TNPSC – TET – தமிழில் கடித இலக்கியம்

TNPSC – TET –  தமிழில்  கடித  இலக்கியம்

      மடல், முடங்கல் என பல பெயர் பெற்ற கடிதம் என்பது ஒரு செய்தியை எழுதி அனுப்புவது ஆகும். முற்காலத்தில் பனை ஓலையில் எழுதி அனுப்புவதால் இது மடல் என்றும், இதனை மூங்கில் குழாயில் இட்டு அனுப்புவதால் முடங்கல் என்றும் பெயர் பெற்றது. “கடி” என்பதற்கு “விரைவு” என்று பொருள். கடிதத்தை இருவகையாகப் பிரிக்கலாம்.

 1. தற்சார்புக் கடிதங்கள்

இருவருக்கிடையே தனிப்பட்ட செய்தியை உள்ளடக்கியது.

2. தற்சார்பில்லாக் கடிதங்கள்

நாடு, மொழி, இனம், கல்வி, பண்பாடு ஆகிய பொதுப்பொருள் பற்றியவை.

கடித இலக்கியத்தில் புகழ்பெற்ற பிற நாட்டினர்:

வில்லியம் கூப்பர், கிரே, வால்போல், செஸ்டர் பீடு – ஆங்கிலம்

சிசரோ- லத்தீன்

ஹில்லர்- ஜெர்மன்

மதாமெதஞ்செவிஞ் – பிரெஞ்சு

கடித இலக்கியத்தில் புகழ்பெற்ற இந்தியர்

          நேரு நேரு தன் அன்பு மகள் இந்திராகாந்திக்கு 1922 முதல் 1964 வரை 42 ஆண்டுகள் கடிதம் எழுதிக் கொண்டே இருந்தார். இந்திரா காந்தி 1934ல் ரவீந்திரநாத் தாகூர் நடத்திய விசுவபாரதி பல்கலைக்  கழக மாணவியாக படித்துக் கொண்டிருந்தார். 1935இல் நேரு கைது செய்யப்பட்டு உத்திராஞ்சல் மாநிலத்தில் உள்ள அல்மோரா சிறையில் அடைக்கப்பட்டார்.

      சிறையில் இருந்தபோதும் கூட தன் மகளுக்கு தொடர்ந்து கடிதம் எழுதினார். அதில் சில குறிப்புகள்:

 1. விசுவபாரதியில் பணிபுரிந்த பேராசிரியர் கிருபாளினியைப் பற்றி எழுதியுள்ளார்.

2. கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் கிடைத்த தம் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.

3. மகளின் புத்தக விருப்பத்தைக் கேட்கின்றார்.

4. புத்தகம் வாசிப்பைக் கடமையாக்கவும் கூடாது. கட்டாயமாக்கவும் கூடாது.

5. சேக்ஸ்பியர், மில்டன் போன்ற ஆங்கிலப் படைப்பாளிகளை அறிமுகம் செய்கின்றார்.

6. பிளேட்டோவின் “குடியரசு”, கிரேக்க நாடகங்கள், நூல்கள் எனப் படிக்க வேண்டிய நூல்களைக் கூறுகின்றார்.

7. இந்திரா காந்தி, படிக்கப்போவதாகக் கூறிய டால்ஸ்டாயின் “போரும் அமைதியும்” என்ற நூலை பற்றியும் குறிப்பிடுகின்றார்.

8. பெட்ரண்ட்ரஸ்ஸலின் ஆங்கில நடையும், கருத்து வளமும் தனக்குப் பிடித்தமானவை என்கிறார்.

9. புத்தகத்தை ஏன் வாசிக்க வேண்டும் என்பதற்கு அறிவுபெறுதல், மகிழ்ச்சி அடைதல் என்ற இரண்டிற்கும் மேலாக வாழ்க்கையைப் புரிந்து கொள்ள உதவும் என்கிறார்.

