ஏழு படிக்கட்டுகள் – வெ.இறையன்பு

ஏழு படிக்கட்டுகள் – வெ. இறையன்பு

          ”நான் என்னைத் தண்ணீருக்குள் முழுவதுமாக ஒப்படைத்துவிட்டேன். நான் எதிர்க்கவோ போராடவோ இல்லை .”

          படிப்பது  என்பது  தேர்வு  வரை  நீடிப்பது. மொத்தம்  ஏழு  படிகள் உள்ளன.

1. வாசித்தல் (Reading)

2. நினைவில் வைத்துக் கொள்ளுதல் (Remembering)

3. ஞாபகப்படுத்திப் பார்த்தல் (Recapitulating)

4. படித்தவற்றை வகையாக வெளிப்படுத்துதல் (Reproducing)

5. எழுதியவற்றை திரும்ப வாசித்தல் (Referring)

6. திருத்துதல் (Rectifying)

7. மறுமுறை வாசித்தல் (Revising)

          வாசித்தல் என்பது மட்டுமே தேர்வுக்குப் படிப்பது என்று நினைப்பவர்கள் பெரும்பாலும் இருக்கிறார்கள். அவர்கள் முழுவதுமாகப் படிப்பதை வெளிப்படுத்துவது  கடினம்.

         வாசிப்பது என்பது வெறுமனே வாசிப்பது அல்ல. நன்றாகப் புரிந்துகொண்டு வாசிப்பது. வாசிப்பதை உள்வாங்கிக்கொண்டு வாசிப்பது. லயித்து வாசிப்பது நினைவில் நிற்கும். ஆனால் அதே நேரத்தில் ஒரு வரி கூட விடாமல் மனப்பாடம் செய்வதுதான் வாசித்தல்  என்று  எண்ண  வேண்டியதில்லை.

         படிப்பவற்றை முழுவதுமாக உள்வாங்கிக்கொண்டு அதன் ஒட்டுமொத்தத் தன்மை கெடாமல் வெளிப்படுத்துவது நல்லது.

          வாசிப்பது என்பது மார்க்கெட்டில் கிடைக்கும் நோட்சுகள்தான் என்று நம்மை நாமே குறுக்கிக் கொள்ள வேண்டியதில்லை. வைட்டமின்  மாத்திரைகளால்  வயிறு ஒரு போதும் நிறையாது. அதைப்போலவே வழிகாட்டி நூல்களால் அடிப்படை அறிவு வளர்ச்சி நிகழவே நிகழாது. மூலநூல்களை வாசிப்பது இன்றியமையாதது. உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பாடப்புத்தகத்தை முழுமையாக வாசிக்க வேண்டும். மேலும் தேவைப்படுகிற விவரங்களுக்கு நாம் நூலகங்களில் உள்ள புத்தகங்களை வாசிக்கவேண்டும். அது நமக்கு இருக்கும் புரிந்து கொள்ளும் திறனை விரிவுபடுத்த வல்லவையாக இருக்கின்றன.

          டாவோ கதையொன்று உண்டு. ஒரு வயோதிகர் தவறி நதியில் விழுந்துவிட்டார். பார்த்தவர்கள் பயந்து நடுங்கினர். ஆனால் அவர் அடிபடாமல் மறுமுனையில் எழுந்தார். அவர் உடலில் ஒரு கீறல் கூட விழவில்லை .

         எல்லோரும் அவரை வியப்புடன் பார்த்தார்கள். ‘நான் என்னைத் தண்ணீருக்குள் முழுவதுமாக ஒப்படைத்துவிட்டேன். நான் எதிர்க்கவோ போராடவோ இல்லை. நான் சுழலுக்குள் சென்று சுழலோடு வெளியே வந்தேன்’ என்றார்.

        படிப்புக்கும் இது பொருந்தும். முழுவதுமாக உங்களை ஒப்படையுங்கள்.

          வாசிக்கும்போது “இது கடினம், நமக்குவராது’ என்கிற பதற்றம் சிறிதளவேனும் இல்லாமல் வாசியுங்கள். அது உங்கள் எல்லைகளை விரிவுபடுத்தும்.

