TNPSC – TET- கலைகள்

TNPSC – TET-  கலைகள்

இலக்கியத்தில் கலைகள்

          நான்கு வேதம், ஆறு சாத்திரம், புராணம் போன்ற ஆரிய வழி (வடநாடு) வந்த இலக்கிய மரபுகள் கலைகள் பற்றி குறிப்பிடுகின்றன. அவை அறுபத்து நான்கு என வரையறுத்துக் கூறுகின்றன. எனினும், ஆரிய மரபிற்கு முன்னதாகவே தமிழர் பண்பாட்டில் ‘கலைகள்’ நிகழ்த்துக் கலைகள் (கூத்து), நிகழ்த்தாக் கலைகள் (கற்பனை) என்ற இரு வகைகளாக வழக்கத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதுவே பிற்காலத்தில் இயல், இசை, நாடகம் என்று கலைகள் தமிழோடு கலந்து முத்தமிழாக தமிழகத்தில் வளர்ச்சி பெற்றது.

சிற்பம்

          சிற்பம் என்பது ஒரு முப்பரிமாண கலை பொருள் ஆகும். இது கடினமான அல்லது நெகிழ்வுத் தன்மை கொண்ட பொருள்களுக்கு உருவம் கொடுப்பது மூலம் உருவாக்கப்படுகிறது. பொதுவாகச் சிற்பங்கள் செய்வதற்காகப் பயன்படும் பொருள்களுள்  கற்கள், உலோகம், மரம்  என்பவை அடங்குகின்றன.  சிற்பங்களை உருவாக்குபவர் ‘சிற்பி ‘ என்றழைக்கப்படுகிறார்.

தமிழகத்தின் கலைகள்

          கலைகளின் விளைநிலம் சோழநாடு ஆகும். கட்டிடக்கலையும், சிற்பக்கலையும் கொழிக்கும் நகரம் கும்பகோணம் .ஒவ்வொரு சிற்பத்திலும் கதையோ காவியமோ பொதிந்திருக்கும். தமிழகத்தில் கற்சிற்பங்களைத் தொடங்கி வைத்த பெருமை பல்லவர்களையே சாரும். மாமல்லபுரம் பல்லவர்களின் கலைக் கூடமாக விளங்குகிறது.

பாண்டியர்களின் சிற்பக்கலை

           கி.பி. 6,7,8 ஆம் நூற்றாண்டுகளில் பாண்டியர்கள் குகைகளில் அழகிய சிற்பங்களைப் படைத்தனர்.  உதாரணமாக திருமயம், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, திருப்பரங்குன்றம் மற்றும் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் கழுகுமலை ஒற்றைக்கல் கோயில் போன்ற இடங்களில் பாண்டியர்களின் கலை உன்னத படைப்புகளைக் காணலாம்.

சோழர் கால சிற்பங்கள்

          பல்லவர்கள் போற்றி வளர்த்த சிற்பக்கலை சோழ மன்னர்கள் காலத்தில் மேலும் வளர்ந்தது.  அதிகமாக  தெய்வச் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கி.பி.9 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சிற்பங்கள்  குடந்தைக்  கீழ்க் கோட்டம், சீனிவாச நல்லூர், அரங்கநாதர் கோவில், பசுபதி கோவில் அறநெறிசுரம், ஆகியவற்றில் உள்ளன. சைவம், வைணவம், சமணம், பௌத்தம் என அனைத்து சமய தெய்வங்களுக்கும்  சோழர் காலத்தில் சிற்பங்கள் வடிக்கப்பட்டன. தொடக்கத்தில் கோயில் கட்டுவதற்கு முதன்மை கொடுத்த சோழர்கள் பின்னர் சிற்பங்களுக்கு முதன்மை கொடுத்தனர்.  தாராசுரம் கோயிலை ‘கலைகளின் சரணாலயம்’ எனலாம்.

பல்லவர் கால சிற்பங்கள்

          மாமல்லபுரம் பல்லவர்களின் கலைக் கூடமாக விளங்குகிறது. மகிசாசுர மர்த்தினி குகை, ஆதிவராக மண்டபம், மும்மூர்த்தி மண்டபம் ஆகியவற்றிலுள்ள நேர்த்தி மிக்க சிற்பங்கள் நம் கண்களைக் கவர்கின்றன.

சிற்பங்கள் மிகுதியாக உள்ள ஊர்கள்

        திருவாரூர், தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம், மதுரை, திருவரங்கம், மாமல்லபுரம், திருமயம், தரங்கம்பாடி, செஞ்சி, தீபங்குடி (சமணர் கோவில்)  போன்றவை ஆகும்.