10. புத்தகங்களின் மூலம் பல மனிதர்களின் அனுபவங்களும், சிந்தனைகளும் அடங்கிக் கிடக்கின்றன. அவை இதுவரை பார்க்காத உலகங்களைப் பார்க்க உதவும் என்கிறார்.

காந்தி

     காந்தியடிகள் தலைவர்களுக்கு எழுதிய கடிதங்கள் பலவும் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன.

    அரசியலுக்கு அப்பாற்பட்ட மொழி பற்றிய அவரது சிந்தனை, தாய்மொழிக் கல்வி போன்றவை குறித்த அவர்தம் ஆழ்ந்த சிந்தனைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

    அரசியலுக்கு அப்பாற்பட்ட ரவீந்திரநாத் தாகூர், முன்சிராம், மதன்மோகன் மாளவியா, ஜெகதீஷ் சந்திரபோஸ், பி.சி. ராய் போன்றோர் குறித்தும் கூறுகின்றார்.

மு. வரதராசனார்

     அன்னைக்கு, தம்பிக்கு, தங்கைக்கு, நண்பர்க்கு என நான்கு கடித இலக்கிய நூல்களை எழுதியுள்ளார்.

     மு.வ.வின் பிற நூல்களுக்கான திறவுகோல் அவர்தம் கடித இலக்கியங்களே என்பர்.

    குடும்பம், மொழி, இனம், நாடு, பொருளியல், அரசியல், சாதி, சமயம் பற்றிய அவர்தம் கருத்துக்கள் அவற்றின் ஒளிவிடுகின்றன.

தம்பிக்கு எழுதிய கடிதத்தில் அன்புள்ள எழில் என்று தொடங்கி,

1. தமிழரின் ஒற்றுமை

2. தனி ஒருவர் உயர்வு இன உயர்வு ஆகாது

3. தமிழ்மொழி ஒன்றே தமிழரைப் பிணைத்து ஒற்றுமைப்படுத்தும்

4. ஆட்சிமொழி என்றால் சட்டசபை முதல் நீதிமன்றம் வரை தமிழ் வழங்க வேண்டும்.

5. கல்வி மொழி என்றால் எவ்வகை கல்லூரிகளிலும் எல்லாப் பாடங்களையும் தமிழிலேயே கற்பிக்க வேண்டும்.

6. கடிதம், விளம்பரப் பலகை, விற்பனைச்சீட்டு முதலியவை எல்லாம் தமிழில் எழுத வேண்டும்.

7. சாதிசமய வேறுபாடுகளை மறக்கக் கற்றுக்கொள்; மறக்க முடியாவிட்டால்

புறக்கணிக்கக் கற்றுக்கொள்.

8. வெளிநாட்டுத் துணியை மறுப்பதுபோலத் தமிழ்நாட்டுக்கும் தமிழ்மொழிக்கும் நன்மை செய்யாத செய்தித்தாள்களை விலக்கு.

9. தமிழர் நடத்தும் கடைகளையும் தொழிற்கூடங்களையும் போற்று.

10. தமிழர் கடை தொலைவில் இருந்தாலும், விலை கூடுதலாக இருந்தாலும், ஏதேனும் குறை இருந்தாலும் அங்கேயே சென்று வாங்கு.

11. கூடிய வரையில் தமிழ்நாட்டில் தமிழ்த் தொழிலாளர்களால் செய்யப்பட்ட பொருள்களையே வாங்கு.

12. தமிழரிடையே பகையையும் பிரிவையையும் வளர்க்கும் எந்தச் செயலையும் செய்யாதே, பேசாதே, எண்ணாதே.

13. கொள்கைகள், கட்சிகள் இயக்கங்களைவிட நாட்டு மக்களின் நன்மையே பெரிது.

14. தலைமை உன்னைத் தேடி வந்தால் வரட்டும்; நீ அதைத் தேடி அலையாதே.

15. தொண்டுக்கு முந்து; தலைமைக்கு பிந்து

16. ஒவ்வொருவரும் ஆணையிடுவதற்கு விரும்புகிறார். அடங்கி ஒழுகுவதற்கு யாரும் இல்லை. அதனால்தான் வீழச்சி நேர்ந்தது. போன்ற கருத்துக்களை வலியுறுத்துகிறார். இது “அண்ண ன் வளவன்” எழுதிய கடிதம்.