         சாப்பிடுகிறபோதே வெறுப்புடன் சாப்பிடுகிறவன் உடலில் செரிக்க உணவு மறுக்கிறது என்பதே உண்மை. படிக்கும் போது வெறுப்பைத் தவிர்த்து பக்கங்களுடன்  இயைந்து  தவழ்ந்தால்  படிப்பு  இனிமையாகும்.

படிக்கும் போது கவனிக்க வேண்டியவை

          கடிகார முள் எவ்வளவு நகர்ந்திருக்கிறது என்று பார்க்க வேண்டாம்.

          பக்கங்கள் எவ்வளவு கடந்திருக்கிறோம் என்றும் பார்க்க வேண்டாம்.

          இரவெல்லாம் கண் விழித்தால் பரீட்சையில் படுத்து விடுவீர்கள்.

          ஒவ்வொரு பாடத்திலும்  புரிந்துகொள்வதற்குச் சற்றும் இடமில்லாமல் கட்டாயம்  மனப்பாடம்  செய்ய  வேண்டிய  பதங்கள். பெயர்கள், விளக்கங்கள் உண்டு.

          மொழித்தாளில் மனப்பாடச் செய்யுள், வரலாற்றில் ஆண்டுகள், பெயர்கள், ஒப்பந்தங்கள், அரசியலமைப்புச் சட்டங்கள், இடங்கள், நிலவியல் – கனிமங்கள், இயற்கை வளங்கள், அறிவியலில் பதங்கள், தாவரத்தின் பெயர்கள், விஞ்ஞானக் கோட்பாடுகள், தொழில் நுணுக்க விளக்கங்கள், கணிதத்தில் சூத்திரங்கள் ஆகியவற்றை எழுத்துப் பிறழாமல் எழுத வேண்டும். இவற்றையெல்லாம் தனியாகக் குறித்துக்கொண்டு திரும்பத் திரும்ப  வாசிக்கலாம். தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும்  சொல்லுகின்ற  அளவிற்கு மனத்தில் பதிந்துவிடும்.

ஓய்வு முக்கியம் :

          எளிதில் மனப்பாடம் செய்ய ஒலிப்பேழையில் பதிவு செய்து ஓய்வு நேரங்களில் விழிகளை மூடிக்கேட்கலாம். படிப்பதிலிருந்து ஓய்வும், விழிகளுக்கு வேலையின்மையும் விளையும். பல் துலக்கும் போது கூட அவற்றைக் கேட்கலாம்.

          இரவெல்லாம் விழித்துப் படித்தால்தான் படித்த மாதிரி என்றோ, சாப்பிடாமல் கூடப் படித்தால்தான் படிப்பு என்றோ தவறான எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல்  உடல் நலம் கெடாமல் ஆரோக்கியம் பாதிக்கப்படாமல் இலகுவாகப் படிக்கும் நேரத்தை வரையறுத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். படிக்கும்போது அதிக சக்தி தேவைப்படுகிறது. உடலுக்கும், மூளைக்கும் நிறைய வேலை கொடுப்பதால் அதிக கலோரிகள் தேவைப்படுகின்றன. இதை மறந்துவிட்டுப் படித்துப் பரீட்சைக்குப் போகின்ற நேரத்தில் படுக்கையில் விழுந்து விடுபவர்களும் உண்டு.

          படிக்கின்ற போது ஆரோக்கியமான உணவை உண்ணவேண்டும். உடல் சூடாகிவிடாமல், இளநீர், மோர் போன்றவற்றையும் குளிர்ச்சி தரக்கூடிய பழங்களையும் உண்ண வேண்டும்.

          ஒவ்வொரு மணிக்கும் ஏதாவது நீராகாரமாகக் குடிப்பதும், போஷாக்குத் தரக்கூடிய உணவை மூன்றுவேளை உண்பதும்  அவசியம்.

         மிதமான உடற்பயிற்சி அல்லது காலையில் இரண்டு கிலோமீட்டர் நடை போன்றவை  மனத்தையும்  உடலையும்  புதுப்பித்துக்  கொள்கிற முயற்சிகள்.

