TNPSC – TET – பொருள் இலக்கணம்

TNPSC – TET – பொருள் இலக்கணம்

          மக்கள் வாழ்க்கையைப் பற்றிக் கூறும் இலக்கணம் பொருளிலக்கணம். இஃது உலகின்கண் வழங்கும் பிற உயர்தனிச் செம்மொழிகளுள் காணப்படவில்லை. தமிழ்ச் சான்றோர்கள் மக்கள் வாழ்வை அகம், புறம் என இரண்டாகப் பிரித்தனர். அக வாழ்க்கையைப் பற்றிக் கூறுவது அகப்பொருள். புறவாழ்க்கையைப் பற்றிக் கூறுவது புறப்பொருள்.

திணை

அகப்பொருள்

          அகம் என்னும் சொல்லுக்கு உள்ளம் என்பது பொருள். ஆதலின், ‘ஒத்த அன்புடைய தலைவன் தலைவியின் உள்ளத்திற்கு மட்டும் புலனாகும் இன்ப நிகழ்ச்சியை’ அகப்பொருள் எனலாம். அகப்பொருள் பற்றி நிகழும் ஒழுக்கம் அகத்திணை எனப்படும். திணை என்பது ஒழுக்கம்.

அகத்திணை வகை : அகத்திணை, கைக்கிளை, ஐந்திணை, பெருந்திணை. கைக்கிளை : ‘கைக்கிளையுடைய தொருதலைக் காமம்’ – கைக்கிளை என்பதனுடைய பொருள் ஒருதலைக்காமம்.

ஐந்திணை : ஐந்திணையுடைய தன்புடைக்காமம்’

                               -ஐந்திணை என்பதனுடைய பொருள் அன்புடைக்காமம். பெருந்திணை : ‘பெருந்திணையென்பது பொருந்தாக் காமம்’- பெருந்திணை என்பதனுடைய பொருள் பொருந்தாக்காமம். ஐந்திணையின் பெயர் : ஐந்திணையாவன குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பன.

  1. குறிஞ்சித் திணை : ‘புணர்தல், புணர்தல் நிமித்தம்’. அன்புடைய தலைவனும் தலைவியும் தாமே ஒருவரையொருவர் கண்டு உள்ளம் கலந்து உறவு கொள்ளுதல்.
  2. முல்லைத்திணை : ‘இருத்தல், இருத்தல் நிமித்தம்’. தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் மீண்டும் வருவதற்காகக் குறித்த காலம் வரை தலைவி அவன் பிரிவை நினைந்து வருந்தியிருக்கும் ஒழுக்கம்.
  3. மருதத்திணை : ‘ஊடல், ஊடல் நிமித்தம்’. இல்வாழ்வில் ஈடுபட்ட தலைவன் ஆடல்பாடல்களில் விருப்பம் கொண்டு பரத்தையர் சேரிகளில் தங்கி மீளும்போது தலைவனிடம் தலைவி ஊடல் கொள்ளுதலைப் பற்றிய ஒழுக்கம்.
  4. நெய்தல் திணை : இரங்கல், இரங்கல் நிமித்தம்’ தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் குறித்த காலத்தில் வராத காரணத்தால் அது குறித்துத் தலைவி கொள்ளும் வருத்தத்தைக் குறிக்கும் ஒழுக்கம்.
  5. பாலைத்திணை : பிரிதல், பிரிதல் நிமித்தம்’. கல்வியின் பொருட்டோ, பொருள் தேடவோ, தூது செல்லவோ, போர் குறித்தோ தலைவன் தலைவியை விட்டுப் பிரிவது பற்றிய ஒழுக்கம். இவ்வொழுக்கங்களை உரிப்பொருள் என்பர்.

ஐந்திணைக்கும் உரிய பொருள்கள்

          ஏழுவகை அகத்திணையுள் நிலம் பெறுவன | குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்து திணைகளே. முதற் பொருள்: நிலமும் பொழுதும் முதற்பொருள் எனப்படும். முதற்பொருள் : நிலம் ஐந்து வகைப்படும். அவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை.

1. குறிஞ்சி – மலையும் மலை சார்ந்த பகுதியும்.