அண்ணா

“திராவிட நாடு” என்ற இதழில் கடிதங்களை எழுதினார்.

“தம்பிக்கு” என எழுதினார். இவர் கடிதங்கள் சிந்தனையைத் தூண்டின.

பிற தலைவர்கள் செய்யாத வகையில் தம் கட்சியினரை எல்லாம் குடும்ப உறுப்பினராக்கி, அண்ணன், தம்பி உறவில் பிணைத்துக் கொண்டார். இவர்தம் கடிதத்தில் தமிழ், தமிழர், தமிழ்ப்பண்பாடு, தமிழர் தாழ்வும் உயர்வும், தமிழர் செய்யவேண்டியது, பகுத்தறிவு போன்ற கருத்துகள் மிளிர்கின்றன.

ஆனந்தரங்கம் பிள்ளை

30.3.1709இல் திருவேங்கடம் பிள்ளைக்கு மகனாக சென்னைப் பெரம்பூரில் பிறந்தார்.எம்பார் என்பவரிடம் கல்வி கற்றார். புதுச்சேரியில் குடியேறி வணிகத் தொழிலை மேற்கொண்ட திருவேங்கடம் 1726 இல் இறந்தபின் ஆனந்தரங்கர் தந்தையின் வணிகப் பொறுப்பை ஏற்றார். தமிழ், பிரெஞ்சு, பாரசீகம் மொழிகளை நன்கு கற்றார்.

1746 இல் துய்ப்ளெக்ஸ் என்ற புதுச்சேரி ஆளுநரின் மொழி பெயர்ப்பாளராக (துபாசி) நியமிக்கப்பட்டார். 1736 ஆம் ஆண்டு முதல் 1761 ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ 25 ஆண்டுகள் தொடர்ந்து நாட்குறிப்பு எழுதினார். தமிழ்ப்பற்றாளர், ஆதலால் நாட்குறிப்பைத் தமிழிலேயே எழுதினார். இடையில் சில நாள் எழுதப்படாமலும், சில குறிப்புகள் முழுமை பெறாமலும் உள்ளன. ஆனந்தரங்கரின் நாட்குறிப்புகளின் பெரும்பகுதி வணிகச் செய்திகளையே கூறுகின்றன. புதுச்சேரிக்குக் கப்பல் வந்த செய்தி கேட்டு மக்கள் அடைந்த மகிழ்ச்சியை இலக்கிய நயத்தோடு வருணித்துள்ளார். நீதி வழங்கல், தண்டனை அளித்தல் குறித்த செய்திகளையும் பதிவு செய்துள்ளார்.

கடுந்தண்டனை குற்றங்களைக் குறைக்கும் என்பதை ஆனந்தரங்கரின் நாட்குறிப்பின் மூலம் அறியலாம். 09.06.1746இல் சுங்கு சேஷாசல செட்டியாரின் மகளுக்கும் இவருக்கும் திருமணம் நடந்தது.

அத்திருமணத்திற்கு வருகை தந்த புதுச்சேரி ஆளுநர் துய்ப்ளெக்ஸ் அவர்களுக்கு ரூ.1000/-, அவர் மனைவிக்கு ரூ.100/- கொடுத்து, பந்தலில் பாக்கு வெற்றிலை புஷ்பம் கொடுத்து அனுப்பினார் செட்டியார். சிறப்பு விருந்தினராக ஆளுநர் வந்திருந்தபோது அவர் வரும்போது – உட்காரும்போது – சாப்பிடும்போது – எழும்போது என ஒவ்வொரு முறையும் 21 குண்டுகள் முழங்கின. இவரின் நாட்குறிப்புப் பேச்சுத் தமிழ் குறித்தும் கூறுகிறது. 12.01.1761 இல் இயற்கை எய்தினார்.

DOWNLOAD PDF – Click Here

Leave a Comment