படித்ததை விவாதியுங்கள்

         படித்தவற்றை மற்றவர்களுடன் ஓய்வு நேரங்களில் சொல்லிப் பார்ப்பது, விவாதிப்பது போன்ற பயிற்சி படித்தவற்றை மேலும் கூர்மைப்படுத்தும்.

          பாடங்களை வாசித்து முடித்தவுடன் நேரம் ஒதுக்கி முந்தைய வருட வினாத்தாளை வைத்து, தேர்வு எழுத வேண்டும்.  ஒவ்வொரு பாடத்திற்கும் இப்படித் தேர்வு எழுதும் போதுதான் நாம் எந்த அளவிற்குப் படித்திருக்கிறோம்? படித்தவற்றை  சரியாக  எழுதியிருக்கிறோமா?  எந்தப் பகுதிகளில் நாம் சரியாக எழுத முடியவில்லை. எந்தப் பாடங்கள் மறந்து போகின்றன. எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளிக்க முடிகிறதா, எழுதுகிற வேகம் கூட வேண்டுமா, எழுத்துத் தெளிவாக உள்ளதா போன்றவற்றை நாம் பரிசோதிக்க முடியும். அதற்கேற்றவாறு  நாம்  அணுகுமுறையை  மாற்றிக்  கொள்ளலாம்.

          படிப்பது தண்டனையாக இல்லாமல் தவமாக இருக்க வேண்டும். ஒரு ஈசலும் வண்ணத்துப்பூச்சியும் சந்தித்துக்கொண்டன.

          வண்ணத்துப்பூச்சியின் அழகிய சிறகுகளைப் பார்த்ததும், ஈசல் ”உன் இறகுகள் எவ்வளவு அழகாக இருக்கின்றன. உனக்கு மட்டும் எப்படி இவை வாய்த்தன” என்று வினவியது.

          அதற்கு வண்ணத்துப் பூச்சி ‘நான் புழுவிலிருந்து கூட்டுப் புழுவாக மாறி பல நாட்கள் என்னைக் குறுக்கிக் கொண்டு விரதம் மேற்கொள்கிறேன். அதனால் எனக்கு இந்த அழகிய இறகுகள் பரிசளிக்கப்படுகின்றன” என்று பதிலளித்தது. தவம் இருக்காமல் எங்காவது வரம் கிடைக்குமா? படிப்பது எவ்வளவு முக்கியமானதோ அதற்குச் சமமாகத் தேர்வு எழுதுவதும் ஒரு நுணுக்கமான வழிமுறை.

          படித்ததையெல்லாம் வெளிப்படுத்துவதல்ல தேர்வு. தேவையானவற்றைத் தெளிவாக உணர்த்துவதுதான்  விடை.

விழிப்புணர்வு தேவை

          ரிக்யூ (Rikyu) என்கிற மாஸ்டர் ஒரு பூ ஜாடியை ஒரு தூணில் தொங்கவிட வேண்டுமென்று எண்ணினார். ஒரு தச்சரை அழைத்து அதைத் தொங்கவிட ஆணி அடிக்கச் செய்ய வேண்டும். அதை நடுப்புள்ளியில் தொங்கவிட்டால் தான் அழகு என்பது அவருக்குத் தெரியும். அதனால் அந்தத் தச்சரை சற்றுமேலே சற்று கீழே’ ‘இன்னும் வலது பக்கம்’ அவ்வளவு தூரமில்லை ‘ சற்று இடது பக்கம்’ ‘இன்னும் கொஞ்சம் மேலே’. என்று சரியாகப் புள்ளி வரும் வரை விடவில்லை . சரியான மையம் வந்ததும் இதுதான் சரியான இடம்’ ஆணியை அடி என்றார் ரிக்யூ.  தச்சருக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. மாஸ்டர் உண்மையிலேயே சரியான மையத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறாரா? இல்லை நம்மிடம் அப்படி நடிக்கிறாரா? என்று . எனவே சரியான மையத்தைத் தான் மறந்துவிட்டது போலக் கையை மாற்றி இதுதானே நீங்கள் சொன்ன இடம்?’ என்று மாறி மாறிக் காட்டினார். ஆனால் ரிக்யூவினுடைய அநுமானம் (sense of proportion) சரியாக இருந்த காரணத்தால் அந்தத் தச்சர் சரியான இடத்தில், தான் ஏற்கனவே காட்டிய மையத்தில் ஆணியை வைத்த பிறகு தான் ‘ரிக்யூ’ சம்மதம் தெரிவித்தார். அந்த மகா தச்சர் (Master Carpenter) அசந்து போனார். இது வாழ்க்கைக்கும் பொருந்தும் – படிப்பதற்கும் பொருந்தும்.