ஓவியக்கலை

தோற்றம்

          மிகப்பழமையான கவின் கலைகளுள் ஒன்று ஓவியக் கலையாகும். இன்றும் காணப்படும் ஓவியங்களில் தொன்மையானவை பல்லவர்கால ஓவியங்கள் ஆகும். தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மான், போர், வேட்டையைக் குறிக்கும் குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு வரையப்பட்ட ஓவியங்களை முதலில் ‘கண்ணெழுத்து’ என்று அழைத்தனர். வண்ணம் கலவாமல் கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவதற்கு புனையா ஓவியம்’ என்று பெயர்.

சங்க கால ஓவியம்

          ஓவியங்கள் சங்க காலத்தில் வட்டிகைச் செய்தி’ என பெயர் பெற்றது. • “ஓவத்தன்ன இடனுடை வனப்பு” – எனப் பாரியின் அரண்மனைப் புலவர் கபிலர் பாராட்டினார். சிலப்பதிகாரம் ‘ஓவிய விதானம்’ பற்றி கூறுகின்றது. ஓவியங்கள் வரைய துகிலிகை’ பயன்பட்டது.

விஜய நகர பேரரசு கால ஓவியங்கள்

         காஞ்சி, காளத்தி, குடந்தை, திருவரங்கம், திருப்பதி, திருவண்ணாமலை, தில்லை , திருவீழிமழலை, ஆரூர், ஓமலூர் முதலான இடங்களில் நாயக்கர் கால ஓவியங்களைக் காணலாம். கி.பி.14ஆம் நூற்றாண்டில் வரையப்பட்ட ஓவியங்கள் திருவரங்கத்தில் வேணுகோபாலன் திருச்சந்நிதியில் வரையப்பட்டுள்ளன. குழலூதும் கண்ணனையும் அவனைச் சூழ நிற்கும் ஆநிரைகளையும், கோகுலத்துப் பெண்களையும் ஓவியமாகக் காணலாம். திருவீழிமழலையிலுள்ள சிவன் கோவில் மண்டபத்து விதானத்தில் கி.பி.15, 16 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த ஓவியங்கள் காணப்படுகின்றன.

மதுரை நாயக்கர் கால ஓவியங்கள் (கி.பி.1700 – 1800)

          தஞ்சை, மதுரை, திருவெள்ளறை, குற்றாலம், திருவலம்புரி, குடந்தை, திருவரங்கம், செங்கம், பட்டீசுவரம் ஆகிய இடங்களில் நாயக்கர் கால ஓவியங்களைக் காணலாம்.  தஞ்சை கோயிலில் திருமால், இந்திரன், அக்கினி, வாயு,  இரம்பை, ஊர்வசி ஆகியோரின் ஓவியங்கள் காட்சியளிக்கின்றன. குறிப்பாக மதுரையில் அங்கயற்கண்ணி, சுந்தரேச பெருமாள் மணக்கோலக்காட்சி, இராணி மங்கம்மாள் ஓவியம், விசய நகர சொக்கநாதர், மீனாட்சி எண்திசைக்காவலர்களுடன்  போரிடும் காட்சி, பொற்றாமரைக்குளத்தில் சிவனின் 64 திருவிளையாடல்களும் வரையப்பட்டுள்ளன.

பேச்சுக் கலை

அறிமுகம்

         நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே அமையத்தக்க அரிய கலை பேச்சுக் கலை. பேச்சுக் கலை மக்களுக்கு அறிவைப் புகட்டி அவர்களை உயர்ந்த இலட்சியப் பாதைக்கு அழைத்துச் செல்லும் வன்மையுடையது. பேச்சும், மேடைப்பேச்சும் வெவ்வேறு பேச்சு ஆகும். பேச்சு என்பது உணர்ந்ததை உணர்ந்தவாறு பேசுதல் ஆகும். பிறருக்கு எழுதி உணர்த்துவதைக் காட்டிலும் இனிய முறையில் பேசி உணர்த்தும் மேடைப் பேச்சு மிகுந்த பலனைத் தரும்.

பேச்சுக் கலையில் மொழியும், முறையும்

          மேடைப் பேச்சிற்கு கருத்துக்களே உயிர்நாடி.  பேச்சாளரின் மனதிலே உள்ள கருத்து  கேட்பவரின் மனதில் நிலைக்க வேண்டும். பேசும் மொழி அழகியதாகவும், தெளிவாகவும், சிக்கலற்றதாகவும் இருத்தல் வேண்டும். நாம் சொல்ல நினைத்ததை தெளிவாகவும், காலம் அறிந்தும் சொல்லுதல் வேண்டும். “ஆள்பாதி ஆடைபாதி” என்பது பழமொழி. எனவே, சிறந்த உடை உடுத்திச் செல்வது நன்று. மிடுக்கான தோற்றப் பொலிவில் இருக்க வேண்டும்.