2. முல்லை – காடும் காடு சார்ந்த பகுதியும்

3. மருதம் – வயலும் வயல் சார்ந்த பகுதியும்  

4. நெய்தல் – கடலும் கடல் சார்ந்த பகுதியும்.  

5. பாலை – சுரமும் சுரம் சார்ந்த பகுதியும்.

முதற்பொருள் – காலம்

1. குறிஞ்சி – குறிஞ்சிக்குரிய பெரும்பொழுது: கூதிர், முன்பனி, சிறுபொழுது : யாமம்.  

2. முல்லை – முல்லைக்குரிய பெரும்பொழுது கார்காலம், சிறுபொழுது : மாலை.

3. மருதம் – மருதத்திற்குரிய பெரும்பொழுதுகள் : பெரும்பொழுதுகள் ஆறும் : சிறுபொழுது : வைகறை

4. நெய்தல் – நெய்தலுக்குரியன, பெரும்பொழுதுகள் ஆறும்: சிறுபொழுது: ஏற்பாடு.

5. பாலை – பாலைக்குரிய பெரும்பொழுது : இளவேனில், முதுவேனில், பின்பனி, சிறுபொழுது :நண்பகல்.

பெரும்பொழுதும் அதற்குரிய திங்களும்

 1. இளவேனிற்காலம் – சித்திரை, வைகாசி

2. முதுவேனிற் காலம் – ஆனி, ஆடி

3. கார் காலம் – ஆவணி, புரட்டாசி  

4. கூதிர் காலம் – ஐப்பசி, கார்த்திகை

5. முன்பனிக்காலம் – மார்கழி, தை

6. பின்பனிக்காலம் – மாசி, பங்குனி

சிறுபொழுதும் அதற்குரிய நேரமும்

1. வைகறை என்பது பின்னிரவு 2 மணி முதல் 6 மணி வரை.

2. காலை என்பது முற்பகல் 6 மணி முதல் 10 மணி வரை.  

3. நண்பகல் என்பது முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.

4. ஏற்பாடு என்பது பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை.

5. மாலை என்பது முன்னிரவு 6 மணி முதல் 10 மணி வரை.

6. யாமம் என்பது முன்னிரவு 10 மணி முதல் பின்னிரவு 2 மணி வரை,

 புறப்பொருள்

பன்னிரு திணைகள்

          தமிழன் தன் வாழ்க்கையை இரு பெரும் பிரிவாகப் பிரித்துக் கொண்டான். ஒன்று அகம்; மற்றது புறம்.

         அகவாழ்க்கையில் அன்புடையவராக விளங்கும் ‘தமிழர்’, புறவாழ்க்கையில் கல்வி, வீரம், கொடை முதலிய பண்புடையவர்களாக வாழ்ந்தனர். கல்வி, கொடை, வீரம் முதலியன பற்றி நிகழும் ஒழுக்கத்தைப் புறப்பொருள் எனலாம். புறப்பொருள் பற்றி நிகழும் ஒழுக்கம் புறத்திணை எனப்படும்.