உற்று நோக்கினால் போதும் விடுபட்டுப்போகாது

          விவேகானந்தர் அமெரிக்கா சென்றபோது ஒரு கல்லூரிக்குச்  செல்ல நேர்ந்தது. அங்கே மாணவர்கள் முட்டை ஓட்டைத் தண்ணீரில் மிதக்க வைத்துக் குறி  தவறாமல்  சுடுவதற்குப் பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் யாருமே  சரியாகச்  சுட  முடியவில்லை.  இதைக் கண்டதும் விவேகானந்தர் சிரித்தார் பெரிதாகச் சிரிக்கிறீர்களே, உங்களால் இது முடியுமா” என்று அந்த இளைஞர்கள் அவரைப் பார்த்துக் கோபமாகக் கேட்டார்கள். முயற்சி செய்து பார்க்கிறேன்” என்று கூறித் துப்பாக்கியை வாங்கிக் குறிபார்த்தார்.  முதல் முறையே ஓடு தூள் தூளானது. உங்களுக்குத் துப்பாக்கி சுடுவதில் மிகுந்த பயிற்சி இருக்கவேண்டும்” என்று அந்த மாணவர்கள் சொன்னார்கள். “இப்போதுதான் துப்பாக்கியை முதல் முறையாகத் தொடுகிறேன்” என்றார் விவேகானந்தர். “எப்படி இது சாத்தியமாயிற்று” என்று அந்த மாணவர்கள் வியப்பிலாழ்ந்தார்கள். ”மிகவும் எளிது,  நான் விழிப்புணர்வுடன் இருந்தேன். என் கவனம் முழுவதும் அந்த முட்டை ஓடு மீதே இருந்தது. ஆனால், உங்கள் கவனம் இலக்கை அடைந்தால் கிடைக்கக்கூடிய  பரிசையும், பாராட்டையும், எண்ணிச் சிதைந்திருந்தது. அதனால் முடியாமல் போயிற்று” என்று கூறினார்.

முதலில் திட்டமிடுங்கள்

          திட்டமிடுவது எந்த ஒரு பணிக்கும் அத்தியாவசியமானதாக இருக்கிறது. சரியாகத் திட்டமிட்டாலே பணி பாதி நிறைவேறியதற்குச் சமம்.

மாற்றி மாற்றிப் படியுங்கள்

        தேர்வுக்கு எவ்வாறு நேரத்தை ஒதுக்கிப் படிப்பது எந்த நாளில் எந்தப் பாடத்தைப் படிப்பது என்பவற்றை எல்லாம் நாள் வாரியாகக் குறித்து ஒரு அட்டவணை தயாரிக்கவேண்டும். ஒரே பாடத்தைத் தொடர்ந்து வாசிக்காமல், மாற்றி மாற்றி வாசிக்குமாறு  அட்டவணையைத்  தயாரிக்க வேண்டும். ஒரே பாடத்தை நாள் முழுவதும் வாசிக்கும்போது அயற்சி ஏற்படுகிறது. நேரம் செல்லச் செல்ல கிரகிக்கின்ற தன்மை குறைகிறது. தொடர்ந்து கணிதம் என்றால் அலுப்பு ஏற்படுகிறது சர்க்கரைப் பொங்கலாக இருந்தாலும், மூன்று வேளையும் சாப்பிட முடியாதல்லவா? கணிதத்தைப் பயிலும்போது மூளையில் ஒரு பகுதிக்கு வேலை கிடைக்கிறது.  நிலவியலைப் படிக்கும்போது  இன்னொரு பகுதி  செயலாற்றுகிறது. ஒரே பாடத்தைத் தொடர்ந்து  வாசிக்கும் போது இன்னொரு சங்கடமும் ஏற்படுகிறது. அடுத்த பாடத்தை வாசிக்கும் போது முன்பு வாசித்தவை எல்லாம் மறந்து போன  மாதிரி  பிரமை ஏற்படுகிறது.

