்ளன.
பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள்
ஒரு மொழியில் தோன்றிய இலக்கியங்கள் அம்மொழியில் மட்டும் இருந்துவிடின் சிறப்பில்லை. அவ்விலக்கியங்கள் பல்வேறு நாட்டு மக்களையும் சென்றடையும்போதுதான் மேலும் அது சிறப்படைகிறது. ஜெர்மன் மொழியில், மொழி பெயர்ப்பின் மூலம் அறிமுகமான ஷேக்ஸ்பியர் இந்நாட்டு படைப்பாளர்களைப் போலவே கொண்டாடப்படுகிறார். நேரடி மொழிபெயர்ப்பாக பிரெஞ்சு, ஜெர்மனி, அமெரிக்கா, லத்தீன் முதலான நாடுகளின் நூல்கள் இன்று நமக்குக் கிடைக்கின்றன.
கல்வி மொழி
மொழிபெயர்ப்பை ஒரு கல்வியாக ஆக்குவதன் மூலம், அனைத்து உலக அறிவையும் நாம் எளிதாகப் பெறமுடியும். பலத்துறைசார்ந்த அறிவையும் தமிழ் மொழியின் சொல் வளத்தைக் கொண்டு மொழிபெயர்ப்பின் மூலம் உருவாக்கிக் கொள்ள முடியும். மனிதவளத்தை முழுமையாகப் பயன்படுத்த முடியும். வேலைவாய்ப்பு தளத்தை விரிவாக்க முடியும். நாடு, இனம், மொழி எல்லைகளைக் கடந்து ஓர் உலக தன்மையைப் பெறமுடியும்.
அறிவியல் கருத்துகள்
ஒரு சிறு நாட்டில் உள்ள ஒருவர் ஒரு புதிய அறிவியல் கண்டுப்பிடிப்பை நிகழ்த்துவார். அது மனித குலத்திற்கு அவசியமான ஒன்றாக மாறும். அது பிறமொழிகளுக்கு மொழிபெயர்க்கும்போதுதான் எல்லோருக்கும் பயனளிக்கும். அவ்வகையில் இன்று மொழிபெயர்ப்பின் மூலம் எண்ணிலடங்கா அறிவியல் கருத்துக்கள் தமிழ்மொழியில் காணப்படுகின்றன.
பிறதுறைக் கருத்துகள்
மொழிபெயர்ப்பு மனிதர்களையும் நாடுகளையும் காலங்களையும் இணைக்கின்ற நெடுஞ்சாலையாக இருக்கிறது. காலத்தால், இடத்தால், மொழியால் பிரிக்கப்பட்ட மானுடத்தை இணைக்கிறது. இன்றைக்குப் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது. திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் ஆகியன வேற்று மொழி மாற்றம் செய்யப்பட்டு அனைத்து மொழிபேசும் மக்களிடமும் சென்றடைகிறது.
தமிழக்குச் செழுமை
தமிழ் இன்று செழுமையான மொழியாக இருபதற்குக் காரணம் அது கணினி மொழியாக உள்ளதும் மொழிப்பெயர்ப்புகள் மிகுதியாக உள்ளமையுமே ஆகும்.
முடிவுரை
இன்று மொழிபெயர்ப்புக் கலையானது செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் வகையில் அமைந்து நம் தமிழருக்கும் அது பெருமை சேர்க்கிறது.
24.சா. கந்தசாமி எழுதிய ‘பாய்ச்சல்’ என்னும் கதையினைக் கருப்பொருள் சிதையாமல் எழுதுக,
பாய்ச்சல் என்ற கதையின் கருத்தினைக் கூறுக.
பொருளடக்கம் |
முன்னுரை கதைமாந்தர்கள் அனுமார் வேடம் புனைந்த இளைஞன் மகிழுந்தின்(கார்) நுழைவுடன் ஆட்டம் முடிந்தது பாய்ந்த கலை முடிவுரை |
முன்னுரை
ஆர்வமும் தன்னம்பிக்கையும் உழைப்பும் உள்ள ஒருவரால் மட்டுமே எந்த ஒரு கலையையும் கற்றுக்கொள்ள முடியும். அவ்வகையில் அழகு என்ற சிறுவன் அனுமார் வேடம் புனைந்த நிகழ்வினை சா.கந்தசாமி எழுதிய ’பாய்ச்சல்’ என்ற கதையின் வாயிலாகக் காண்போம்!
கதைமாந்தர்கள்
- அழகு என்ற சிறுவன்
- அனுமார் வேடம் புனைந்த இளைஞன்
- மேளக்காரன்
- இராமு
அனுமார் வேடம் புனைந்த இளைஞன்
தெருமுனையில் ஒரே சப்தம். ஊருக்குப் புதிதாக வந்த அழகு என்ற சிறுவன் எட்டிப்பார்த்தான் பெரிய குரங்கு மரத்தில் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. பின்னர், நன்கு உற்றுப்பார்த்தப் பின்புதான் தெரிந்தது அது குரங்கல்ல; அனுமார் வேடம் புனைந்த ஒரு இளைஞன் என்று.
சதங்கையொடு மேளமும் நாதசுரமும் இசைக்க, அனுமார் இருகால்களையும் தரையில் உதைத்து நடப்பதும், கடையில் தொங்கிய வாழைத்தாரில் உள்ள பழங்களை மற்றவர்களுக்குக் கொடுத்து ஆடுவதும், வாலைச் சுழற்றி தரையிலடித்து புழுதி கிளப்பிக்கொண்டே ஆடுவதும், குதிப்பதும் தாவுவதும் சுழலுவதுமாக ஆடுவதும் எனப் பலவாறு ஆடினார்.