          “செட்டியார் மிடுக்கோ, கடைச்சரக்கு முறுக்கோ” என்ற பழமொழியும் பொருந்தும். பிறரை அளவுக்கு அதிகமாகப் புகழவும் கூடாது.

மேடைப் பேச்சாளர்கள்

          மேடைப் பேச்சில் நல்ல தமிழைக் கொண்டு மக்களை ஈர்த்தோர். திரு.வி.கலியாணசுந்தரம், பேரறிஞர் அண்ணா , இரா.பி.சேதுப்பிள்ளை , நாவலர் சோமசுந்தர பாரதியார், குன்றக்குடி அடிகளார் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

திரைப்படக் கலை

திரைப்பட வரலாறு

         கி.பி.65-ல் லூகரீஸ் என்ற ரோமானியக் கவிஞர் நம் கண்களில் தோன்றுகின்ற ‘பார்வை நிலைப்பு’ என்ற பண்பைக் கண்டறிந்தார்.  200 ஆண்டுகள்  கழித்து  டாலமி என்ற வானவியல் அறிஞர் அப்பண்பினை பரிசோதனை மூலம் மெய்ப்பித்தார். திரைப்படம் உருவாவதற்கு  இதுதான்  அடிப்படைப்  பண்பாகும். கருத்துப்படத்தைத் தயாரிக்கத்  தொடங்கியவர் ‘வால்ட் டிஸ்னி’ ஆவார். 1830 – இல் போட்டோ எடுக்கும் முறையைக் கண்டுபிடித்த  பின்னர்  இயக்கத்தைப் படம் பிடிக்க முயன்றார் எட்வர்டு  மைபிரிட்ஜ் என்ற ஆங்கிலேயர்.

திரைப்பட அறிவியல்

          நடிப்பாற்றலை எடுத்துக் கூறி சில நேரங்களில் தாமே நடித்தும், காட்சிகள் அமைத்தும் படம் முடியும் வரை உழைக்கும் ‘நுண்மான் நுழைப்புலம்’ உடையவரை ‘இயக்குநர்’ என்பர். ஒரு மொழிப் படத்தை மற்ற மொழிகளில் மாற்றி அமைக்கும் முறைக்கு மொழிமாற்றம்’ என்று பெயர். கதைப்படங்கள் மட்டுமின்றி கருத்துப்படங்கள், செய்திப்படங்கள், விளக்கப்படங்கள், கல்விப்படங்கள் என பல வளர்ச்சி நிலைகளை திரைப்படத் துறை அடைந்துள்ளது. திரைப்படம் எடுக்கப் பயன்படும் சுருள் ‘திரைப்படச்சுருள்’ எனப்படும். இதனை ஈஸ்ட்மென் என்பவர் கண்டுபிடித்தார். திரைப்படச் சுருள் செல்லுலாய்டு என்னும் பொருளால் ஆனது. படம் எடுக்கப் பயன்படும் சுருள் ‘எதிர்சுருள்’ எனப்படும். ஒலி, ஒளிப் பதிவுகளை தனித்தனிப் படச் சுருளில் அமைப்பர்.

படம் பிடிக்கும் கருவி

          திரைப்படத்தில் ஒளிப்பதிவு செய்ய படப்பிடிப்பு கருவி மிகவும் இன்றியமையாதது. படப்பிடிப்பின் போது படப்பிடிப்பு கருவி அசைந்தால் படம் தெளிவாக இராது.  படப்பிடிப்புக்  கருவியை  உயரமான  இடத்தில் பொருத்தி விடுவர். சிலர் படப்பிடிப்புக் கருவியை நகர்த்தும் வண்டியில் பொருத்தி விடுவர். படப்பிடிப்பு கருவியில் ஓரடி நீளம் உள்ள படச்சுருளில் பதினாறு படங்கள் வீதம் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ச்சியாக எடுக்கப்படும்.