புறப்பொருள் திணை வகைகள்

  1. வெட்சி
  2. கரந்தை
  3.  வஞ்சி
  4.  காஞ்சி
  5.  உழிஞை
  6. நொச்சி
  7. தும்பை
  8. வாகை
  9. பாடாண்
  10. பொதுவியல்
  11. கைக்கிளை
  12. பெருந்திணை எனப் புறத்திணைகள் பன்னிரண்டாகப் பகுக்கப் பெற்றுள்ளன.
  13. வெட்சித் திணை – ‘நிரை கவர்தல்” : பண்டைக்காலத்தில் ஓர் அரசன் போர் தொடுப்பதற்கு முன் தன் வீரர்களை அனுப்பிப் பகைநாட்டு ஆக்களைக் கவர்ந்து வரச்செய்வான். அவ்வீரர்கள் வெட்சிப்பூவைச் சூடி பகைநாட்டு ஆநிரைகளைக் கவர்ந்து வருவர். இது வெட்சி எனப்பெறும். வெட்சித் திணை இருவகை பெறும். (1) மன்னுறு தொழில்-மன்னன் ஆணைப்படி போர் செய்யச் செல்லுதல், (2) தன்னுறு தொழில்மன்னன் ஏவாதகாலையும் போர் செய்யச் செல்லுதல்.
  14. கரந்தைத் திணை-“நிரை மீட்டல்” : வெட்சியார் கவர்ந்து சென்ற ஆநிரைகளை மீட்கும் பொருட்டு கரந்தைப் பூவைச் சூடிச் செல்லுதல் கரந்தை,
  15. வஞ்சித் திணை-“வட்கார் மேல் செல்வது வஞ்சி” : மண்ணாசையால் பகைநாட்டைக் கைப்பற்ற விரும்பிய வேந்தன் வஞ்சிப்பூவைச் சூடிப் பகைவர், நாட்டின் மீது படைநடத்திச் செலுத்துதல் வஞ்சி.
  16. காஞ்சித்திணை – “எதிரூன்றல் காஞ்சி” : ஓர் அரசன் படையெடுத்து வந்த பகைவரைத் தன் நாட்டிற்குள் புகாதவாறு காஞ்சிப்பூவைச்சூடிப் போர் குறித்து வந்த மாற்றரசனோடு பொருதல் காஞ்சி.
  17. நொச்சித்திணை-“எயில் காத்தல் நொச்சி” : பகை அரசனால் வளைத்துக் கொள்ளப்பட்ட மதிலை அம்மதிலுக்குரியோர் பகைவர்கள் மதிலுக்குள் புகாதவாறு தடுத்து நொச்சிப் பூவைச் சூடிப் போர் செய்தல் நொச்சி.
  18. உழிஞைத்திணை – “அது வளைத்தலாகும் உழிஞை ” : உழிஞைப் பூவைச் சூடிய வீரர்கள் பகையரசனின் மதிலை நாற்புறமும் சூழ்ந்து வளைத்து முற்றுகையிடுதல் – உழிஞை.
  19. தும்பைத்திணை – “அதிரப்பொருவது தும்பை” : பகைவேந்தர் இருவரும் தத்தம் படைகளுடன் தும்பைப் பூவைச் சூடி எதிரெதிர் நின்று பரந்த போர்க்களத்தில் கடும் போர் புரிதல் தும்பை.
  20. வாகைத்திணை – “செருவென்றது வாகை” : போரில் பகைவரை வென்ற அரசன் வாகைப்பூச் சூடி மகிழ்தல் வாகை. தொல்காப்பியர் வாகைத்திணையை அரசருக்கே உரியதொன்றாகக் கருதாமல் மக்கள் எல்லோருக்கும் பொதுவில் அமைத்து ஓதினார்.
  21. பாடாண்திணை : ஒரு மன்னனின் புகழ், கொடை, வலிமை, வீரம் முதலிய பண்புகளைப் புகழ்ந்து பாடுவது பாடாண் திணை .       பாடு+ஆண்+திணை எனப் பிரித்து, பாடப்படும் ஆண்மகனின் ஒழுகலாறுகளைப் புகழ்வது எனப் பொருள் கொள்க.
  22. பொதுவியல் திணை : இதுவரை கூறப்பட்டுள்ள புறத்திணைகட்கெல்லாம் பொதுவாக உள்ளனவும், அவற்றிற் கூறாது ஒழிந்தனவுமாகிய இலக்கணங்களைத் தொகுத்துக் கூறுவது பொதுவியல் துணையாம்.
  23. கைக்கிளைத் திணை-“ஒருதலைக்காமம்” : தலைவன், தலைவியருள் ஒருவரிடத்து மட்டுமே தோன்றுகின்ற ஒருதலைக்காமம் கைக்கிளைத் திணை. இது ஆண்பாற்கூற்று, பெண்பாற்கூற்று என்னும் இரு பகுதிகளையுடையது.
  24. பெருந்திணை – “பொருந்தாக் காமம்” : ஒத்த தலைவனும், தலைவியும் அல்லாதவரிடம் தோன்றும் பொருந்தாக் காமம் பெருந்திணையாம். இஃது இரு வகைப்படும்.
    1. (1) பெண்பாற்கூற்று, (2) இருபாற்கூற்று.

DOWNLOAD PDF – Click Here

Leave a Comment