         நான்காவதாக, உற்று நோக்குதல், உற்றுநோக்குகிற தன்மை தயாரிப்பதற்கும் தேவை. தேர்வு எழுதுவதற்கும் தேவை. முக்கியமான செய்திகள் விடுபட்டுப் போகாமல் இருக்கவும், கேள்விகளைச் சரியாகப் புரிந்து கொள்ளவும் உற்று நோக்குதல் தேவை. பழங்காலத்தில் நடந்த ஒரு கதை இது.

இலக்கைத் தீர்மானிப்பது

          ஓர் இளைஞன் தன்னை ஒரு மடாலயத்தில் இணைத்துக் கொள்ள விரும்பி அதன் தலைவரிடம் சென்று விண்ணப்பித்தான். அந்த மடாலயத் தலைவர் ‘நான் உன்னைச் சேர்ப்பதற்கு ஒரு நிபந்தனை. என்னுடைய சீடன் ஒருவனுடன் நீ சதுரங்கம் விளையாட வேண்டும். அதில் தோற்பவர் தலை துண்டிக்கப்படும். நீ வென்றால்  சீடனாக அனுமதிக்கப்படுவாய்’ என்றார். போட்டி தொடங்கியது. இளைஞன் ஒவ்வொரு காயையும் விழிப்புணர்வுடன் நகர்த்தினான். கொஞ்சம் கொஞ்சமாக இலக்கை அடைந்தே விடலாம் என்கிற நிலை ஏற்பட்டது. அதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கும் புலப்பட ஆரம்பித்தது. அதற்குப் பிறகு அவன் தோல்வியுறுவதற்காக விளையாட ஆரம்பித்தான்.

          வேண்டுமென்றே தன் காய்களை வெட்டுக் கொடுத்தான். மடத் தலைவர் ”போதும், விளையாட்டை நிறுத்துங்கள். நீ சீடனாக அனுமதிக்கப்படுகிறாய்” என்றார்.  விழிப்புணர்வும் வெற்றியும் ஒரே சாதனத்தின் இரண்டு பரிமாணங்களாகப் பரிமளிக்கின்றன.

          படிக்கும் போது குத்து மதிப்பாய்ப் படிப்பதற்கும், சரியான புரிந்து கொள்ளுதலுக்குமான வேறுபாடு இது.  குத்து மதிப்பாகப் படிப்பவன் கேள்வியைத் திருப்பிப் போட்டால், சற்று மாற்றிக் கேட்டால், குழப்பமடைந்து இலக்கை நழுவவிடுகிறான். புரிந்து கொள்ளலோடு , நிகழ்த்திக் காட்டுபவனுக்கு எப்படிக் கேட்டாலும், எத்தனை பேர் கேட்டாலும் தெளிவு மட்டுமே உண்டு – குழப்பமேதும் இல்லை .

          குறைந்த நாட்களே தேர்வுக்கு இருக்கின்றன. நாம் எப்படிப் படிப்பது? எதைப் படிப்பது? எவ்வளவு நேரம் படிப்பது? போன்ற கேள்விகள் உங்கள் மனத்தில் அடிக்கடி தோன்றும்.

           கட்டைவிரலின் ரேகைகள் ஆளுக்கு ஆள் மாறுபாடு அடைவதைப் போலத்தான் படிக்க வேண்டிய அணுகுமுறையும், நபருக்கு நபர் வேறுபாடு அடைகிறது.

         படிக்கின்ற நேரத்தையும், படிக்க வேண்டிய பாடங்களின் தன்மையையும், ஒவ்வொருவரும் தங்களைச் சுயபரிசோதனை செய்துகொண்டு (introspection) அதன்மூலம் தான் தீர்மானிக்க முடியும்.

DOWNLOAD PDF – Click Here

Leave a Comment