ஒளிப்பதிவு

          நடிகர்களின் நடிப்பையும், பாடும் பாடல்களையும் உரையாடல்களையும் ஒளிப்பதிவு செய்வர். உரையாடலில் எழும் ஒலி அலைகள் ஒரு நுண்ணொலிப் பெருக்கியைத் தாக்கும். நுண்ணொலிப் பெருக்கி ஒலியலைகளை மின் அதிர்வுகளாக மாற்றும்.  மின் அதிர்வுகள்  பெருக்கப்பட்டு  ஒரு வகை  விளக்கினுள் செலுத்தப்படுகின்றன. மின்னோட்டத்திற்கு தக்கவாறு விளக்கின் ஒளி மாறும். இந்த ஒளி படச் சுருளின் விளிம்பிலுள்ள பகுதியில் விழுந்து அங்கு ஒளிப்பாதையைத் தோற்றுவிக்கும்.

திரைப்படக் காட்சிபதிவு

          ஒளி, ஒலிப் படக் கருவி என்னும்  கருவி  திரையரங்குகளில் திரைப்படம் காட்டப் பயன்படுகிறது.  இக்கருவியில் மேற்பக்கம் ஒன்றும், அடிப்பக்கம் ஒன்றுமாக  வட்டமான  இரு  பெட்டிகள்  இருக்கும்.  காட்ட வேண்டிய படச் சுருளை ஒளி ஒலிப்படக் கருவியின் மேல்பெட்டியில் பொருத்துவர். ஒளிமிகு விளக்குகளுக்கும்  உருப்பெருக்கிகளுக்கும்  இடையில்  படம்  வரும். முன்புறம் ஒரு மூடி இருக்கும். மூடிக்கு இரண்டு கைகள் உண்டு. மூடி நொடிக்கு எட்டுமுறை சுழலும்.

பட வகைகள்

          படங்களைக் கதைப்படம், கருத்துப்படம், செய்திப்படம், விளக்கப்படம், கல்விப்படம் என்று பல வகைகளாகப் பிரிக்கலாம்.

கருத்துப் படம்

         கருத்துப் படம் அமைக்கத் தொடங்கியவர் வால்ட் டிஸ்னி’ ஆவார். இவர் ஒரு ஓவியர். ஒரே  செயலைக் குறிக்கும்  பல்லாயிரக்கணக்கான படங்களை வரைபவர். கதைகளை எழுதுவதற்குப் பதில் பொம்மைகளைக் கொண்டு படங்களைத் தயாரிக்கின்றனர். இந்த இயங்குறு படங்கள் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருப்பதால் குழந்தைகள் மிகவும் விரும்பும்படி இருக்கும்.

கதைப்படம்

         ஒரு கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் கதைப்படம் ஆகும். இது புராணக்கதை, வரலாற்றுக் கதை, சமூகக் கதை என பல வகைகளில் இருக்கும்.

செய்திப்படம்

        உலகில் பல்வேறு  பகுதிகளில்  நடக்கும் நிகழ்ச்சிகளைப் படமாக்கிக் காட்டுவது செய்திப் படமாகும். திரைப்படம் எடுப்பதை விட செய்திப்படம் எடுப்பது கடினமான செயல் ஆகும். உலகப் போரின் போது ஐரோப்பா, ஆப்பிரிக்கா கண்டங்களில் படம் எடுத்தவர்கள் பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், செய்தி படத்திற்கு உதாரணமாக  போர், நிலநடுக்கம், சுனாமி, மக்கள் போராட்டம்  போன்றவற்றை  படம் எடுப்பதை  குறிப்பிடலாம்.

விளக்கப்படம்

         ஒரு நிகழ்வை மட்டும்  எடுத்துக்கொண்டு அதைப் பற்றிய முழுவிளக்கத்தையும் தருவது விளக்கப்படங்கள் ஆகும். ஒரு கோட்டையைக் காட்டும் போது  அதன் அமைவிடம், அமைப்பு, கட்டியவர் அக்கோட்டையை ஆண்டவர்கள்,  அங்கு நடந்த போர்கள் என அனைத்தையும் காட்டுவது ஆகும்.

கல்விப் படம்

         கல்வி கற்பிப்பதற்காக உருவாக்கப்படும் படங்கள் கல்விப் படங்கள் எனப்படும். ஆசிரியரின் விளக்கப்படங்கள், பாடம் தொடர்பான விலங்குகளின் வாழ்க்கை, மக்களின் வாழ்க்கை போன்றவை குறிப்பிடத்தக்கது. இதனால் மாணவர்கள் கல்வி அறிவை எளிதில் பெறுவர். வாழ்வில் நேரில் பார்க்க முடியாத பல இடங்களை நேரில் பார்க்கும்படி காட்டுவது கல்விப்படம் ஆகும். கல்விப்படம் மாணவர்களின் உள்ளார்ந்த  திறன்களை  ஊக்குவிப்பதாக அமையும்.

DOWNLOAD PDF – Click Here

Leave a Comment