மேளமும் நாதசுரமும் துரிதமாக ஒலிக்க வாலில் பெரிய தீப்பந்தம் எரிந்தவாறு ஒரு பந்தலின் காலினைப் பிடித்துக்கொண்டு மேலிருந்து கீழே குதித்த அனுமார் தீப்பந்தத்தினைப் பலவாறு சுழற்றி சுழற்றி ஆடினார். இவை அனைத்தையும் ரசித்துக்கொண்டே அனுமாரின் பின்னே நடந்துசென்றான் அழகு.
மகிழுந்து (கார்) நுழைவுடன் ஆட்டம் முடிந்தது
திடீரென கூட்டத்தின் நடுவே ஒரு கார் அனைவரையும் முந்திக்கொண்டு வந்து நின்றது. அனுமார், அந்த காரை காவலன் தடுக்க முற்பட்டபோது அவனைப் பின்னுக்கு இழுத்த காட்சி அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்தது. காரினுள்ளிருந்து ஒருவன் காசுகொடுத்தான். அதை அனுமாரின் அனுமதியுடன் மேளம் இசைப்பவன் பெற்றுக்கொண்டான். பின்னர், அனுமார் ஆடாமல் நடக்க ஆரம்பித்தார். அதைப்புரிந்துக்கொண்ட மக்கள் கூட்டம் கலைய ஆரம்பித்தது. அழகுமட்டும் பின்தொடர்ந்தான்.
பாய்ந்த கலை
அனுமார், ஆட்டத்தினை முடித்துக்கொண்டு ஆலமரத்தில் சாய்ந்தார். சேர்த்த பணத்தினைப் பங்கு போட்டு பிரித்தப்பின் குளக்கரைக்குச் சென்று வேடத்தினை ஒவ்வொன்றாக களைந்தார். அனுமாரையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான் அழகு. அதை கவனித்த அனுமார் அவனை ஆடிக்காட்டும்படி கூறினார். அவனும் அனுமார் ஆடியதுபோலவே ஆடியதால் தன் வேடத்தினை அவனுக்குக் கொடுத்து மீண்டும் ஆடும்படி கூறினார். அவனும் தொடர்ந்து ஆடிக்கொண்டே இருந்தான். அனுமார் வியந்து பார்த்தார். ஒரு கட்டதில் உடன் ஆடிய அனுமார் கீழே தவறி விழுந்தார். அவர் விழுவதுகூடத் தெரியாதபடி ஆட்டத்தில் மூழ்கிப்போனான் அழகு.
முடிவுரை
கலைஞன் ஒருவன், ஒரு கலையைக் கற்றுக்கொள்ளும்போது அடையும் இன்பத்தைவிட, அதைக் காப்பாற்றுவதற்காக அடுத்த தலைமுறைக்குப் பாய்ச்சும்போது அடையும் இன்பத்தையே பெரிதாகக் கருதுகிறான். இங்கு ஆடற்கலை அழகு என்ற சிறுவனுக்குப் பாய்ச்சப்படுகிறது.
25.’விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்’ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.
விண்வெளியும் கல்பனா சாவ்லாவும் (01.07.1961 – 01.02.2003)
பொருளடக்கம் |
முன்னுரை பிறப்பும் கல்வியும் முதல் விண்வெளிப்பயணம் கொலம்பியா விண்கல நிகழ்வு முடிவுரை |
முன்னுரை
விண்வெளிக்குப் பயணம் சென்ற இந்திய பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பனா சாவ்லாவின் பெருமையைப் பற்றியும் அவரின் சாதனைகள் பற்றியும் இக்கட்டுரையில் காண்போம்!
பிறப்பும் கல்வியும்
கல்பனா சாவ்லா அவர்கள் இந்தியாவிலுள்ள ஹரியானா மாநிலத்தில் கர்னல் என்ற ஊரில் 01.07.1961 ஆம் ஆண்டு பனாரஸ்லால் சாவ்லாவுக்கும் சன்யோகிதா தேவிக்கும் மகளாகப் பிறந்தார்.
தன் ஆரம்பக்கல்வியைத் தன் சொந்த ஊரான கர்னல் அரசு பள்ளில் முடித்த அவர், 1982 ஆம் ஆண்டு சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமான ஊர்தி துறையில் இளங்கலைப் பொறியியல் பட்டப் படிப்பை முடித்தார். பின்னர்,1984 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதன் பின்னர் 1988 ஆம் ஆண்டு விண்வெளி பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.
முதல் விண்வெளிப்பயணம்
1995 ஆம் ஆண்டு நாசா விண்வெளி வீரர் பயிற்சி குழுவில் சேர்ந்த அவர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் கொலம்பியா விண்வெளி ஊர்தியான எஸ்.டி.எஸ் -87 ல் பயணம் செய்து, 372 மணிநேரம் விண்வெளியில் இருந்து சாதனைப் புரிந்து, பூமிக்குத் திரும்பினார்.
கொலம்பியா விண்கல நிகழ்வு
16.01.2003 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாகக் கொலம்பியா விண்கலம் எஸ்.டி.எஸ் -107ல் விண்வெளிக்குப் புறப்பட்டார். 16 நாள்கள் ஆய்வை முடித்து பூமிக்குத் திரும்பும்போது பூமிக்கு மிக அருகில் விண்கலம் வெடித்ததில் உயிரிழந்தார்.
முடிவுரை
விண்வெளி பயணம் மேற்கொண்ட கல்பனா சாவ்லா அவர்கள் இந்தியாவுக்குப் பெருமையைத் தேடித்தந்ததோடு பெண்கள் இனத்திற்கே ஒரு முன்னோடியாகவும் திகழ்ந்தார். அத்தகைய வீரப்பெண்மணியை நாம் போற்றி மகிழ்வோம்!